பிரதமர் அலுவலகம்

புஜ்-ஜில் கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

“நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளை புறந்தள்ளி, புஜ் மற்றும் கட்ச் பகுதி மக்கள் தங்களது கடின உழைப்பால் இந்த பிராந்தியத்தின் புதிய தலைவிதியை தற்போது எழுதி வருகின்றனர்“

“மேம்பட்ட மருத்துவ வசதிகள், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமின்றி, சமூக நீதியையும் அவை ஊக்குவிக்கின்றன“

“ஏழைகளுக்கு தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைத்தால், அமைப்புகளின் மீதான அவர்களது நம்பிக்கை வலுப்பெறும். சிகிச்சைக்கான செலவு பற்றிய கவலையிலிருந்து அவர்கள் விடுபடுவார்களேயானால், அவர்கள் மேலும் உறுதிப்பாட்டுடன் கடினமாக உழைத்து, வறுமையிலிருந்து விடுபடலாம்”

Posted On: 15 APR 2022 2:04PM by PIB Chennai

குஜராத்தின் புஜ் நகரில் கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, பிரதமர் திரு.நரேந்திரமோடி, இன்று காணொலி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார்.   புஜ்-ஜில் உள்ள ஸ்ரீ கட்சி லேவா படேல் சமாஜம், இந்த மருத்துவமனையை அமைத்துள்ளது.   குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவுகளை புறந்தள்ளி, புஜ் மற்றும் கட்ச் பகுதி மக்கள், தங்களது கடின உழைப்பால் இந்த பிராந்தியத்தின் புதிய தலைவிதியை தற்போது எழுதி வருவதாகக் கூறினார். “இப்பகுதியில் தற்போது பல்வேறு அதிநவீன மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன.  அதன் தொடர்ச்சியாக, புஜ் நகரம், அதிநவீன, உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவமனையை இன்று பெற்றுள்ளது“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.  இந்த மருத்துவமனை, இப்பகுதியில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் நடத்தப்படும் முதலாவது உயர்சிறப்பு மருத்துவமனை என்பதோடு,  கட்ச் பகுதி மக்களுக்கும்,  லட்சக்கணக்கான ராணுவ வீரரர்கள், துணை ராணுவப் படையினர் மற்றும் வணிகர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிப்பதாகம் அமையும்.  

மேம்பட்ட மருத்துவ வசதிகள், நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு மட்டுமின்றி,  சமூக நீதியையும் ஊக்குவிப்பதாகவும் பிரதமர் விவரித்தார்.   “ஏழைகளுக்கு தரமான சிகிச்சை குறைந்த செலவில் கிடைத்தால், அமைப்புகளின் மீதான அவர்களது நம்பிக்கை வலுப்பெறும்.  சிகிச்சைக்கான செலவு பற்றிய கவலையிலிருந்து அவர்கள் விடுபடுவார்களேயானால், அவர்கள் மேலும் உறுதிப்பாட்டுடன் கடினமாக உழைத்து, வறுமையிலிருந்து விடுபடலாம்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  கடந்த காலங்களில், சுகாதாரத் துறையின் அனைத்துத் திட்டங்களும், இந்த நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். 

ஆயுஷ்மான் பாரத் திட்டம், மக்கள் மருந்தகத் திட்டம் ஆகியவற்றின் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடி ரூபாயை மிச்சப்படுத்த உதவுகிறது.   சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கட்டமைப்பு போன்ற திட்டங்கள், அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்க உதவுகின்றன.  

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம், நோயாளிகளுக்கான வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது.   ஆயுஷ்மான் சுகாதாரக் கட்டமைப்பு இயக்கத்தின் மூலம், இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட  நவீன மற்றும் அவசர சுகாதார சேவைக் கட்டமைப்பு வசதிகள், வட்டார அளவிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகிறது.  அதேபோன்று, எய்ம்ஸ் மருத்துவமனையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மருத்துவக் கல்லூரிகள் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதோடு, அடுத்த 10 ஆண்டுகளில், நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  

பின்னர் குஜராத்தி மொழியில் உரையாற்றிய பிரதமர்,  ‘கட்ச்-ஐ விட்டு நான் வெளியேறாவிட்டால், என்னை கட்ச் வெளியேற்றிவிடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது‘ .  அன்மைக்காலத்தில், குஜராத்தில் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்வி வசதிகள் விரிவாக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  முன்பு 9 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 9 எய்ம்ஸ், 36-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  மருத்துவப் படிப்புக்கான இடங்களும், 1100-லிருந்து 6000-ஆக அதிகரித்துள்ளது.  ராஜ்கோட் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கியிருப்பதோடு, அகமதாபாத் சிவில்  மருத்துவமனையிலும் தாய்-சேய் நலனுக்கான 1500 படுக்கைவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   இருதயவியல் மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை வசதிகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

சுகாதாரத்தைப் பேணிக் காக்க தடுப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்திய திரு.மோடி, தூய்மை, உடற்பயிற்சி மற்றும் யோகா-வின் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். சிறந்த உணவு, தூய்மையான குடிநீர் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.   கட்ச் பகுதி மக்கள் யோகா தினத்தை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.   கட்ச் திருவிழாவை வெளிநாடுகளில் பிரபலப்படுத்துமாறு படேல் சமுதாயத்தினரை கேட்டுக்கொண்ட அவர்,  அதே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.   75-வது சுதந்திர தின விழாவை, அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடுமாறும் அவர் வலியுறுத்தினார். 

*****

 



(Release ID: 1817048) Visitor Counter : 185