பிரதமர் அலுவலகம்

கர்நாடகாவின் மைசூரில் பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை பிரதமர் துவக்கி வைப்பு

Posted On: 20 JUN 2022 8:45PM by PIB Chennai

நாகனஹள்ளி ரயில் நிலையத்தில் சுமார் ரூ. 480 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள புறநகர் போக்குவரத்திற்கான பயிற்சி முனையத்திற்கு மைசூர், மகாராஜா கல்லூரி மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். பயிற்சி முனையத்தில் மெமோ ஷெட் இருப்பதுடன், தற்போதுள்ள மைசூர் பணிமனையில் நெரிசலை குறைக்கவும், மேலும் ரயில் சேவைகள் மற்றும் மைசூரிலிருந்து நீண்டதூர ரயில்களை இயக்கவும் இது உதவுவதுடன், அந்தப் பகுதியின் இணைப்பு மற்றும் சுற்றுலா திறனையும் மேம்படுத்துகிறது. ரயிலில் தினசரி பயணிப்பவர்களுக்கும், நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் இத்திட்டம் பயனளிக்கும்.

இந்த நிகழ்ச்சியின் போது அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தில் ‘தொடர்பு குறைபாடுள்ள நபர்களுக்கான தலைசிறந்த மையத்தை' பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்பு குறைபாடுள்ள நபர்களைக் கண்டறியவும், மதிப்பிடவும், மறுவாழ்வு அமைப்பதற்குமான  நவீன ஆய்வகங்கள் மற்றும் வசதிகளை இந்த மையம் பெற்றுள்ளது.

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “நமது பாரம்பரிய கலாச்சாரத்தை வளப்படுத்தி 21-ஆம் நூற்றாண்டின் உறுதிப்பாடுகளை எவ்வாறு நாம் நிறைவேற்றுவது என்பதற்கு கர்நாடகா ஓர் சிறந்த உதாரணம்”, என்று கூறினார்.

முன்காலத்தில், நலத்திட்டங்கள் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார். கடந்த 8 ஆண்டுகளில் அவரது அரசு கொண்டு வந்த திட்டங்களால், சமூகத்தின் அனைத்து பிரிவினர் மற்றும் துறைகளைச் சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கடைசி மைல் வரை தரமான சேவைகளை வழங்குவதன் வாயிலாக கடந்த 8 ஆண்டுகளில் அரசு சமூகநீதியை உறுதி செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள், பிறரை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். இதன் காரணமாகவே, நாணயங்களில், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் கல்வித் திட்டங்கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புத்தொழில் நிறுவனங்கள் முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். 

********



(Release ID: 1835765) Visitor Counter : 123