பிரதமர் அலுவலகம்
வாரணாசியில் அகில இந்திய கல்வி சங்க தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUL 2022 8:43PM by PIB Chennai
உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சர் திரு தர்மேந்திரபிரதான் அவர்களே,தேசிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர் கஸ்தூரிரங்கன் அவர்களே, இதர அமைச்சர்களே, பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களே, கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களே அனைவருக்கும் வணக்கம்
மகாமானா மதன்மோகன் மாளவியாவுக்கு தலைவணங்கி இந்த மாநாட்டிற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, அதனை 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான். நாட்டில் அறிவாற்றல் மற்றும் திறமைக்கு எந்தகாலத்திலும் பஞ்சமில்லை. எனினும்,பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது. நாம் இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான மனிதவளம் மற்றும் நாட்டிற்கான கல்விமுறையை வழங்கவேண்டும். நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும். புதிய இந்தியாவை படைக்க, புதிய நடைமுறையும் நவீன நடவடிக்கைகளும் அவசியம். இதற்கு முன்பு கற்பனை செய்துகூட பார்த்திராத அம்சங்கள் தற்போது நனவாகி வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மட்டும் நாம் மீண்டு வந்துவிடவில்லை, மாறாக, தற்போது இந்தியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தற்போது, நமது நாடுதான், உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலை கொண்ட நாடாக உள்ளது.
விண்வெளி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இதற்குமுன்பு, அரசாங்கம் மட்டுமே அனைத்தையும் செய்து வந்த நிலையில், தற்போது தனியார் பங்கேற்பு மூலம் இளைஞர்களுக்கு புதிய உலகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழுகவனமும் செலுத்தி வருகிறது.நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது. தற்கால குழந்தைகள், மிகசிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு உதவி செய்து அந்த திறமைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியம்.
நாட்டின் தற்போதைய கல்விக் கட்டமைப்பை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும். பல்வேறு புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்கள் மற்றும் ஐஐஎம்-கள் நாட்டில் திறக்கப்பட்டுள்ளன. 2014-ல் இருந்ததை விட, மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது, 55 சதவீதம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தி சம வாய்ப்புகளை ஏற்படுத்தும். புதிய கல்விக்கொள்கை தற்போது தாய் மொழியில் பயில்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சமஸ்கிருதம் போன்ற பண்டைக்கால இந்திய மொழிகளுக்கு புத்துயிரூட்டப்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய கல்விக்கேந்திரமாக இந்தியா உருவெடுக்கும். இந்திய உயர்க்கல்வியை சர்வதேச தரத்திற்கு இணையாக தயாரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 180 பல்கலைக்கழகங்களில் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. களத்தில் நடைமுறையில் உள்ள சர்வதேச நடைமுறைகளை வல்லுனர்கள் அறிந்திருக்க வேண்டும்.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1840422)
வருகையாளர் எண்ணிக்கை : 151
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam