பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதலாவது “அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு” நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 08 JUL 2022 11:24PM by PIB Chennai

வணக்கம்!

ஈடு செய்ய முடியாத இழப்பையும், தாங்க முடியாத துயரத்தையும் இந்நாள் எனக்கு அளித்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும் எனது மிக நெருங்கிய நண்பருமான திரு ஷின்சோ அபே இன்று நம்மிடையே இல்லை. இந்தியாவில் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஜப்பானின் உதவியுடன் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களுக்காக திரு ஷின்சோ அபே இந்திய மக்களின் மனதில் பல ஆண்டுகள் நிலைத்து நிற்பார். 

நண்பர்களே,
இன்றைய நிகழ்ச்சி எனது நெருங்கிய நண்பர் அருண் ஜெட்லி அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நமது அரசின் வளர்ச்சிக் கொள்கையின் அடிப்படை மந்திரமான ‘உள்ளடக்கத்தின் வாயில் வளர்ச்சி, வளர்ச்சியின் மூலம் உள்ளடக்கம்’ என்பது இந்த சொற்பொழிவின் தலைப்பாகும். உள்ளடக்கம் இல்லாமல் உண்மையான வளர்ச்சி சாத்தியமில்லை.  வளர்ச்சி இல்லாமல் உள்ளடக்கத்தின் இலக்கை அடைய முடியாது. 

உள்ளடக்கத்திற்காக கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா பணியாற்றியதைப் போல உலகில் வேறு எந்த நாடும் செயல்பட்டதில்லை. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 10 ஆண்டுகளில் சராசரியாக 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு-எட்டு ஆண்டுகளில் சுமார் 209 புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன, இது நான்கு மடங்கு அதிகம். சுமார் ஐந்து லட்சம் பொது தேவை மையங்கள் தொடங்கப்பட்டதன் வாயிலாக இந்திய கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இணைய வசதியை டிஜிட்டல் இந்தியா திட்டம் எடுத்துச் சென்றுள்ளது. இந்தியாவின் பிம்- யு.பி.ஐ சேவை, டிஜிட்டல் கட்டண முறை வசதியை கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வழங்கியுள்ளது.

நண்பர்களே,
நிர்பந்தத்தின் அடிப்படையிலான சீர்திருத்தங்களுக்கு மாற்றாக நம்பிக்கையின் அடிப்படையிலான சீர்திருத்தங்களின் வாயிலாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை இந்தியா தற்போது தயாரித்து வருகிறது. மக்களின் நாடித் துடிப்பின் அடிப்படையிலேயே எங்களது கொள்கைகள் அமைந்துள்ளன. பெண்கள், விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தி, ஏழை மக்களுக்கு நாம் பாதுகாப்பு வழங்கினோம். 

அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வோடு அரசு மற்றும் தனியார் துறையினரின் மீது நம்பிக்கை கொண்டதன் காரணத்தால் வளர்ச்சியை நோக்கி இந்தியா உற்சாகம் காட்டுகிறது.  விடுதலையின் அமிர்தகாலம் இந்தியாவிற்கு எண்ணிலடங்காத புதிய வாய்ப்புகளை அளித்து வருகிறது.  அருண் அவர்களை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்து எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*******


(Release ID: 1840531) Visitor Counter : 168