பிரதமர் அலுவலகம்
சுவாமி ஆத்மாஸ்தானந்தாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பிரதமர் உரை
சுவாமி அவர்களின் இயக்கத்தை பெருவாரியான மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான புகைப்பட சுயசரிதை மற்றும் ஆவணப்படத்தின் வெளியீட்டிற்காக பிரதமர் மகிழ்ச்சி தெரிவிப்பு
“சமுதாயத்திற்காகப் பணியாற்றி, சமூக நலனுக்காக வாழ்வதே சன்னியாசத்தின் பொருள்”
“சுவாமி விவேகானந்தர் சன்னியாசத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை நவீன வடிவத்திற்கு மாற்றினார்”
“வேகமாக பணியாற்றுவது, புதிய அமைப்புகளை உருவாக்குவது, நிறுவனங்களை வலிமைப்படுத்துவது முதலியவை ராமகிருஷ்ண இயக்கத்தின் கோட்பாடுகள் ஆகும்”
“இந்தியாவின் துறவு பாரம்பரியம், 'ஒரே பாரதம், உன்னத பாரதத்தை’ பறைசாற்றுகிறது”
“ராமகிருஷ்ண இயக்கத்தின் துறவிகளை தேச ஒற்றுமையின் வழிகாட்டிகளாக ஒவ்வொருவரும் அறிவார்கள்”
“காளி அன்னையின் தொலைநோக்குப் பார்வை பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருந்த துறவிகளுள் ஒருவர், சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர்”
“டிஜிட்டல் கட்டணமுறைகள் துறையில் உலக நாடுகளின் தலைமையாக இந்தியா வளர்ந்துள்ளது”
Posted On:
10 JUL 2022 11:27AM by PIB Chennai
சுவாமி ஆத்மாஸ்தானந்தாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார்.
சுவாமி ஆத்மாஸ்தானந்தாவுடன் தாம் செலவிட்ட நேரம் பற்றி நினைவுகூர்ந்து, பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார். கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், 'இந்நிகழ்ச்சி பல்வேறு உணர்வுகளாலும், நினைவுகளாலும் நிறைந்துள்ளது. அவரது ஆசிகளை நான் எப்போதும் பெற்றிருப்பதுடன், அவருடன் இருக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். அவரது இறுதி தருணம் வரை அவருடன் தொடர்பில் இருந்தது எனது அதிர்ஷ்டம்', என்று கூறினார்.
சுவாமி அவர்களின் இயக்கத்தைப் பெருவாரியான மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான புகைப்பட சுயசரிதை மற்றும் ஆவணப்படத்தின் வெளியீட்டிற்காக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் பணிக்காக ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவர் பூஜ்ய சுவாமி ஸ்மரனானந்த் அவர்களை திரு மோடி மனமார வாழ்த்தினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான பூஜ்ய சுவாமி விஜ்னானந்த் அவர்களிடமிருந்து சுவாமி ஆத்மாஸ்தானந்தா எழுச்சி பெற்றதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் விழிப்புணர்வு நிலையும் ஆன்மீக ஆற்றலும் அவரிடம் தெளிவாகக் காணப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். நம் நாட்டில் துறவறத்தின் தலைசிறந்த பாரம்பரியம் குறித்தும் திரு மோடி பேசினார். வனப்ரஸ்த ஆசிரமம் என்பது துறவறத்தை நோக்கிய ஒரு படியாகும். ‘சமுதாயத்திற்காகப் பணியாற்றி, சமூக நலனுக்காக வாழ்வதே சன்னியாசத்தின் பொருள். தன்னிலையிலிருந்து சமூகத்திற்காக விரிவடைவது. ஒரு சன்னியாசிக்கு, உயிர்களுக்கு சேவை புரிவது என்பது பகவானுக்கு சேவையாற்றுவது போன்றது, உயிரினங்களில் சிவனை காண்பது என்பது உச்சநிலை’, என்றார் அவர். சுவாமி விவேகானந்தர் சன்னியாசத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை நவீன வடிவத்திற்கு மாற்றினார் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுவாமி ஆத்மாஸ்தானந்தாவும் இந்த வடிவத்திற்கு மாறியதுடன் தமது வாழ்க்கையில் அதனைக் கடைபிடித்தார். அவரது உத்தரவின்படி பேலூர் மடம் மற்றும் ராமகிருஷ்ண இயக்கத்தின் கீழ் இந்தியாவில் மட்டுமல்லாமல், நேபாளம் மற்றும் வங்கதேசத்திலும் ஏராளமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திரு மோடி கூறினார். கிராமப்புறங்களில் மக்களின் நலனுக்காக சுவாமி அயராது பணியாற்றியதையும் பிரதமர் குறிப்பிட்டார். வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்காக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சுவாமியால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களையும் திரு மோடி சுட்டிக் காட்டினார்.
ஏழை மக்களுக்கு சேவையாற்றுவது, அறிவையும், பணியையும் பரவச் செய்வது முதலியவற்றை சுவாமி வணங்கியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். வேகமாகப் பணியாற்றுவது, புதிய அமைப்புகளை உருவாக்குவது, நிறுவனங்களை வலிமைப்படுத்துவது முதலியவை ராமகிருஷ்ண இயக்கத்தின் கோட்பாடுகள் என்று பிரதமர் தெரிவித்தார். இது போன்ற துறவிகள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, மனித சமூகத்திற்கான சேவை மையங்கள் தானாக எழுகின்றன, தமது துறவு வாழ்வின் மூலம் சுவாமி இதனை நிரூபித்தார். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதி சங்கராச்சாரியார் ஆகட்டும், நவீன காலத்தின் சுவாமி விவேகானந்தர் ஆகட்டும், இந்தியாவின் துறவு பாரம்பரியம், ‘ஒரே பாரதம், உன்னத பாரதத்தை' எப்போதும் பறைசாற்றுகின்றது என்று திரு மோடி கூறினார். ராமகிருஷ்ண இயக்கத்தின் துவக்கமும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற சிந்தனையுடன் சம்பந்தப்பட்டதாகும். சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பேசுகையில், இந்த உறுதிப்பாட்டிற்காக, இயக்கத்தின் வடிவில் அவர் வாழ்ந்ததாக பிரதமர் குறிப்பிட்டார். அவரது செல்வாக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்டதோடு, அடிமைப்பட்டிருந்த யுகத்தில் தேசிய உணர்வை நாடு உணர அவரது பயணங்கள் காரணியாக இருந்ததுடன், அதில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. ராமகிருஷ்ண இயக்கத்தின் இந்தப் பாரம்பரியம், சுவாமி ஆத்மாஸ்தானந்தாவால் அவரது வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
சுவாமி அவர்களுடன் தான் செலவிட்ட நேரத்தை நினைவுகூர்ந்த பிரதமர் அவருடன் குஜராத்தி மொழியில் உரையாடியதை அதிர்ஷ்டமாக கருதினார். ஒருமுறை கட்ச்சில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுவாமி அவர்களின் வழிகாட்டுதல்களின்படி அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ‘ராமகிருஷ்ண இயக்கத்தின் துறவிகளை, தேச ஒற்றுமையின் வழிகாட்டிகளாக ஒவ்வொருவரும் அறிவார்கள். மேலும், அவர் வெளிநாடு செல்லும்போது இந்திய உணர்வை அவர் அங்கு பிரதிபலித்தார்’, என்று பிரதமர் தெரிவித்தார்.
காளி அன்னையின் பாதங்களில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், காளி அன்னையின் தொலைநோக்குப் பார்வை பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருந்த துறவிகளுள் ஒருவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்த ஒட்டுமொத்த உலகமும், மாற்றம் காணும் மற்றும் நிலையான அனைத்தும் அன்னையின் உணர்வால் வியாபித்துள்ளது. மேற்கு வங்கத்தின் காளி பூஜையின் போது இந்த உணர்வைக் காண முடிகிறது. சுவாமி விவேகானந்தர் போன்ற யுக புருஷர்களின் வடிவில் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரால் இந்த உணர்வு மற்றும் ஆற்றலுக்கு ஒளி வழங்கப்பட்டதாக பிரதமர் கூறினார். காளி அன்னை பற்றி சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்த ஆன்மீக தொலைநோக்கு சிந்தனை அவரிடம் தலைசிறந்த ஆற்றலை ஏற்படுத்தியது. ஜெகன்மாதா காளியின் நினைவாக, சுவாமி விவேகானந்தரை போன்ற ஒரு வலிமைமிக்க ஆளுமை, பக்தியில் ஒரு சிறு குழந்தையைப் போல உற்சாகமடைவார் என்று திரு மோடி தெரிவித்தார். சுவாமி ஆத்மாஸ்தானந்தாவிடம் இதே போன்ற அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றலைத் தம்மால் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நமது எண்ணங்கள் பரவலாக இருக்கும்போது நமது முயற்சிகளில் நாம் எப்போதும் தனிமையில் இல்லை என்பதை துறவிகள் உணர்த்திருப்பதாக சுவாமி ஆத்மாஸ்தானந்தாவுக்கு மரியாதை செலுத்தகையில் பிரதமர் திரு மோடி கூறினார். பூஜ்ஜிய வளங்களுடன் சிகரம் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றிய பரத வர்ஷ பூமியில் இது போன்ற எத்தனையோ மகான்களின் வாழ்க்கைப் பயணத்தை நீங்கள் காண்பீர்கள். சுவாமி ஆத்மாஸ்தானந்தாவின் வாழ்வில் இதே போன்ற நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் திரு மோடி கண்டார். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர், ஒரு துறவியால் இவ்வளவு செய்ய இயன்ற போது, 130 கோடி நாட்டு மக்களின் கூட்டு உறுதிப்பாட்டால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் இந்தியாவை உதாரணமாக கூறுகையில், டிஜிட்டல் கட்டணமுறைகள் துறையில் உலக நாடுகளின் தலைமையாக இந்தியா வளர்ந்திருப்பதாக திரு மோடி தெரிவித்தார். இந்திய மக்களுக்கு 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டிருக்கும் சாதனை பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார். எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது முயற்சிகள் நிறைவேற நீண்ட காலம் தேவைப்படாது, இடையூறுகள் நமக்கு வழிகாட்டும் என்பதை உணர்த்தும் சின்னமாக இது போன்ற உதாரணங்கள் அமைகின்றன.
மேன்மைமிகு மகான்களிடையே உரையாற்றுகையில், ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் அமைக்கப்படுவதாக பிரதமர் கூறினார். மக்களை எழுச்சி பெறச் செய்ய வேண்டும் என்றும், மனித சேவையின் உன்னத பணியில் இணைய வேண்டும் என்றும் ஒவ்வொருவரையும் திரு மோடி வலியுறுத்தினார். புதிய ஆற்றல் மற்றும் புதிய எழுச்சியின் ஆண்டாக நூற்றாண்டுகள் உருவாகிறது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாட்டில் கடமை உணர்ச்சியைத் தூண்டுவதில் விடுதலையின் அமிர்த மகோத்சவம் வெற்றியடைய விழைவதாகத் தெரிவித்தார். நம் அனைவரின் ஒன்றிணைந்த பங்களிப்பால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படலாம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
**********
(Release ID: 1840554)
Visitor Counter : 248
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada