பிரதமர் அலுவலகம்

வதோதராவில் குஜராத் கௌரவ இயக்கத்தில் பிரதமரின் உரை

Posted On: 18 JUN 2022 8:54PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு பூபேந்திர பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற நண்பர் திரு சி ஆர் பாட்டில் அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு தேவு சிங், திரு தர்ஷனா பெஹன் அவர்களே, குஜராத் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே!

 இன்று, ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள், கலாச்சார நகரமான வதோதராவில் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘குஜராத்தின் வளர்ச்சி வாயிலாக இந்தியாவின் மேம்பாடு' என்ற உறுதிப்பாட்டை இந்த திட்டங்கள் வலுப்படுத்த உள்ளன. 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் அதி வேகமான வளர்ச்சிக்கு பெண்களின் விரைவான வளர்ச்சி, அவர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவையும் சம அளவு முக்கியம். பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு திட்டங்கள் மற்றும் முடிவுகளை இந்தியா எடுத்து வருகின்றது.

நண்பர்களே,

ரூ. 800 கோடி மதிப்பில் இன்று தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சரின் மாத்ரிசக்தி திட்டம், பேறு காலத்தின்போதும், தாய்மையின் ஆரம்ப நாட்களிலும், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உறுதிசெய்கிறது. போஷான் சுதா திட்டம் குஜராத் மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.‌ ஊட்டச்சத்திற்கு குஜராத் மாநிலம் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாட்டிற்கு புதிய பாதையை வகுத்துத் தரும் வகையில் இந்த மாநிலத்தில் ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சுமார் 58 லட்சம் சகோதரிகள் இந்த திட்டங்களால் பயனடைந்து வருகிறார்கள்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 36 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புகளும், தண்ணீர் குழாய் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் குஜராத் உட்பட நாடு முழுவதும் கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சுமார் ரூ. 11,000 கோடி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் பெண்களை ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றுவதற்கு முடிவெடுக்கும் பதவிகளில் அதிக வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்துள்ளோம். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மாநிலங்களுள் குஜராத்தும் ஒன்று.‌ அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சியின் உச்ச நிலையை நோக்கி குஜராத் முன்னேறுகிறது. அனைத்து தாய்மார்களையும் நான் தலை வணங்குகிறேன். உங்களது ஆசிகள், பாரத தாய்க்கு சேவையாற்ற எங்களுக்கு மேலும் ஆற்றல் தரட்டும். மிக்க நன்றி.

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியிலும், குஜராத்தியிலும் வழங்கியிருந்தார்.

   ***************

(Release ID: 1835151)

 



(Release ID: 1835430) Visitor Counter : 112