பிரதமர் அலுவலகம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்’ பிரசாரத்தை தொடங்கினார் பிரதமர்


வரலாற்று சிறப்புமிக்க கென் - பெத்வா நதி நீர் இணைப்பு திட்டம் கையெழுத்தானது

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கை நீர் பாதுகாப்பு மற்றும் நீர் இணைப்பை சார்ந்துள்ளது: பிரதமர்

தண்ணீர் பரிசோதனை மிகவும் தீவிரத்துடன் மேற்கொள்ளப்படுகிறது: பிரதமர்


Posted On: 22 MAR 2021 2:25PM by PIB Chennai

உலக தண்ணீர் தினத்தில், ‘ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம்பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

நதிகளை இணைப்பதற்கான தேசிய தொலைநோக்கு திட்டத்தின் முதல் நடவடிக்கையாக கென் - பெத்வா நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் முன்னிலையில், மத்திய ஜல்சக்தி அமைச்சர் மற்றும் மத்தியப் பிரதேச, உத்தரப் பிரதேச முதல்வர்கள் இடையே கையெழுத்திடப்பட்டது.

ராஜஸ்தான், உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு தலைவர்ளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்வதேச தண்ணீர் தினத்தில், மழைநீர் சேகரிப்பு பிரச்சாரத்தின் அறிமுகத்துடன், கென்-பெத்வா கால்வாய் இணைப்பு திட்டத்திற்கான முக்கிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

 உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களின் நலனுக்காக, அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவை நனவாக்குவதில் இந்த ஒப்பந்தம் முக்கியமானது என அவர் மேலும் கூறினார்.

நீர் பாதுகாப்பு மற்றும் தீவிர நீர் மேலாண்மை இன்றி, துரித வளர்ச்சி சாத்தியமில்லை என அவர் கூறினார். இந்திய வளர்ச்சியின் தொலைநோக்கு திட்டம் மற்றும் இந்தியாவின் தன்னம்பிக்கை ஆகியவை நமது நீர் வளங்கள் மற்றும் நீர் இணைப்பை சார்ந்து உள்ளன என அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நிகராக, தண்ணீர் பிரச்னை சவாலும் அதிகரிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார். வருங்கால தலைமுறையினரின் தேவையை நிறைவேற்ற வேண்டியது, தற்போதைய தலைமுறையினரின் பொறுப்பு என அவர் கூறினார்.

 அரசு தனது கொள்கைகள் மற்றும் முடிவுகளில், நீர் நிர்வாகத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது என அவர் உறுதிப்பட கூறினார். இந்த நோக்கில், கடந்த 6 ஆண்டுகளில், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் பிரதமரின் கிரிஷி சிஞ்சாய், ஒவ்வொரு நிலத்துக்கும் தண்ணீர் வசதி குறித்த பிரச்சாரம், ஒவ்வொரு துளி நீருக்கும், அதிக விளைச்சல் குறித்த பிரச்சாரம், நமாமி கங்கை திட்டம், ஜல் ஜீவன் திட்டம் அல்லது அடல் பூஜல் திட்டம் ஆகியவை பற்றியும் அவர் பேசினார்.

இந்த அனைத்து திட்டங்களிலும், பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.

நிலத்தடி நீரை சார்ந்திருப்பதை குறைத்து, மழைநீரை வைத்து நாடு சமாளிப்பது சிறந்தது என பிரதமர் சுட்டிக் காட்டினார். ஆகையால், மழைநீர் சேகரிப்பு பிரசாரத்தின் வெற்றி மிக முக்கியம். ஜல் சக்தி திட்டத்தில் நகரம் மற்றும் ஊரக பகுதிகள் இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

வரும் மழைக்காலத்தில், நீர் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். கிராம தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், ஆணையர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் தண்ணீர் உறுதிமொழி, ஒவ்வொருவரின் வாக்குறுதியாக இருக்க வேண்டும் என கூறினார். 

தண்ணீருக்கு மதிப்பளிக்கும் வகையில் நமது இயற்கை மாறும்போது, இயற்கையும் நமக்கு உதவும் என அவர் கூறினார்.

மழை நீர் சேகரிப்பு தவிர, நதிநீர் மேலாண்மை குறித்தும் நமது நாடு நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறது என பிரதமர் குறிப்பிட்டார். தண்ணீர் பிரச்னையிலிருந்து நாட்டை காக்கும் நோக்கில், நாம் தற்போது செயல்பட வேண்டியது அவசியம்.

இந்த தொலைநோக்கின் ஒருபகுதிதான் கென்-பெத்வா நதி நீர் இணைப்புத் திட்டம். இத்திட்டத்தை நனவாக்க உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மேற்கொண்ட நடவடிக்கையை அவர் பாராட்டினார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாட்டில் உள்ள 19 கோடி கிராம குடும்பங்களில் 3.5 கோடி குடும்பங்கள் மட்டும் குடிநீர் குழாய் இணைப்பை பெற்றிருந்தன என பிரதமர் கூறினார். ஜல் ஜீவன் திட்டம் தொடங்கியபின், குறுகிய காலத்தில் 4 கோடி புதிய குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜல் ஜீவன் திட்டத்தில், பொது மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் பங்களிப்பு முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்துக்குபின் முதல் முறையாக, தண்ணீர் பரிசோனை தொடர்பாக அரசு தீவிரமாக செயல்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த தண்ணீர் பரிசோதனை பிரச்சாரத்தில், நமது கிராம சகோதரிகள் மற்றும் புதல்விகளும் பங்குதாரர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். கொரோனா தொற்று காலத்தில், தண்ணீர் பரிசோதனை குறித்து சுமார் 4.5 லட்சம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்திலும், தண்ணீர் பரிசோதனை குறித்த பயிற்சி பெற்ற பெண்கள் 5 பேர் உள்ளனர். நீர் நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது, நிச்சயம் நல்ல முடிவுகளை தரும் என கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

*****************

 (Release ID: 1706623) Visitor Counter : 271