பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 16 NOV 2021 1:40PM by PIB Chennai

முதலாவது கணக்குத் தணிக்கை தின விழாவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது சர்தார் வல்லபபாய் பட்டேலின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைத்தார். இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு.கிரிஷ் சந்திர முர்மு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், சிஏஜி வெறுமனே நாட்டின் கணக்கு விவரங்களை மட்டுமே கொண்டிருப்பதல்ல. உற்பத்தித்திறன் மற்றும் திறமைக்கு மதிப்புக் கூடுதலையும் செய்வதாகும். எனவே கணக்குத் தணிக்கை தினத்தின் உரைகளும் தொடர்புடைய நிகழ்ச்சிகளும் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலின் பகுதியாக இருக்கின்றன. சிஏஜி என்பது ஒரு நிறுவனம். இது முக்கியத்துவதோடு வளர்ந்து வருகிறது. காலத்தைக் கடந்து ஒரு மரபை உருவாக்கியுள்ளது.

மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், பாபா சாகேப், அம்பேத்கர் ஆகியோருக்குப் புகழஞ்சலி செலுத்திய பிரதமர், இந்த மகத்தான தலைவர்கள் மாபெரும் இலக்குகளை எவ்வாறு நிர்ணயிப்பது, எவ்வாறு அவற்றை அடைவது என்பதை நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.

கணக்குத் தணிக்கை என்பதை ஐயத்தோடும், அச்சத்தோடும் பார்த்த காலம் ஒன்று இருந்தது என்று பிரதமர் கூறினார். ‘சிஏஜி எதிர் அரசு’ என்பது நமது அமைப்பு முறையில் பொதுவான சிந்தனையாக மாறியிருந்தது. ஆனால் இன்று இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கணக்குத் தணிக்கை தற்போது மதிப்புக் கூட்டுதலில் முக்கியமான ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

ஏற்கனவே வங்கித் துறையில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்ததால் பல்வேறு தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்று பிரதமர் குறை கூறினார். இதன் விளைவாக வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரித்தன. “கடந்த காலத்தில் வாராக்கடன்கள் மூடிமறைக்கப்பட்டன என்பதை நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள். இருப்பினும் முந்தைய அரசுகள் பற்றிய உண்மையை நாட்டின் முன்னால் முழுமையான நேர்மையோடு நாங்கள் வைத்துள்ளோம். பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளும்போது மட்டுமே நாம் தீர்வுகளைக் கண்டறிய முடியும்” என்று அவர் கூறினார்.

“இன்று நாம் இத்தகைய நடைமுறையை செயல்படுத்தி வருகிறோம். இதில் ‘சர்க்கார் சர்வம்’ என்ற சிந்தனையைக் கொண்டிருந்ததிலிருந்து மாறி அரசின் தலையீடு குறைந்து வருகிறது. உங்களின் பணியும் எளிதாகி இருக்கிறது” என்று கணக்குத் தணிக்கையாளர்களிடம் பிரதமர் கூறினார். இது ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்பதற்கு இசைவானது. “தொடர்பு இல்லாத வழக்கங்கள், தாமாகவே புதுப்பித்தல், முகம் காணாத மதிப்பீடுகள், சேவை வழங்குதலுக்கு இணையவழி விண்ணப்பங்கள். இந்த சீர்திருத்தங்களெல்லாம் தேவையின்றி அரசு தலையிடுவதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

பரபரப்பான அமைப்புகளில் கோப்புகளுடன் போராடும் நிலைமையை சிஏஜி கடந்திருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்தார். “நவீன நடைமுறைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் சிஏஜி வெகு வேகமாக மாற்றமடைந்துள்ளது. தற்போது நீங்கள் நவீன பகுப்பாய்வு கருவிகளை, புவியியல் சார்ந்த தரவுகளை, செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப் பெரிய பெருந்தொற்று பற்றி பேசிய பிரதமர் இதனை எதிர்த்த நாட்டின் போராட்டமும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டார். தற்போது உலகின் மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு சில வாரங்களுக்கு முன்பு நாடு 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மைல்கல்லைக் கடந்தது என்று அவர் தெரிவித்தார். இந்த மகத்தான போராட்ட காலத்தில் உருவான நடைமுறைகளை சிஏஜி ஆய்வு செய்யுமாறு அவர் யோசனை தெரிவித்தார்.

பழங்காலங்களில் தகவல் என்பது கதைகள் மூலம் பரிமாறப்பட்டது என்று பிரதமர் கூறினார். வரலாறு கதைகள் மூலம் எழுதப்பட்டது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் தரவு என்பது தகவலாகும், வரும் காலங்களில் நமது வரலாறு தரவுகள் மூலம் காணவும், புரிந்து கொள்ளவும்படும். எதிர்காலத்தில் தரவு வரலாற்றை எடுத்துரைக்கும் என்று கூறி அவர் உரையை நிறைவு செய்தார்.


(Release ID: 1772455) Visitor Counter : 210