பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 06 JUL 2022 9:42PM by PIB Chennai

பல்வேறு பிரிவுகளில் இருந்து மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பிரமுகர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தடகள வீராங்கனை பி.டி. உஷா, இசையமைப்பாளர் இளையராஜா, கொடையாளரும், சமூக சேவகருமான திரு வீரேந்திர ஹெக்டே, திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் திரு வி. விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

“போற்றுதலுக்குரிய பி.டி. உஷா அவர்கள் ஒவ்வொரு இந்தியரின் ஊக்க சக்தியாக உள்ளார். விளையாட்டுத் துறையில் அவரது சாதனைகள் அனைவராலும் அறியப்பட்ட போதும், கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்துவரும் தடகள வீரர்களுக்கு வழிகாட்டியாக அவர் செயல்படுவதும் சம அளவு பாராட்டுக்குரிய விஷயம். மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகள். @PTUshaOfficial”

“இளையராஜா @ilaiyaraaja அவர்களின் தலைசிறந்த படைப்பாற்றல், பல தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவரது படைப்புகள் பல்வேறு உணர்ச்சிகளை மிக அழகாக பிரதிபலிக்கின்றன. மிகவும் சாதாரண பின்னணியைக் கொண்ட அவர், இத்தகைய சாதனை புரியும் அளவிற்கு வளர்ந்திருப்பது, அவரது வாழ்க்கை பயணத்தை எழுச்சிமிகுந்ததாக மாற்றியுள்ளது. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

“தலைசிறந்த சமூக சேவைகளை மேற்கொள்வதில் திரு வீரேந்திர ஹெக்டே அவர்கள் முன்னிலை வகிக்கிறார். தர்மஸ்தலா ஆலயத்தில் வணங்குவதற்கும், கல்வி சுகாதாரம் மற்றும் கலாச்சாரத் துறையில் அவர் அளித்து வரும் போற்றத்தக்க பணியைக் காண்பதற்குமான வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவர் நிச்சயம் மேம்படுத்துவார்.”

“திரு வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் பல தசாப்தங்களாக படைப்பாற்றலில் ஈடுபட்டு வருகின்றார். அவரது படைப்புகள் இந்தியாவின் ஒளிமயமான கலாச்சாரத்தை எடுத்துரைப்பதுடன் சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றுள்ளன. மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகள்.”

***************


(Release ID: 1839748) Visitor Counter : 156