பிரதமர் அலுவலகம்

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 12 JUL 2022 7:57PM by PIB Chennai

பாட்னாவில் இன்று நடைபெற்ற பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு நினைவாக வைக்கப்பட்டுள்ள சதாப்தி ஸ்ம்ருதி தூணை பிரதமர் திறந்து வைத்தார். பீகார் சட்டப்பேரவை அருங்காட்சியகத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காட்சியகங்கள், பீகார் ஜனநாயகத்தின் பண்டைய வரலாற்றையும், தற்போது ஜனநாயகம்  அடைந்துள்ள வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன. இங்கு 250 பேர் அமரக் கூடிய மாநாட்டு அரங்கு உள்ளது. பீகார் சட்டப்பேரவையின் விருந்தினர் மாளிகைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பீகார் ஆளுநர் திரு. பாஹு சவுஹான், முதல்வர் திரு. நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பீகாரை அதிகம் நேசிப்பவர்களுக்கு, அதேஅளவு அன்பை திரும்ப செலுத்துவது பீகாரின் இயல்பு என்று தெரிவித்தார். “பீகார் சட்டப்பேரவைக்கு சென்ற நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமையை நான் இன்று பெற்றுள்ளேன். இந்த அன்புக்காக பீகார் மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பிரதமர் கூறினார். நுற்றாண்டு நினைவு தூண், பீகார் மக்களின் எண்ணற்ற ஆசைகளை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறினார். 
பீகார் சட்டப்பேரவையின் புகழ்மிக்க வரலாறுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்த பேரவையில், தொடர்ச்சியாக மிகப்பெரிய மற்றும் துணிச்சலான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். சுதந்திரம் பெறுவதற்கு முன், ஆளுநர் சத்யேந்திர பிரசன்ன சின்ஹா, உள்நாட்டு தொழில்களை ஊக்குவிக்கவும், சுதேசியை ஏற்று கொள்ளவும் இந்த பேரவையில் அழைப்பு விடுத்தார். சுதந்திரம் அடைந்தப் பிறகு, ஜமீன்தாரி முறை ஒழிப்பு சட்டம் இந்த பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, நிதிஷ்குமார் அரசு, பீகார் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றியது.  பஞ்சாயத்துகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாக பீகாரை உருவாகியுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார். “சமூகத்தில் ஜனநாயகத்தின் சமமான பங்களிப்பு மற்றும் சம உரிமைகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த பேரவை ஒரு எடுத்துக்காட்டு” என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

***********



(Release ID: 1841137) Visitor Counter : 133