பிரதமர் அலுவலகம்

ஜெர்மனியின் பெர்லினில் சமுதாய வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 02 MAY 2022 11:59PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே! வணக்கம்!

பாரதத் தாயின் குழந்தைகளை இன்று ஜெர்மனியில் சந்திப்பதற்கான  வாய்ப்பைப் பெற்றது எனக்கு பெருமை அளிக்கிறது. உங்களில் பலரும் ஜெர்மனியின் பல்வேறு நகரங்களிலிருந்து பெர்லினுக்கு வந்திருக்கிறீர்கள். இந்தியாவில் தற்போது கடுமையான வெப்பம் நிலவும் போது இங்கே அதிகாலை 4.30 மணிக்கு கடும் குளிரில் ஏராளமான சிறு குழந்தைகளை காண்பது எனக்கு வியப்பளிக்கிறது.  உங்களின் அன்பும், ஆசியும் எனது மகத்தான பலமாகும். பரபரப்பான உங்களின் பணிகளுக்கு இடையே இங்கே வருவதற்கு நேரம் ஒதுக்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கு, இந்தியர்களுக்கு, குறிப்பாக நமது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எங்கே, எப்படி, எவ்வளவு தூரம் செல்வது என்பதை இந்தியா இன்று அறிந்திருக்கிறது. ஒரு நாடு தீர்மானித்துவிட்டால் அதனை  அடைவதற்கு  புதிய வழிகளை  கண்டறிகிறது. இன்றைய இந்தியாவின் அதன்  இளைஞர்களின் லட்சியம் என்பது நாட்டை துரிதமாக மேம்படுத்துவதாகும். இதற்கு அரசியல் நிலைத்தன்மையும் வலுவான மன உறுதியும் இன்றியமையாததாகும். இன்றைய இந்தியா இதனை நன்கு அறிந்துள்ளது. வாக்களிக்கும் பொத்தானை அழுத்துவதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்  ரீதியிலான நிலையற்ற  சூழலை இந்திய மக்கள் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். கடந்த 7-8 ஆண்டுகளாக இந்திய வாக்காளர்கள் தங்கள் வாக்கின் வலிமையையும், ஒரு வாக்கு எவ்வாறு இந்தியாவை மாற்ற முடியும் என்பதையும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும், துரித வளர்ச்சியையும் விரும்புகின்ற இந்திய மக்கள் அறுதிப் பெரும்பான்மையோடு ஓர் அரசை 2014-ல் தேர்ந்தெடுத்தனர். இது 30 ஆண்டுகளுக்கு பின்  நடந்தது. 2019-ல் முன்பிருந்ததைவிட வலுவான அரசை தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய மக்கள் உருவாக்கினர்.

நண்பர்களே,

சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை இந்த ஆண்டு நாங்கள் கொண்டாடுகிறோம். நான் சுதந்திர இந்தியாவில் பிறந்த நாட்டின் முதலாவது பிரதமராக இருக்கிறேன். 25 ஆண்டுகளுக்கு பின் இந்தியா தனது  சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது அது சிகரத்தில் இருக்கும். படிப்படியாக நடந்து இலக்கை நோக்கி செல்லும்.

நண்பர்களே,

இன்றைய இந்தியாவில், நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பம் புதிய இந்தியாவின்  அரசியல் மனஉறுதியை வெளிப்படுத்துகிறது. ஜனநாயகத்தின் விநியோகத் திறனுக்கு அடையாளமாகவும் விளங்குகிறது. ஒரு புள்ளி விவரம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். இன்று  மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்,  சுமார் 10,000 சேவைகளை இணையத்தின் மூலம்  வழங்குகின்றன. அரசு உதவி, கல்வி உதவித்தொகை, விவசாயிகளின் பயிருக்கான விலை என அனைத்தும் அவரவர்  வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

நண்பர்களே,

21ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டில், இந்தியா உலகளவில் உயர்ந்து வருகிறது என்பது மிகப் பெரிய உண்மையாகும். கொரோனா காலத்தில் 150க்கும் அதிகமான  நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியதன் மூலம் பல உயிர்களை பாதுகாக்க இந்தியா உதவி செய்துள்ளது.  கொவிடுக்கு தடுப்பூசி கண்டுபிடித்ததில் இந்தியா வெற்றி அடைந்தததையடுத்து எங்களின் தடுப்பூசிகளை 100 நாடுகளுக்கு அனுப்பி நாங்கள் உதவி செய்திருக்கிறோம்.

நண்பர்களே,

இன்றைய முக்கிய செய்தி, தடங்கலுக்கு வருந்துகிறேன். உலகம் இன்று கோதுமை பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. உலகின் பெரிய நாடுகள், உணவுப் பாதுகாப்புக் குறித்து கவலை கொள்கின்றன.. இத்தகைய நேரத்தில் இந்திய விவசாயிகள் உலகத்திற்கு உணவளிக்க முன்வந்துள்ளனர். மனித குலம் ஏதாவது நெருக்கடியை சந்திக்கும்போது இந்தியா அதற்கான தீர்வுடன் முன்வருகிறது. இது தான் புதிய இந்தியா, இதுதான் புதிய இந்தியாவின் ஆற்றல்

நண்பர்களே,

புகழ் பெற்ற ஜெர்மன் அறிஞர் மாக்ஸ் முல்லர் இந்தியாவை மிகச் சிறப்பாக புரிந்து கொண்டவர். இந்திய – ஐரோப்பிய உலகின் சிறப்புப் பற்றி பேசியவர். இங்குள்ள நீங்கள் அனைவரும் அவரை ஒவ்வொரு நாளும் பத்து முறை நினைவில்  கொல்லவேண்டும். இந்தியா மற்றும் ஐரோப்பா இடையேயான வலுவான உறவு உலகத்தில் அமைதியையும், வளத்தையும் உறுதி செய்யும். நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க  வாழ்த்துக்கள். மிக்க நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822394

------



(Release ID: 1822394)



(Release ID: 1822951) Visitor Counter : 167