பிரதமர் அலுவலகம்

ஜப்பான் பிரதம மந்திரி மாண்புமிகு திரு. சுஹா யோஷூஹூடேவை பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி சந்தித்தார்

Posted On: 24 SEP 2021 5:15AM by PIB Chennai

பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி 23 செப்டம்பர் 2021 அன்று வாஷிங்டன் டிசி நகரில் குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் மாண்புமிகு திரு. சுஹா யோஷுஹூடேவை சந்தித்து பேசினார். முதன்முதலாக தாங்கள் நேருக்கு நேர் சந்தித்து பேசுவதில் இரு பிரதம மந்திரிகளும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். திரு. சுஹா ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்ற செப்டம்பர் 2020 முதல் தாங்கள் மேற்கொண்ட மூன்று தொலைப்பேசி உரையாடல்களை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்திய-ஜப்பான் பிரத்தியேக ராஜாங்க உறவுகள் & சர்வதேச பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் பிரதமராகவும் முதன்மை அமைச்சரவை செயலாளராகவும் இருக்கும் போது அவர் வெளிப்படுத்திய பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவத்துக்காக பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் சுஹாவுக்கு நன்றி தெரிவித்தார். சர்வதேச அளவில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் இருந்த போதிலும் கூட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக அவர் ஜப்பான் பிரதமர் சுஹாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு உறவுகள் குறித்து இரு பிரதம மந்திரிகளும் பரிசீலனை செய்தனர். அண்மைக்கால சர்வதேச மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் குறித்து அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியத்துக்கான தங்களது பொறுப்புடைமைகளை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இரு தரப்பு கூட்டுறவை மேம்படுத்தவும் அவர்கள் பரஸ்பரம் சம்மதித்தனர்.

இரு நாடுகளுக்கிடையில் அதிகரித்து வரும் பொருளாதார ஈடுபாட்டை இரு பிரதமர்களும் வரவேற்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் தொடங்கப்பட்டு உள்ள விநியோகச் சங்கிலித்தொடரை மீட்டெடுப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கையை (SCRI)

அவர்கள் வரவேற்றனர். நிலைமைகளைச் சமாளிக்க கூடிய, பலதரப்பட்ட மற்றும் நம்பிக்கைக்கு உரிய விநியோக சங்கிலி தொடர்களை மேம்படுத்துவதற்கான கூட்டுச் செயல்முறையாக இது இருக்கிறது. உற்பத்தி, எம்.எஸ்.எம்.. மற்றும் திறன் மேம்பாட்டில் இரு தரப்பு பங்கேற்பையும் அதிகரிப்பதற்கான தேவையை பிரதம மந்திரி மோடி எடுத்துக் காட்டினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட குறிப்பிட்ட தொழில்திறன் கொண்ட தொழிலாளர்கள் (SSW) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் சுஹா பிரதமர் மோடியிடம் விளக்கிக் கூறினார். அதாவது ஜப்பான் தரப்பு 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் தொழில் திறன் மற்றும் மொழி தேர்வுகளை நடத்தும் என்று பிரதமர் சுஹா தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் குறித்தும் அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் இரு பிரதமர்களும் விவாதித்தனர். அதிகரித்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் சுட்டிக் காட்டியதோடு இந்திய-ஜப்பான் டிஜிட்டல் கூட்டுறவின் முன்னேற்றம் குறித்து ஆக்கப்பூர்வமாக மதிப்பீடு செய்தனர். அதிலும் குறிப்பாக ஸ்டார்ட்-அப்ஸ் பற்றியும் மதிப்பீடு செய்தனர். உருவாகிவரும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களிலும் மற்றும் மேலும் இணைந்து செயலாற்றுவது குறித்தும் அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள், பசுமை ஆற்றலுக்கு இடைமாற்றம் மற்றும் இந்தியாவின் தேசிய ஹைட்ரஜன் ஆற்றல் மிஷனில் ஜப்பான் இணைந்து கொள்வதற்கான சாத்தியம் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மும்பை-அகமதாபாத் அதிவிரைவு ரெயில் (MAHSR) திட்டத்தை சிக்கல் இல்லாமல் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உதவும் வகையில் முயற்சிகளை விரைவுபடுத்துவது குறித்து இரண்டு பிரதமர்களும் தங்களது பொறுப்பை மீள உறுதி செய்து கொண்டனர்.

இந்திய-ஜப்பான் ஆக்ட் ஈஸ்ட் மன்றத்தின் கீழ் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள இருதரப்பு வளர்ச்சித் திட்டங்களில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை இரு தலைவர்களும் வரவேற்றனர்அத்தகைய கூட்டு நடவடிக்கையை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய-ஜப்பான் கூட்டுறவில் ஏற்பட்டுள்ள வலுவான உந்து சக்தி ஜப்பானின் புதிய நிர்வாகத்தின் கீழும் அப்படியே தொடரும் என்று பிரதமர் சுஹா தனது நம்பிக்கையை தெரிவித்தார். விரைவில் இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்திய -ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டுக்கு ஜப்பானின் அடுத்த பிரதம மந்திரியை வரவேற்க காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

******



(Release ID: 1757656) Visitor Counter : 350