பிரதமர் அலுவலகம்

பிராணவாயு மற்றும் மருந்துகளின் இருப்பு, விநியோகம் குறித்து பிரதமர் ஆய்வு


மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், அனைத்து உதவிகளை வழங்கவும், இந்திய அரசு உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் உள்ளது

ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் உற்பத்தியும் கடந்த சில வாரங்களாக கணிசமாக அதிகரிப்பு

முதல் அலையின் உச்சத்தில் இருந்ததை விட பிராணவாயுவின் விநியோகம் தற்போது மூன்று மடங்கு அதிகம்


Posted On: 12 MAY 2021 9:14PM by PIB Chennai

பிராணவாயு மற்றும் மருந்துகளின் இருப்பு, விநியோகம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி உயர்மட்ட ஆய்வு கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்.

கொவிட் மற்றும் மியூகோர்மைசிஸ் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விநியோகத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் உற்பத்தியாளர்களுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாக பிரதமரிடம் அமைச்சர் கூறினார். ஒவ்வொரு மருந்தின் தயாரிப்பிற்குத் தேவையான மூலப் பொருட்களின் தற்போதைய உற்பத்தி மற்றும் இருப்பு பற்றி பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. மாநிலங்களுக்கு போதுமான அளவில் மருந்துகள் வழங்கப்படுவதாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் உற்பத்தியும் கடந்த சில வாரங்களாக கணிசமாக அதிகரித்திருப்பதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த மருந்தகத் துறையை இந்தியா பெற்றிருப்பதாகவும், அதனுடன் அரசு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டால் அனைத்து மருந்துகளின் இருப்பும் உறுதி செய்யப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டில் பிராணவாயுவின் கையிருப்பு மற்றும் விநியோகத்தில் தற்போதைய நிலை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். முதல் அலையின் உச்சத்தின் போது இருந்ததைவிட பிராணவாயுவின் விநியோகம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக ஆலோசிக்கப்பட்டது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்பாடுகள் தொடர்பாக பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பிராணவாயு செறிவூட்டிகள், பிராணவாயு சிலிண்டர்களின் கொள்முதல், நாடு முழுவதும் நிறுவப்பட்டு வரும் அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) ஆலைகளின் நிலை குறித்து பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்குள் செயற்கை சுவாசக் கருவிகளை இயக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி சம்மந்தமான விஷயங்களை உற்பத்தியாளர்களின் உதவியுடன் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

*****************



(Release ID: 1718266) Visitor Counter : 229