பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி கரியப்பா மைதானத்தில் நடந்த என்சிசி பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 28 JAN 2022 3:22PM by PIB Chennai

நாட்டின் பாதுகாப்புத்  துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களே, என்சிசி தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் அவர்களே, அதிகாரிகளே, சிறப்பு விருந்தினர்களே, குடியரசு தினத்தில் பங்கேற்ற கலைஞர்களே, என்சிசி-என்எஸ்எஸ் தோழர்களே வணக்கம்!

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் நிலையில், மாறுபட்ட உற்சாகம் நிலவுவதைக் காணமுடிகிறது. என்சிசி மாணவராக நான் பெற்ற பயிற்சி எனக்கு  நாட்டுக்கு உரிய கடமைகளை செய்வதற்குரிய மகத்தான வலிமையை அளித்துள்ளது. லாலா லஜபதி ராய், பீல்டு மார்ஷல் கரியப்பா ஆகிய இந்தியாவின் தீரம் மிக்க இரண்டு புதல்வர்களுக்கும் இன்று பிறந்தநாள் ஆகும். நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. 

நண்பர்களே, நாட்டில் என்சிசியை வலுப்படுத்த பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறிச் செல்லும் காலம் இது. இதற்காக நாட்டில் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் எல்லைகளில் 1 லட்சம் புதிய கேடேட்கள்   உருவாக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு நிறுவனங்களின் கதவுகள் திறக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான பெண் மாணவர்கள் என்சிசியில் உள்ளனர். இது நாட்டின் மாறி வரும் அணுகுமுறைக்கான அடையாளம். நாட்டுக்கு உங்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. இதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சைனிக் பள்ளிகளில் தற்போது நாட்டின் பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.  ராணுவத்தில் பெண்கள் முக்கியப் பொறுப்புக்களைப்  பெற்று வருகின்றனர். இந்திய விமானப்படையில் நாட்டின் புதல்விகள் போர் விமானங்களில் பறக்கின்றனர். இத்தகைய சூழலில் என்சிசியில் மென்மேலும் பெண்களை சேர்ப்பதாக நமது முயற்சிகள் இருக்க வேண்டும்.

நண்பர்களே, நீங்கள் பெரும்பாலும் இந்த நூற்றாண்டில் பிறந்தவர்களாக உள்ளீர்கள். 2047 ஆம் ஆண்டை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதில் உங்களுக்கு முக்கியப்  பங்கு உள்ளது. இந்த முடிவை நோக்கிய உங்களது முயற்சிகளும், தீர்மானங்களும் சாதனைகளாகவும், இந்தியாவுக்கான வெற்றியாகவும் இருக்க வேண்டும்.

நண்பர்களே, முதலில் நாடு என்னும் உணர்வுடன் முன்னேறிச் செல்லும் இளைஞர்களைக் கொண்ட நாட்டை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. விளையாட்டுக் களம், தொழில் தொடங்கும் சூழல் ஆகியவற்றில் இந்தியாவின் வெற்றி இதனை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. அமிர்த காலத்தில், அதாவது அடுத்த 25 ஆண்டு காலத்தில் தேசிய மாணவர் படையினர் தங்களது விருப்பங்களையும், நடவடிக்கைகளையும், வளர்ச்சி மற்றும் நாட்டின் எதிர்பார்ப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுங்கள் என்ற இயக்கத்தில் இன்றைய இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற முடியும். இன்றைய இளைஞர்கள் இந்தியத்  தொழிலாளர்களின் வியர்வையில் உருவான உள்ளூர் பொருட்களை பயன்படுத்த தீர்மானித்துக் கொண்டால் இந்தியாவின் வருங்காலத்தை மாற்றியமைக்கலாம்.
இன்று ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. மறுபக்கம் தவறான தகவல்கள் குறித்த அச்சம் நிலவுகிறது. நமது நாட்டின் சாதாரண மனிதர்கள் எந்தவித வதந்திக்கும் இறையாகாமல் இருப்பது அவசியமாகும். எனவே தேசிய மாணவர் படையினர் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நண்பர்களே, தேசிய மாணவர் படை அல்லது நாட்டு நலப்பணித் திட்டம் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதை மருந்துகள் புழங்க அனுமதிக்கக் கூடாது. தேசிய மாணவர் படையினர் போதை மருந்து பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதுடன் தங்களது வளாகங்களில் அவை அண்டாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். என்சிசி, என்எஸ்எஸ் ஆகியவற்றில் இல்லாத நண்பர்கள் இந்தப்  பழக்கத்தை கைவிடுவதற்கு நீங்கள் உதவ வேண்டும். 

சகோதர, சகோதரிகளே, என்சிசியினர், நாட்டின் கூட்டு முயற்சிகளுக்கு புதிய சக்தியை அளிக்க பாடுபட்டு வரும் 'செல்ஃப் ஃபார் சொசைட்டி' தளத்துடன் தங்களைத்  தொடர்புப்படுத்திக் கொள்ள வேண்டும். 7,000-க்கும் மேற்பட்ட அமைப்புகளும், 2.25 லட்சம் மக்களும் இந்த தளத்துடன் தொடர்பு வைத்துள்ளனர். என்சிசி/என்எஸ்எஸ் அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் லட்சக்கணக்கில் இதில் சேர வேண்டும். 
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு .மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

*********(Release ID: 1793487) Visitor Counter : 63