பிரதமர் அலுவலகம்

சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரை


விஸ்வபாரதியின் பயணம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது: பிரதமர்

விஸ்வபாரதி குறித்த குருதேவின் தொலைநோக்கு சிந்தனையும் தற்சார்பு இந்தியா கோட்பாட்டின் அம்சம் தான் : பிரதமர்

Posted On: 24 DEC 2020 2:02PM by PIB Chennai

சாந்திநிகேதன், விஸ்வபாரதியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர், விஸ்வபாரதியின் நூறாண்டு காலப் பயணம் மிகவும் விசேஷமானது என்றும், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றும் கூறினார். குருதேவின் தொலைநோக்கு சிந்தனையின் உண்மையான அடையாளமாகவும், அன்னை பாரதியின் கடின உழைப்பின் அடையாளமாகவும் இந்தப் பல்கலைக்கழகம் இருக்கிறது என்று அவர் கூறினார். குருதேவ் உருவாக்கிய இலக்குகளை எட்டுவதற்கு விஸ்வபாரதி ஸ்ரீநிகேதன் மற்றும் சாந்திநிகேதன் தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

விஸ்வபாரதி மூலம் உருவாகும் கருத்துகளை உலகம் எங்கும் இந்த நாடு பரப்பி வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலக நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாரிஸ் ஒப்பந்தத்தின் படி நிர்ணயித்த சுற்றுச்சூழல் இலக்குகளை எட்டுவதற்கு சரியான பாதையில் செல்லும் ஒரே பெரிய நாடாக இந்தியா மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட சூழலை நினைவு கூர வேண்டும் என்று மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தின் இலக்குகள், இந்தப் பல்கலைக்கழகத்தின் இலட்சியங்களை ஒத்திருந்தன என்று அவர் குறிப்பிட்டார். இந்த இயக்கத்துக்கு நீண்ட காலத்திற்கு முன்பாகவே அடித்தளம் இடப்பட்டது என்பது தான் உண்மை என்றார் அவர். பல நூறாண்டுகளாக நடந்து வந்த பல இயக்கங்களின் மூலம் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கு பலம் சேர்ந்தது என்று பிரதமர் கூறினார். பக்தி இயக்கம் மூலம் இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு பலம் பெற்றது. பக்தி மிகுந்த காலத்தில் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த துறவிகள், நாட்டின் உணர்வு நிலையை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். பக்தி இயக்கம் காரணமாகத்தான் போராட்ட இந்தியாவை, நூற்றாண்டுகளாக ஒருமைப்பாட்டுடனும், நம்பிக்கையுடனும் காப்பாற்ற முடிந்தது என்றார் அவர்.

திரு. ராமகிருஷ்ண பரமஹம்சர் மூலமாகத்தான் இந்தியாவுக்கு சுவாமி விவேகானந்தர் கிடைத்தார் என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் பக்தி, அறிவு மற்றும் செயல்பாடு ஆகியவை இயல்பாகவே அடங்கியிருந்தன. பக்தியின் பார்வையை விசாலப்படுத்தி, கர்மாவுக்கு விளக்கம் தந்து, தனிநபர் மற்றும் அமைப்பின் ஆக்கம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதில், ஒவ்வொரு மனிதனிடமும் தெய்வீகத்தன்மையை விவேகானந்தர் கண்டார். பக்தி இயக்கத்தின் தலைசிறந்த துறவிகள் வலுவான அடித்தளத்தை உருவாக்கினர் என்று பிரதமர் மோடி கூறினார்.

பல நூறாண்டு கால பக்தி இயக்கத்துடன், கர்மா இயக்கமும் நடைபெற்றது. சத்ரபதி சிவாஜி, மஹரன் பிரதாப், ஜான்சி ராணி, ராணி சின்னம்மா, பாக்வா பிர்சா முண்டா உள்ளிட்டவர்களை பிரதமர் உதாரணங்களாக முன்வைத்தார். இந்திய மக்கள் அடிமைத்தனம் மற்றும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போராடினார்கள். கர்மா எண்ணத்தில் உறுதியான செயல்பாடு, அநீதி மற்றும் அத்துமீறலுக்கு எதிராக சாமானிய மக்கள் செய்த தியாகம் ஆகியவை அப்போது உச்சத்தில் இருந்தன. பிந்தைய காலத்தில் நமது சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கியமான உத்வேகத்தை அளிப்பதாக அவை இருந்தன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பக்தி, கர்மா, ஞானம் என்ற மூன்று முக்கிய அம்சங்கள் சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வளர்ப்பதில் முக்கியமான பங்கினை வகித்தன என்றார் அவர். அறிவைப் பரப்பி சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெறுவது, இந்தியாவுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய தலைமுறையினரை உருவாக்குவது என்ற சித்தாந்தப் புரட்சி அப்போதைய தேவையாக இருந்தது. அதில் புகழ்பெற்ற கல்வி நிலையங்களும், பல்கலைக்கழகங்களும் முக்கியமான பங்காற்றின என்று பிரதமர் கூறினார். இந்தப் பல்கலைக்கழகங்கள் புதிய சக்தி தருபவையாக, புதிய வழிகாட்டுதல் தருபவையாக இருந்தன. இந்திய சுதந்திரத்துக்காக நடைபெற்ற சிந்தாந்த இயக்கத்திற்குப் புதிய வடிவம் கொடுத்தன என்று அவர் தெரிவித்தார்.

பக்தி இயக்கம், ஞான இயக்கத்தில் நாம் ஒன்றுபட்டு அறிவின் பலத்தை உருவாக்கினோம். நம் உரிமைகளுக்காகப் போராடும் உரிமையை கர்மா இயக்கம் நமக்குக் கொடுத்தது என்று பிரதமர் கூறினார். நூறாண்டுகளுக்கும் மேல் நடந்த சுதந்திரப் போராட்ட இயக்கம், தியாகம், தவம், பக்தி ஆகியவற்றின் தனித்துவமான உதாரணமாக இருந்தது. இந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் செய்ய முன்வந்தனர்.

வேதங்கள் முதல் விவேகானந்தர் வரையில் தேசிய விழிப்பு நிலையின் தொடர்ச்சியான விஷயங்கள், தேசியம் குறித்த குருதேவின் கருத்துகளில் இடம் பெற்றன என்று பிரதமர் தெரிவித்தார். உலக நாடுகளில் இந்தியாவைப் பிரிப்பதில் கவனம் இல்லை. இந்தியாவில் சிறந்ததாக உள்ள விஷயங்களால் உலகம் பயன்பெற வேண்டும், அதுதான் உலகிற்கு நல்லது, உலகிடம் இருந்து இந்தியாவும் கற்றுக் கொள்ள வேண்டும். `விஸ்வபாரதி' என்ற பெயர் இந்தியா மற்றும் உலகிற்கு இடையிலான தொடர்பின் அடையாளமாக இருக்கிறது. விஸ்வபாரதி குறித்த குருதேவின் தொலைநோக்கு சிந்தனை, தற்சார்பு இந்தியாவின் சாராம்சமாக இருக்கிறது. தற்சார்பு இந்தியா பற்றிய பிரச்சாரமும், இந்தியாவின் நலனுக்கான, உலகின் நலனுக்கான பாதையில் அமைந்துள்ளது. இந்தியா அதிகாரம் பெறுவதற்கான இயக்கமாக, இந்தியாவின் வளமையில் இருந்து உலகிற்கு வளம் சேர்ப்பதற்கான இயக்கமாக இது இருக்கும் என்று பிரதமர் திரு. மோடி கூறினார்.

***********************



(Release ID: 1683361) Visitor Counter : 171