பிரதமர் அலுவலகம்
பானிபட்டில் 2-ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
“உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு இணையானது – உயிரி எரிபொருள் நமக்கு பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எரிபொருள்”
“அரசியல் சுயநலம் மற்றும் குறுக்கு வழி அரசியல் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண உதவாது”
“சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தற்சார்பு அடைவதைத் தடுக்கும், நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும்”
“அடுத்த சில ஆண்டுகளில் நாட்டிலுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள், குழாய்வழி எரிவாயு இணைப்பைப் பெறும்”
Posted On:
10 AUG 2022 6:20PM by PIB Chennai
உலக உயிரி எரிபொருள் தினமான இன்று, ஹரியானா மாநிலம் பானிபட்டில் அமைக்கப்பட்டுள்ள 2-ம் தலைமுறை (2ஜி) எத்தனால் ஆலையை பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் திரு நரேந்திர சிங் தோமர், திரு ஹர்தீப் சிங் பூரி, திரு ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உலக உயிரி எரிபொருள் தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்த எத்தனால் ஆலை ஒரு தொடக்கம் என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆலை, தில்லி, ஹரியானா மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் என்றார். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் அபார செயல்பாட்டிற்காக ஹரியானா மாநிலத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இயற்கையை வழிபடும் தன்மை கொண்ட நம்மைப் போன்ற நாடுகளில், உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு இணையாகக் கருதப்படுகிறது என பிரதமர் கூறினார். நமது விவசாய சகோதர சகோதரிகள் இதனை புரிந்து கொள்வார்கள். நம்மைப் பொறுத்தவரை உயிரி எரிபொருள் என்பது பசுமை எரிபொருளாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எரிபொருள் என்று பொருள்படும். இந்த நவீன ஆலை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், நெல் மற்றும் கோதுமை பெருமளவில் சாகுபடி செய்யப்படும் ஹரியானா மாநில விவசாயிகள், தங்களது பயிர் கழிவுகள் மூலமும் லாபம் பெறலாம்.
பானிபட் உயிரி எரிபொருள் ஆலை, பயிர் கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்தும். இது பல்வேறு பலன்களை அளிக்க வகை செய்யும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். முதல் அம்சம் யாதெனில், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் வலியிலிருந்து பூமித்தாய் விடுவிக்கப்படுவார். இரண்டாவது அம்சம், பயிர்க் கழிவுகளை அகற்றுவது மற்றும் அவற்றை அப்புறப்படுத்த புதிய நடைமுறைகள் உருவாவதுடன், அவற்றை எடுத்துச் செல்ல புதிய போக்குவரத்து வசதிகள் கிடைப்பதுடன், புதிய உயிரி எரிபொருள் ஆலைகள் தற்போது இந்த கிராமங்களில் புதிய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும். மூன்றாவது அம்சம், விவசாயிகளுக்கு பெரும் சுமையாக, கவலை அளிப்பதாக இருந்த பயிர்க்கழிவுகள் தற்போது அவர்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர வகை செய்யும். நான்காவது அம்சம், காற்று மாசுபாடு குறைவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்களிப்பு அதிகரிக்கும். ஐந்தாவது அம்சம் யாதெனில், நாட்டிற்கு மாற்று எரிபொருள் கிடைக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற ஆலைகள் அமைக்கப்படுவது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அரசியல் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை பின்பற்றும் மனப்பான்மை உள்ளவர்களால், எந்தவொரு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வுகாண முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். குறுக்கு வழியை பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைத்தட்டல் மற்றும் அரசியல் ஆதாரங்களை பெறலாமே தவிர, பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. நமது அரசு குறுக்கு வழிகளை பின்பற்றுவதற்கு பதிலாக, பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாணும் பணியை மேற்கொண்டுள்ளது. பயிர்க்கழிவுகள் தொடர்பாக பல ஆண்டுகளாக ஏராளமான தகவல்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், குறுக்கு வழி மனப்பான்மை கொண்டவர்கள் இதனை தீர்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு விரைவான முறையில் தீர்வுகாண மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். ‘பராலி’ எனப்படும் பயிர்க்கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உழவர்-உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது, பயிர்க்கழிவுகளை கையாளும் நவீன எந்திரங்களுக்கு 80 சதவீத மானியம் வழங்கப்படுவதுடன், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன ஆலை, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வழிவகை செய்யும் என்றும் அவர் கூறினார். “பயிர்க்கழிவுகளை எரித்ததால், அவப்பெயரை சம்பாதித்த விவசாயிகள், தற்போது உயிரி எரிபொருள் உற்பத்தி மற்றும் தேச நிர்மாணத்திற்கு பங்களிப்பை வழங்குகிறோம் என்று பெருமிதம் அடைகின்றனர்”. மாட்டுச்சாண திட்டம் விவசாயிகளுக்கு மாற்று வழியில் வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகள் தொடர்வதாகக் குறிப்பிட்ட பிரதமர், புதிய உர ஆலைகள், நானோ உரம், சமையல் எண்ணெய்க்கான புதிய இயக்கங்கள் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோலில் எத்தனாலை கலப்பதன் காரணமாக கடந்த 7-8 ஆண்டுகளில், நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருந்த சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. எத்தனால் கலப்பு மூலம் இதே அளவு தொகை விவசாயிகளுக்கு சென்றுள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது, இந்த உற்பத்தி சுமார் 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.
2014 வரை சுமார் 14 கோடி சமையல் எரிவாயு(எல்.பி.ஜி) இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி அளவினர், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் சமையல் அறை புகையில் சிக்கித்தவித்து வந்தனர். இதனால் சகோதரிகளுக்கு ஏற்பட்டு வந்த சுகாதார பாதிப்புகள் குறித்து இதற்கு முன்பு கவனம் செலுத்தப்படவில்லை. உஜ்வாலா திட்டத்தின்கீழ் மட்டும் ஏழைப் பெண்களுக்கு சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். “தற்போது நாம் நாட்டில் ஏறத்தாழ 100% சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். 14 கோடி இணைப்புகளிலிருந்து நாட்டில் தற்போது சுமார் 31 கோடி இணைப்புகள் உள்ளன” என்றும் அவர் கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, 800 என்ற அளவில் மட்டுமே இருந்த சிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கை 4.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. “தற்போது நாம் 75-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் வேளையில், அடுத்த சில ஆண்டுகளில், நாட்டில் உள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் வழி எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.
அரசியலில் சுயநலம் இருந்தால், இலவச பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதாக யார் வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார். அதுபோன்ற நடவடிக்கைகள் நமது குழந்தைகளின் உரிமைகளைப் பறிப்பதோடு, நாடு தற்சார்பு அடைவதையும் தடுக்கும். இதுபோன்ற சுயநல கொள்கைகளால், நேர்மையாக வரி செலுத்துவோரின் சுமையும் அதிகரிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தெளிவான நோக்கம் மற்றும் உறுதிப்பாடு தேவை. இதற்கு கடின உழைப்புடன் சரியான கொள்கை மற்றும் பெருமளவிலான முதலீடுகளும் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், எத்தனால் ஆலை, உயிரி எரிவாயு ஆலை மற்றும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுவிடும் என்றும் பிரதமர் தெரிவித்தார். “நாம் அந்த நிலையில் இல்லை என்றாலும், இந்த நாடு இங்கேயே உள்ளது, இந்த நாட்டில் உள்ள குழந்தைகள், இங்கேயே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் இதே மனப்பான்மையுடன்தான் பணியாற்றியுள்ளனர். ஒரு தேசம் என்ற முறையில் அதுபோன்ற மனப்பான்மை வளர்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என நாம் உறுதியேற்க வேண்டும். இது நாட்டின் கூட்டுப் பொறுப்பாகும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமிர்த பெருவிழா கால கட்டத்தில், நாடு முழுவதும் மூவண்ணம் தீட்டப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், ஏதோவொன்று நடந்துள்ளது என்று நாட்டின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்தப் புனிதமான சம்பவத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், நமது மன உறுதிகொண்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற நபர்களின் மனப்பான்மையை புரிந்துகொள்வது அவசியம். நம் நாட்டில் உள்ள சிலர் இதுபோன்ற எதிர்மறை சுழல் மற்றும் விரக்தியில் சிக்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியபிறகு, அதுபோன்ற நபர்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. அதுபோன்ற விரக்தியில் இந்த நபர்கள் கருப்பு தந்திரத்தை நோக்கி செல்கின்றனர். 5 ஆகஸ்ட் அன்று நிகழ்ந்த சம்பவங்கள் இதுபோன்ற கருப்புத் தந்திர மனப்பான்மையை பரப்பும் நிகழ்ச்சி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். கருப்பு உடைகள் அணிவதன் மூலம் அவர்களது விரக்தியான காலகட்டம் முடிவுக்கு வரும் என அவர்கள் நினைத்தால், கருப்பு தந்திரம் மற்றும் அவர்களது மூடநம்பிக்கை பற்றி அறியாதவர்கள் என்பதோடு, அவர்கள் மீது மக்களுக்கு இனி நம்பிக்கை ஏற்படாது என்பதையும் அறியாதவர்கள் ஆவர் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவுசெய்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1850585
***************
(Release ID: 1850627)
Visitor Counter : 273
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam