நிதி அமைச்சகம்
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் – அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான தேசிய இயக்கத்தின் வெற்றிகரமான அமலாக்கத்தின் எட்டு ஆண்டுகள் நிறைவடைகிறது
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின் 46.25 கோடிக்கும்
அதிகமான பயனாளிகள் ரூ.1,73,954 கோடி அளவுக்கு கணக்குகளை தொடங்கியுள்ளனர்
நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது
மக்களை மையமாகக் கொண்ட அரசின் பொருளாதார முன்முயற்சிகளுக்குப் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் அடித்தளமாக மாறியுள்ளது: நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கராத்
2015 மார்ச் மாதத்தில் 14.72 கோடி என்பதிலிருந்து 10.8.2022 நிலவரப்படி பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் 3 மடங்கு அதிகரித்து 46.25 கோடியாக உள்ளது
மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67 சதவீதம் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன
மக்கள் நிதித் திட்ட கணக்கு வைத்திருப்போருக்கு 31.94 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன 2022 ஜூன் மாதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் அரசிடமிருந்து 5.4 கோடி மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போர் நேரடி பயன்பரிமாற்றத்தை பெற்றுள்ளனர்
Posted On:
28 AUG 2022 7:40AM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கும் நிதிநிலையை அளிக்கவும், சமூக – பொருளாதார ரீதியில் புறக்கணிக்கப்பட்ட வகுப்பினருக்கும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் ஆதரவு அளிக்கவும் மத்திய நிதியமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் மூலம் சமுத்துவத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் நாம் அடைய முடியும். குறைந்த வருவாய் பிரிவினர், அடிப்படையான வங்கி சேவைகள் கூட கிடைக்காத நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு குறைந்த செலவிலும் உரிய நேரத்திலும் போதிய நிதி சேவைகளை வழங்குவதாக அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் விளங்குகிறது.
இந்த திட்டம் வழக்கமான நிதிமுறையின் கீழ் ஏழை எளிய மக்களின் சேமிப்புகளை கொண்டு வர வழிவகுப்பதும், கிராமங்களில் உள்ள தங்களின் குடும்பத்தினருக்கு பணம் அனுப்ப வழிவகுப்பதும் முக்கியமானதாகும். இது தவிர, இவர்களை கந்துவட்டிக்காரர்களின் பிடியிலிருந்தும் விடுவிக்கிறது. இந்த உறுதிப்பாட்டை நோக்கிய முக்கியமான முன் முயற்சிகளில் உலகிலேயே அனைவரையும் உள்ளடக்கிய மிகப் பெரிய பொருளாதார முன்முயற்சியாக பிரதமரின் மக்கள் நிதித்திட்டம் உள்ளது.
பிரதமரின் மக்கள் நிதித்தி்ட்டத்தை 2014, ஆகஸ்ட் 15 அன்று தமது சுதந்திர தின உரையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இந்த திட்டத்தை ஆகஸ்ட் 28அன்று தொடங்கி வைத்தபோது, ஏழை எளிய மக்களை விஷ சக்கரத்திலிருந்து விடுதலையை கொண்டாடும் விழாவாக அந்த நிகழ்வை வர்ணித்தார்.
பிரதமரின் மக்கள் நிதித்திட்ட 8வது ஆண்டு தினத்தையொட்டி மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தமது செய்தியில் கூறியிருப்பதாவது: “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய பெரும் முன்னெடுப்பு அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரமாகும். இது சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினரின் ஒட்டுமொத்த பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்கிறது. 2014 ஆகஸ்ட் 28க்கு பின் பிரதமரின் மக்கள் நிதித்திட்ட வெற்றி, மக்கள் நிதித்திட்ட கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள், 67சதவீதம் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் ஊரக மற்றும் சிறு நகரங்களில் உள்ளன என்பதிலும் ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத்தொகை இருப்புடன் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதிலும் பிரதிபலிக்கிறது.
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் 2018-க்கு பிறகும் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால், நாட்டின் உள்ளடக்கிய நிதி சேவை துறையில் உருவாகும் சவால்கள் மற்றும் தேவைகளை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையில் மாற்றத்தைக் காண முடிகிறது. “அனைத்து குடும்பங்கள்” என்ற நிலையிலிருந்து “தகுதியான அனைவருக்கும்” என்ற நோக்கில் கவனம் செலுத்தப்படுவதுடன், இந்தக் கணக்குகளை நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தை விரிவுபடுத்த பயன்படுத்துவதால், ரூபே கார்டு வாயிலாக டிஜிட்டல் பணப்பட்டுவாடாவும் ஊக்குவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்”.
“இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல், பாதுகாப்பற்ற நிலையில் இருந்தவர்களை பாதுகாத்தல், நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி கிடைக்கச் செய்தல் போன்ற பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பல்வேறு தரப்பினரும் கூட்டு முயற்சிகளை பின்பற்றச் செய்திருப்பதுடன், இதுவரை வங்கி சேவை கிடைக்காத பகுதிகளில் வங்கி சேவை வழங்குவதற்கும் வகை செய்துள்ளது” என்றும் நிதியமைச்சர் கூறினார்.
மேலும் நிதியமைச்சர் விடுத்துள்ள செய்தியில், “மக்கள் நிதி-ஆதார்-மொபைல் திட்டம் கணக்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பதன் வாயிலாக, உள்ளடக்கிய நிதி சேவை சூழலியலின் முக்கியத் தூண்களில் ஒன்றாக மாறியிருப்பதுடன், தகுதியுள்ள பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களில் நேரடி பணப்பரிமாற்றத்திற்கு வகை செய்துள்ளது.
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு நேரடி வருவாய் ஆதரவுக்கு உதவியதுடன், பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு திட்டத்தின்கீழ், பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களாக உள்ள பெண்களுக்கு தடையின்றி குறிப்பிட்ட காலத்தில் ஊக்கத்தொகை பரிமாற்றம் செய்ததன் மூலம், உள்ளடக்கிய நிதி சூழலில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் பலன், கொவிட்-19
பெருந்தொற்று காலத்தில் கை மேல் தெரிந்தது” என்று தெரிவித்துள்ளார். “உள்ளடக்கிய நிதி சேவைக்கு பொருத்தமான நிதியுதவிகள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு கட்டமைப்புடன் இணைந்த கட்டுமானம் அடைப்படையிலான கொள்கை சார்ந்த தலையீடு தேவை. நாட்டு மக்களுக்கு இத்திட்டத்தின் பலன் சென்றடைவதற்கான நோக்கத்தை உறுதி செய்ய பிரதமரின் மக்கள் நிதித்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த அணுகுமுறையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தை மாபெரும் வெற்றியடையச் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்ட கள அலுவலர் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி திருமதி நிர்மலா சீதாராமன் தமது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் பற்றிய தமது எண்ணங்களை வெளிப்படுத்திய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கராத், “அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை நோக்கிய பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே பெரும்பாலோரைச் சென்றடைந்துள்ள முன்முயற்சிகளில் ஒன்றாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவும் என்பதால் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரம் அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இது ஏழைகளின் சேமிப்பை முறைசார்ந்த நிதி அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான வழியையும் தங்களின் குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்புவதற்கான வழியையும் ஏற்படுத்துகிறது. மேலும் கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கிறது" என்றார்.
“பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் 8வது ஆண்டு விழாவில், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. மக்களை மையமாகக் கொண்ட அரசின் பொருளாதார முன்முயற்சிகளுக்குப் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் அடித்தளமாக மாறியுள்ளது:. நேரடிப் பயன் பரிமாற்றங்கள், கொவிட்-19 நிதி உதவி, பிஎம் -கிசான், மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட ஊதியங்கள், ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீடு என எதுவாக இருந்தாலும், முதல் நடவடிக்கையாக வயது வந்த ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கைத் தொடங்குவதாக உள்ளது. இதனால் பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் ஏறத்தாழ நிறைவுபெற்றுள்ளது" என்று டாக்டர் கராத் கூறினார்.
"வங்கிகள் இந்தத் தருணத்தில் சிறப்பாக செயல்படும் என்றும் இந்த தேசிய முயற்சிக்குக் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்யும் என்றும் நான் நம்புகிறேன், மேலும் வயது வந்தோர் ஒவ்வொருவரும் அனைவரையும் உள்ளடக்கிய அரசின் பொருளாதார முயற்சிகளின் கீழ் வருவதை உறுதிசெய்ய நீங்களாகவே உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்" என்று டாக்டர் கராத் கூறினார்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பதன் வாயிலாக, இத்திட்டத்தின் இதுவரையிலான சாதனைகள் மற்றும் முக்கிய அம்சங்களை திரும்பிப் பார்ப்போம். பின்னணி பிரதமரின் மக்கள் நிதித்திட்டம், நிதிச் சேவைகள், குறிப்பாக வங்கி / சேமிப்புகள் & முதலீட்டு கணக்குகள், பணம் செலுத்துதல், கடன்வசதி, காப்பீடு, ஓய்வூதியம் போன்றவை குறைந்த செலவில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான உள்ளடக்கிய நிதி சேவையின் தேசிய இயக்கமாகத் திகழ்கிறது.
1, குறிக்கோள்கள்:
- நிதியுதவிகள் மற்றும் சேவைகள் குறைந்த செலவில் கிடைப்பதை உறுதி செய்தல்
- செலவைக் குறைத்து, பயனாளிகளை அதிகரிக்கச் செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
2. திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள்
- வங்கி சேவை பெறாதவர்களுக்கு வங்கி சேவை அளித்தல் – குறைந்தபட்ச காகித பயன்பாட்டில் அடிப்படை சேமிப்பு வங்கி முதலீட்டு கணக்கு தொடங்குதல், தளர்த்தப்பட்ட கேஒய்சி விதிமுறை, இ-கேஒய்சி, கணக்கு தொடங்குவதை ஒரு பிரச்சார இயக்கமாக மேற்கொள்ளுதல், கையிருப்பு இல்லாத மற்றும் கட்டணமில்லா சேவை அளித்தல்
- பாதுகாப்பற்றவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் – பணம் எடுப்பதற்கும், வணிக நிறுவனங்களில் பணம் செலுத்துவதற்கும், ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டுடன் கூடிய தனித்தனி டெபிட் கார்டு வழங்குதல்
- நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்களுக்கு நிதியுதவி வழங்குதல் - குறு காப்பீடு, மிகைப்பற்று, குறு ஓய்வூதியம் & குறு கடனுதவி போன்ற பிற நிதி சேவைகள்
3. தொடக்க சிறப்பம்சங்கள்
இந்தத் திட்டம் கீழ்காணும் 6 தூண்களை அடிப்படையாகக் கொண்டு
தொடங்கப்பட்டது:
- உலகளாவிய வங்கி சேவைகளை அணுகுதல் – கிளை மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள்
- தகுதி வாய்ந்த அனைத்து கணக்கு தாரர்களுக்கும் ரூ.10,000/- வரை மிகைப்பற்று வசதியுடன் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு
- நிதி எழுத்தறிவு திட்டம் – சேமிப்பு, ஏடிஎம் பயன்பாடுகளை ஊக்குவித்தல், கடன் பெறுவதற்கு ஆயத்தமாக்குதல், காப்பீடு மற்றும் ஓய்வூதியங்களைப் பெறுதல், அடிப்படை செல்போன்களை பயன்படுத்தி வங்கி சேவை பெறுதல்
- கடன் உத்தரவாத நிதி உருவாக்கம் – கடன் நிலுவைகளுக்கு எதிராக வங்கிகளுக்கு சில உத்தரவாதம் அளித்தல்
- காப்பீடு – 15 ஆகஸ்ட், 2014 முதல் 31 ஜனவரி, 2015 வரை தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு ரூ.1,00,000 வரை விபத்து காப்பீடு மற்றும் ரூ.30,000 ஆயுள் காப்பீடு
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்
4. கடந்த கால அனுபவம் அடிப்படையில் பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தில் பின்பற்றப்படும் முக்கியமான அணுகுமுறை
- தொடங்கப்பட்ட கணக்குகள் அனைத்தும், வங்கிகளின் பிரதான வங்கி நடைமுறையில் உள்ள ஆன்லைன் கணக்குகள், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆஃப்லைன் கணக்கு தொடங்கும் முறைக்கு பதிலாக தொழில்நுட்ப அடிப்படையில் வணிகர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
- ரூபே டெபிட் கார்டு அல்லது ஆதார் உதவியுடனான பட்டுவாடா முறை வாயிலாக கணக்குகளை கையாளும் வசதி
- நிரந்தர – அம்ச வர்த்தகப் பிரதிநிதிகள்
- எளிதில் கையாள முடியாத கேஒய்சி நடைமுறைகளுக்குப் பதிலாக, எளிமையாக்கப்பட்ட கேஒய்சி / இ-கேஒய்சி
5. புதிய சிறப்பு அம்சங்களுடன் பிரதமரின் மக்கள் நிதித்திட்டம்
விரிவாக்கம் – சில மாறுதல்களுடன் 28.8.2018-க்கு பிறகும், விரிவான
பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது
- ‘அனைத்து குடும்பங்கள்’ என்ற நிலையிலிருந்து வங்கி கணக்கு இல்லாத அனைவருக்கும்’ என்ற நிலையை நோக்கி கவனம் செலுத்துதல்
- ரூபே அட்டை காப்பீடு – ரூபே அட்டைகளுக்கு 28.8.2018-க்கு பிறகு தொடங்கப்பட்ட பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குகளுக்கான இலவச விபத்து காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மிகைப்பற்று வசதி அதிகரிப்பு –
- மிகைப்பற்று வரம்பு ரூ.5,000-லிருந்து ரூ.10,000-ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது; ரூ.2,000 வரை மிகைப்பற்று (நிபந்தனைகளின்றி).
- மிகைப்பற்று பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 60- லிருந்து 65 ஆண்டுகளாக அதிகரிப்பு
6. பிரதமரின் மக்கள் நிதித்திட்டத்தின் விளைவு
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், மக்கள் நலன்சார்ந்த பொருளாதார முன் முயற்சிகளுக்கு அடிக்கல் ஆகும். நேரடி பணப்பரிமாற்றமானாலும் சரி, கொவிட்-19 நிதியுதவி, பிரதமரின் கிசான் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சம்பள உயர்வு, ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகள் ஆனாலும் சரி, இந்த அனைத்து திட்டங்களுக்கான முதல்படி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்குவது என்பது ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது. மார்ச்’14 முதல் மார்ச்’20 வரையிலான காலத்தில் தொடங்கப்பட்ட கணக்குகளில் இரண்டில் ஒன்று பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்காகும். நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பத்து நாட்களுக்குள், பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின்கீழ் கணக்கு வைத்துள்ள சுமார் 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டது.
மக்கள் நிதித் திட்டம், ஏழைகள் தங்களது சேமிப்புகளை முறையான நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வழிவகை ஏற்படுத்தி இருப்பதுடன், கிராமங்களில் உள்ள இவர்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதற்கும், கந்துவட்டிக் காரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கவும் வகை செய்துள்ளது. பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க உதவியிருப்பதுடன், இந்தியாவின் நிதி கட்டமைப்பையும் விரிவுபடுத்தி இருப்பதோடு, தகுதிவாய்ந்த அனைவருக்கும் உள்ளார்ந்த நிதி சேவைகளையும் வழங்கியுள்ளது.
தற்போதைய கொவிட்-19 காலத்தில், நேரடி பணப்பரிமாற்றம் மூலம் விரைவான மற்றும் தடையற்ற பணப் பரிவர்த்தனையை நாம் கண்டதுடன், சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு அதிகாரமளித்து நிதிப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. நேரடி பணப்பரிமாற்றத்தின் முக்கிய அம்சம் யாதெனில், பிரதமரின் மக்கள் நிதி கணக்குகள், அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரிய பயனாளியை சென்றடைவதுடன், அரசின் நடைமுறைகளில் காணப்பட்ட தவறுகளையும் தடுத்துள்ளது.
7. பிரதமரின் மக்கள் நிதித் திட்ட சாதனைகள் – 10 ஆகஸ்ட்’22 வரை:
a) பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள்
- 10 ஆகஸ்ட்’22 வரையிலான பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகளின் மொத்த எண்ணிக்கை: 46.25 கோடி; மக்கள் நிதி கணக்குதாரர்களில் 55.59% (25.71 கோடி) பெண்கள் மற்றும் 66.79% மக்கள் நிதி கணக்குகள் கிராமப்புற மற்றும் பேரூர் பகுதிகளில் தொடங்கப்பட்டவை.
- திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டு காலத்தில் 17.90 கோடி பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
- பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் மார்ச்’15-ல் 14.72 கோடி என்ற அளவிலிருந்து 10.08.2022-ல் 46.25 கோடி அளவிற்கு மும்முடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது, அனைவரையும் உள்ளடக்கிய நிதித்திட்டத்தின் வெற்றிகரமான பயணம் என்பதில் சந்தேகமில்லை.
b) செயல்பாட்டில் உள்ள பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் செயல்பாட்டில் உள்ள பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகள் (கோடியில்)
- ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பரிவர்த்தனையும் வாடிக்கையாளரால் மேற்கொள்ளப்படவில்லை எனில், அது செயலற்ற கணக்காக கருதப்படும்.
- ஆகஸ்ட்’22-ல் மொத்தமுள்ள 46.25 கோடி பிரதமரின் நிதித் திட்ட கணக்குகளில், 37.57 கோடி (81.2%) செயல்பாட்டில் உள்ளன.
- 8.2% பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குகள் மட்டுமே கையிருப்பு ஏதுமில்லாத கணக்குகளாக உள்ளன.
c) பிரதமரின் மக்கள் நிதித் திட்டக் கணக்கின் கீழ் பெறப்பட்ட முதலீடுகள்-
பிரதமரின் மக்கள் நிதித் திட்ட முதலீடுகள்(ரூ.கோடியில்)
- பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின்குழ் பெறப்படட மொத்த முதலீட்டுக் கையிருப்பு, ரூ.1,73, 954 கோடி
- முதலீட்டுத் தொகை 7.60 மடங்கும், கணக்குகளின் எண்ணிக்கை 2.58 மடங்கும், (ஆக. ‘22/ஆக. ’15)அதிகரிப்பு
d) பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்கில் உள்ள சராசரி முதலீடு
ஒவ்வொரு கணக்கிலும் உள்ள முதலீடு (ரூபாயில்)
- ஒவ்வொரு கணக்கிலும் சராசரி முதலீடு ரூ.3,761
- ஒவ்வொரு கணக்கிலும் சராகரி முதலீடு ஆக. ’15-ல் இருந்ததைவிட 2.9மடங்கு அதிகரித்துள்ளது
- சராசரி முதலீடு அதிகரித்திருப்பது, இந்தக் கணக்கின் பயன்பாடு அதிகரித்திருப்பது மற்றும் கணக்குதாரர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்கான அடையாளம் ஆகும்
e) பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட ரூபே கார்டு
பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தில் வழங்கப்பட்ட ரூபே டெபிட் கார்டுகள்(கோடியில்)
- பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ரூபே கார்டுகள் 31.94கோடி
- ரூபே கார்டுகள் எண்ணிக்கை & அவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது
8. மக்கள் நிதி பார்வையாளர்கள் செயலி
நாட்டில் வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்கள், வங்கி நண்பர்கள், தபால் அலுவலகங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அறிந்துகொள்வதற்கான, மக்கள் நலன் சார்ந்த சேவை வழங்க செல்போன் செயலி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்புமையங்கள், ஜிஐஎஸ் செயலியில் இடம்பெற்றுள்ளன. மக்கள் நிதி பார்வையாளர் செயலி-யில் உள்ள வசதிகளை தேவை மற்றும் சாமான்ய மக்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். இந்த செயலியின் வலைதள பதிப்பை http://findmybank.gov.in என்ற இணைப்பில் காணலாம்.
இந்த செயலி, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் வங்கி சேவை இல்லாத கிராமங்களை அடையாளங்காண பயன்படுத்தப்படுவதுடன், அடையாளங்காணப்பட்ட இந்த கிராமங்களின் பட்டியல், வங்கிக் கிளை தொடங்குவதற்காக, சம்பந்தப்பட்ட மாநில அளவிலான வங்கியாளர் குழுவால் பல்வேறு வங்கிகளுக்கு வழங்கப்படும். இதுபோன்ற முயற்சிகளால், இத்தகைய கிராமங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
ஜன்தன் பார்வையாளர் செயலியில், 5கி.மீ சுற்றளவில் வங்கி சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களின் எண்ணிக்கை
9. நேரடி பணப்பரிமாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்தல்
வங்கிகள் தெரிவித்துள்ளபடி, பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்கள் சுமார் 5.4கோடி பேர், பல்வேறு திட்டங்களின் கீழ் அரசின் நேரடி பணப்பரிமாற்ற பலன்களைப் பெற்றுள்ளனர். தகுதிவாய்ந்த பயனாளிகள், நேரடிப் பணப்பரிமாற்ற திட்ட பலன்களை உரிய காலத்தில் பெறுவதை உறுதி செய்ய, நேரடிப் பணப்பரிமாற்ற இயக்கம், இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம், வங்கிகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் ஆலோசனையில், நேரடி பணப்பரிமாற்றத்தில் தவிர்க்கப்படக்கூடிய தோல்விகளை அடையாளங்காண்பதில், நிதியமைச்சகம் தீவிரப் பங்களிப்பை வழங்கி வருகிறது. இது தொடர்பாக, வங்கிகள் மற்றும் தேசிய பணப்பட்டுவாடா கழகத்துடன் அடிக்கடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி உண்ணிப்பாகக் கண்காணித்து வருவதால், தவிர்க்கப்படக்கூடிய காரணங்களால் நேரடிப் பணப்பரிமாற்றத்தில் ஏற்படக்கூடிய தோல்விகளின் சதவீதம், மொத்த நேரடிப் பணப் பரிமாற்ற தோல்வியின் அளவில் 13.5%-லிருந்து (19-20நிதியாண்டில்) 9.7%(21-22 நிதியாண்டில்) ஆகக் குறைந்துள்ளது.
10. டிஜிட்டல் பரிவர்த்தனைகள்:
பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின்கீழ், ஜுன்’22 நிலவரப்படி, 31.94 கோடிக்கு மேற்பட்ட ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 61.69லட்சம் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் நிறுவப்பட்டுள்ளதோடு, யுபிஐ போன்ற நடமாடும் பணப்பட்டுவாடா நடைமுறைகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம், மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2016-17 நிதியாண்டில் 978 கோடியாக இருந்த நிலையில், 2021-22 நிதியாண்டில் 7,195 கோடியாக அதிகரித்துள்ளது. யுபிஐ நிதிப் பரிவர்த்தனைகளின் மொத்த எண்ணிக்கையும், 2016-17ல் 1.79 கோடி என்ற அளவிலிருந்து 2021-22 நிதியாண்டில் 4,596 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, பாயின்ட் ஆப் சேல் கருவிகள் மற்றும் மின்னணு-வர்த்தகம் வாயிலான ரூபே கார்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், 2016-17ல் 28.28 கோடி என்ற அளவிலிருந்து 2021-22 நிதியாண்டில் 151.64 கோடியாக அதிகரித்துள்ளது.
11. செல்ல வேண்டிய பாதை
- குறு நிதித் திட்டத்தின்கீழ், பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களை சேர்ப்பதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் தகுதிவாய்ந்த கணக்குதாரர்கள், பிரதமரின் ஜீவன்ஜோதி பீம யோஜனா, பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்கப்படுவார்கள். இந்த தகவலை, வங்கிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
- நாடு முழுவதும் பணம் பெறுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதன் வாயிலாக, பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களிடையே, ரூபே டெபிட் கார்டு பயன்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பட்டுவாடா ஊக்குவிக்கப்படுகிறது.
- நெகிழ்வு தொடர் வைப்பு போன்ற குறு-கடன் மற்றும் குறு முதலீடுகளை மேற்கொள்ள, பிரதமரின் மக்கள் நிதித் திட்ட கணக்குதாரர்களை தொடர்புகொள்வது மேம்படுத்தப்பட்டுள்ளது.
*******
(Release ID: 1854968)
Visitor Counter : 1046
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam