பிரதமர் அலுவலகம்

இந்த அளவிலான தடுப்புமருந்து விநியோகம் மனித குலத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாதது: பிரதமர்


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் முழுவதும் திருப்தி அடைந்த பின்னரே அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது: பிரதமர்

உலகெங்கிலும் இருக்கும் 60 சதவீத குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் உயிர் காக்கும் தடுப்பு மருந்துகளை பெறுகின்றனர்: பிரதமர்

Posted On: 16 JAN 2021 1:46PM by PIB Chennai

கொவிட்-19 தடுப்பு மருந்தை இந்தியா முழுவதும் வழங்கும் நடவடிக்கையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் தடுப்பு மருந்து வழங்கும் இந்த திட்டம் உலகத்திலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து செயல்முறையாகும்.

வரலாறு காணாத இந்த நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர், முதல் சுற்றிலேயே மூன்று கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் இது உலகத்தின் குறைந்தது 100 நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகமாகும் என்றும் கூறினார். இரண்டாம் சுற்றில் 30 கோடி பேர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய் தன்மை உடையவர்களுக்கு இந்த சுற்றின்போது தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த அளவிலான தடுப்புமருந்து வழங்கல் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளபபடவில்லை என்றும் இந்தியாவின் திறனை இது வெளிப்படுத்துவதாகவும் திரு மோடி கூறினார்.

வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொண்ட அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மீது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் முழுவதும் திருப்தி அடைந்த பின்னரே அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது என்று கூறினார். இந்திய தடுப்பு மருந்து விஞ்ஞானிகள், மருத்துவ அமைப்பு, இந்திய செயல்முறைகள் மற்றும் அமைப்பு சார்ந்த நடவடிக்கைகள் உலகளாவிய நம்பிக்கையை பெற்று இருக்கின்றன என்றும் தொடர் சாதனைகள் மூலமாக இது சாத்தியமாகியுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார். உலகெங்கிலும் இருக்கும் 60 சதவீத குழந்தைகள் கடும் அறிவியல் பரிசோதனைகளுக்கு பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் உயிர் காக்கும் தடுப்பு மருந்துகளை பெறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய தடுப்பு மருந்து நிபுணத்துவம் மற்றும் இந்திய தடுப்புமருந்து விஞ்ஞானிகள் மீதான இந்த நம்பிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா  தடுப்பு மருந்தின் மூலம் இன்னும் வலுப்பெறும் என்று பிரதமர் கூறினார். இந்திய தடுப்பு மருந்துகள் வெளிநாட்டு தடுப்பு மருந்துகளை விட விலை குறைவாக இருப்பதோடு அவற்றை செலுத்துவதும் எளிதானது என்று அவர் கூறினார்.  சில வெளிநாட்டு தடுப்பு மருந்துகளின் விலை ரூபாய் ஐந்தாயிரம் வரை இருப்பதாகவும், -70 டிகிரி தட்ப வெப்ப நிலையில் அவற்றை சேமித்து வைக்கவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், பல்லாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்திய தடுப்பு மருந்துகள், இந்திய தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு தக்க வகையில் உள்ளதாகவும் கொரோனாவுக்கு எதிரான நமது போரில் நாம் வெற்றி அடைவதற்கு இவை உதவும் என்றும் அவர் கூறினார்.

தன்னம்பிக்கை மற்றும் தற்சார்புடன் கொரோனாவை இந்தியா எதிர் கொண்டதாக திரு மோடி கூறினார். நம்பிக்கையை வலுவிழக்க செய்ய கூடாது என்னும் உறுதி ஒவ்வொரு இந்தியரிடமும் இருந்ததை அவர் குறிப்பிட்டார். ஒரே ஒரு ஆய்வகத்தில் இருந்து 2300 ஆய்வகங்களாக வளர்ச்சி அடைந்து இருப்பது, முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும்  சுவாசக் கருவிகளின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்ததோடு ஏற்றுமதிகளையும் செய்து வருவது ஆகியவற்றை அவர் நினைவுகூர்ந்தார்.தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் போதும் அதே அளவு தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பை வெளிப்படுத்துமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

------



(Release ID: 1689094) Visitor Counter : 303