பிரதமர் அலுவலகம்

வாரணாசியின் சிக்ராவில், பல்வேறு வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 07 JUL 2022 7:48PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவ்!   
காசி நகரம், ‘வாரத்தின் ஏழு நாட்களில் ஒன்பது திருவிழாக்கள்‘ நடைபெறும் இடம் என்ற சிறப்பைப் பெற்றது ஆகும்.  அதாவது,  இங்கு தினந்தோறும் புதுப்புது திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது என்று பொருள்.  இந்த நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!   


உத்தரப்பிரதேச ஆளுனர் திருமதி.ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, உத்தரப்பிரதேச அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, வாரணாசியைச் சேர்ந்த எனதருமை சகோதரர்களே,  சகோதரிகளே!  


முதலில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  சட்டப்பேரவைத் தேர்தலின்போது,  உங்களை நாடி வந்த நான், உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உதவுமாறு கேட்டுக்கொள்ள வந்தேன்.  நீங்கள் அளித்த அபரிமிதமான ஆதரவால், ஒட்டுமொத்த உத்தரப்பிரதேச மக்களும்,  காசி நகர மக்களும் அளித்த ஆதரவால் நான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன்.   தேர்தலுக்குப் பிறகு, இப்போது தான் நான் முதன்முறையாக இங்கு வந்துள்ளேன்.  எனவே, காசி நகர மக்களுக்கு,  உத்தரப்பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   


இந்த தெய்வீகமான, அற்புதமான, புதுப்பொலிவு பெற்ற காசி நகரில், கடந்த எட்டு ஆண்டுகளாக நாம் வளர்ச்சித் திருவிழா-வுக்கு உத்வேகம் அளித்து வருகிறோம்.  தற்போது காசி, பாரம்பரிய மற்றும் வளர்ச்சிக் காட்சியை நாட்டில் வெளிப்படுத்தியுள்ளது;  இந்த பாரம்பரியம், பிரம்மாண்டமான, தெய்வீகமான மற்றும் புதுமையான வளர்ச்சியை, சாலைகள், குளங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் காசிக்கு வரும் பாதை முழுவதற்கும் எடுத்துச் சென்றதோடு, ரயில் நிலையம் மற்றும் விமான நிலையமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.  


காசியில் ஒரு திட்டம் நிறைவடையும்போது, புதிதாக நான்கு திட்டங்கள் தொடங்கப்படுகிறது.   இன்றுகூட, ரூ.1,700 கோடி மதிப்புள்ள பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சாலைகள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, துப்புரவு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் காசியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.  எனவே, எப்போதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   


சகோதரர்களே, சகோதரிகளே,  
காசியின் ஆன்மா அழிக்க முடியாதது,  ஆனால், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்க நாம் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.  வளர்ச்சித் திட்டங்கள் மூலம், காசியை மேலும் ஆற்றல்மிக்கதாக, முன்னேற்றமடைந்ததாக, பொறுப்புள்ளதாக  மாற்றுவதே நமது நோக்கம்.  காசியில் மேற்கொள்ளப்படும் நவீன கட்டமைப்பு வசதிகள், இந்த நகரின்  சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்.   கல்வி, திறன், சுற்றுச்சூழல், துப்புரவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டால், வளர்ச்சிப் பணிகள் அசுரவேகமடையும்;  புதிய கல்வி நிறுவனங்கள் கட்டப்படுவதுடன், ஆன்மீக இடங்களுடன் தொடர்புடைய புனிதத் தலங்கள், நவீன பிரம்மாண்டத்துடன் இணைக்கப்படுகின்றன.  அதேவேளையில்,  ஏழைகளுக்கு வீடு, மின்இணைப்பு, குடிநீர், எரிவாயு, நவீன கழிவறை வசதிகளைப் பெறும்போது தான், படகோட்டிகள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் வீடற்ற மக்கள், பலனடைய முடியும்,  அதனால் தான், வளர்ச்சிப் பணிகள், உள்ளடக்கியவவையாக கருதப்படுகின்றன.  


இன்று நடைபெறும் தொடக்கவிழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்கள், சுறுசுறுப்பு, முற்போக்கு மற்றும் உணர்திறனை பிரதிபலிப்பதாக உள்ளன.   ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம்‘ என்பதற்கு எனது காசி மாநகரம் சிறந்த உதாரணம் ஆகும்.   
 

சகோதரர்களே, சகோதரிகளே, 
உங்களது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்ததன் வாயிலாக, உங்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கிறீர்கள்.   எனவே, நீங்கள் ஏதாவது  நல்லகாரியம் செய்தாலும், அது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.   காசியின் விழிப்பான  மக்கள், நாட்டிற்கே வழிகாட்டுகிறார்கள்.  குறுக்கு வழிகள் நாட்டிற்கு ஒருபோதும் பலனளிக்காது என்பதை காசி நகர மக்கள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணர்த்தியுள்ளனர்.  அது, சில தலைவர்களுக்கு மட்டும் பலனளிக்கலாம், ஒட்டுமொத்த நாட்டிற்கோ அல்லது மக்களுக்கோ பலனளிக்காது.  


காசி நகரில் வசிப்போர் என்ற முறையில்,  சாலைகள், ஆற்றங்கரைகள் மற்றும் சந்தைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.  பாபா விஸ்வநாத்தின் ஆசிகள் மற்றும் காசி நகர மக்களின் நம்பிக்கை காரணமாக, அனைத்து முடிவுகளையும் நம்மால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  


ஹர ஹர மகாதேவ்! நன்றி!  
முழு உரையைப் படிக்க இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839926 

******



(Release ID: 1840420) Visitor Counter : 138