பிரதமர் அலுவலகம்

இந்தியா பங்களாதேஷ் நாடுகளுக்கிடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு குறித்த கூட்டறிக்கை

Posted On: 17 DEC 2020 4:07PM by PIB Chennai

1.இந்தியக் குடியரசின் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் மாண்புமிகு ஷேக் ஹசீனா அவர்களும் 17 டிசம்பர் 20 அன்று மெய்நிகர் உச்சி மாநாடு ஒன்றை நடத்தினர். இருதரப்பு உறவுகள் குறித்த அனைத்து அம்சங்கள் பற்றியும் இரு தரப்பினரும் விரிவான விவாதங்கள் நடத்தினர். மண்டல, சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியா-பங்களாதேஷ் கூட்டு

2. இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே நிலவும் இணைப்பின் தன்மையைக் குறிக்கும் வகையிலான இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்று, கலாச்சார, மொழி ரீதியான பந்தங்களையும் பொதுவான இதர தனித்தன்மை கொண்ட விஷயங்களையும் அடிப்படையாகக்கொண்ட இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலைமை குறித்து இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையேயான உறவுகள் கொள்கை ரீதியிலான கூட்டு என்ற நிலைக்கு அப்பால் இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலான அனைத்தையும் உள்ளடக்கிய இணைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் சகோதரத்துவ உறவுகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதை அவர்கள் வலியுறுத்தினார்கள். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த முக்தியோதாக்களுக்கும், இந்திய இராணுவ வீரர்களுக்கும் அவர்கள் புகழஞ்சலி செலுத்தினார்கள். இரு நட்பு நாடுகளிலும் உள்ள மக்களின் விருப்பத்திற்கேற்ப ஜனநாயகம் சமத்துவம் ஆகியவற்றின் பெருமை மிக்க மதிப்புகளை உயர்த்திப்போற்றி, பாதுகாக்க உறுதி மேற்கொண்டனர்.

3. 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனா தில்லிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டு ஆலோசனைக் குழுவின் ஆறாவது கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதை இரு தரப்பினரும் நினைவு கூர்ந்தனர்.

சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு - உலக அளவிலான பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ளுதல்

4. இரு தரப்பினரும் தத்தமது நாடுகளில் கோவிட் 19 பெருந்தொற்றின் தற்போதைய நிலை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தற்போதைய நெருக்கடி காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து, இணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் முறை குறித்து, இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின்அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் என்ற கொள்கையின்கீழ் இந்தியா, பங்களாதேஷிற்கு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது என்பதை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கப்படும் போது பங்களாதேஷிலும், தடுப்பூசி கிடைக்க வகை செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்தத் துறையில் தனியார் பிரிவினருக்கு இடையேயான இருதரப்பு இணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் குறித்துக் கொண்டனர்.

5. மருத்துவ சிகிச்சை முறைகளும் தடுப்பூசி உற்பத்தியிலும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக இந்தியா கூறியது. வங்காள மொழியில் மருத்துவத் துறையினருக்கான திறன் கட்டமைப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக இந்தியாவிற்கு, பங்களாதேஷ் பாராட்டு தெரிவித்தது

 

கலாச்சார ஒத்துழைப்பு - வரலாற்று இணைப்பின் கூட்டுக் கொண்டாட்டம்

 6. “முஜீப் பார்ஷோகொண்டாட்டங்களையொட்டி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதற்காக இந்தியாவிற்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார். பங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி இந்தியா வெளியிட்டுள்ள நினைவு அஞ்சல் தலை ஒன்றை இரு பிரதமர்களும் இணைந்து வெளியிட்டனர். முன்னதாக, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது மகாத்மா காந்தியைக் கௌரவிக்கும் வகையில் பங்களாதேஷ் அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

7. இந்த நிகழ்ச்சியின்போது இருபதாம்நூற்றாண்டின் இருபெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, பங்கபந்து ஆகியோர் குறித்த டிஜிட்டல் கண்காட்சி பற்றிய அறிமுக வீடியோ ஒன்றும் திரையிடப்பட்டது. பங்களாதேஷிலும் இந்தியாவிலும் பல்வேறு நகரங்களிலும், உலகின் தெரிந்தெடுக்கப்பட்ட சில நகரங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்தக் கண்காட்சி நீதி, சமத்துவம், அகிம்சை ஆகிய பண்புகள் மூலமாக மக்களை - குறிப்பாக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் என்று இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

8. பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம், இந்தியத் திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் இயக்கப்படும். இதற்கான பணிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் என்று இருதரப்பும் குறித்துக் கொண்டன.

9. 2021ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப்போரின் 50வது ஆண்டையும், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே இருதரப்பு தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியுள்ளதைக் குறிக்கும் வகையிலும் இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் 2021 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று குறித்துக் கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் குறிக்கும் வகையில், இந்தியாவிலும், பங்களாதேஷிலும், மூன்றாம் உலக நாடுகளிலும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இணைந்து ஏற்பாடு செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.

10. பங்களாதேஷ்- இந்தியா எல்லைப்பகுதியில் முஜிப் நகர் முதல் நோடியா வரையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சாலைக்கு, பங்களாதேஷ் விடுதலைப் போரின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகத்திகழ்ந்ததைக் குறிக்கும் வகையில், "ஷதிநோட்ட ஷொரோக்" என்று பெயரிட வேண்டும் என்று பங்களாதேஷ் இந்தியாவிடம் வைத்துள்ள கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு பங்களாதேஷ் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

11. கலாச்சாரம், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், இளைஞர் நலன், விளையாட்டு, மக்களுக்கான ஊடகம் ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்காக, தொடர்ந்து குழுக்களைப் பரிமாறிக்கொள்வது தொடர வேண்டும் என்று இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

எல்லைப் பராமரிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு

12. இச்சாமதி, காளிந்தி, ராய் மொங்கோல், ஹரியபங்கா ஆகிய ஆறுகளின் தடங்களிலிருந்து மெயின் பில்லர் ஒன்று முதல் நில எல்லை டெர்மினஸ் வரை புதிய தட வரைபடங்கள் வரைந்து எல்லைகளை நிரந்தரமாக உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் கூட்டு எல்லை மாநாட்டை விரைவில் கூட்டவும் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். குஹ்சியாரா நதியோரம் உள்ள சர்வதேச எல்லையை நிரந்தர எல்லையாக மாற்றுவதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

13. ராஜ் ஷாகி மாவட்டத்திற்கருகே பத்மா நதியோரத்தில் 1.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு "இன்னஸன்ட் பாஸேஜ்" நதி வழியிலான வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பங்களாதேஷ் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்தியத் தரப்பு உறுதியளித்தது.

14. திரிபுரா (இந்தியா)- பங்களாதேஷ் பிரிவில் தொடங்கி இரு நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச எல்லைகளில் நிலுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எல்லையோர வேலிகள் அமைக்கும் பணியை நிறைவடையச் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். எல்லைப் பகுதிகளில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பது கவலைதரும் விஷயம் என்று ஒப்புக்கொண்ட இரு தலைவர்களும், எல்லை பாதுகாப்புப் படையினர் இது போன்ற நிகழ்வுகள் பூஜ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக இணைந்து கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். தற்போதைய ஒருங்கிணைந்தஎல்லை மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். ஆயுதங்கள், போதைப் பொருட்கள், போலி நாணயங்கள் ஆகியவை கடத்தப்படுவதற்கு எதிராகவும், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் இருநாட்டு எல்லை பாதுகாப்புப் படைகளும் சமீபத்தில் மேற்கொண்டுள்ள அதிகரிக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் இரு தரப்பும் திருப்தி தெரிவித்தன.

15. பங்களாதேஷும் இந்தியாவும் அடிக்கடி இயற்கைப் பேரிடருக்குள்ளாகக் கூடியவை என்பதைக் குறித்துக் கொண்ட இரு தலைவர்களும், பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

16. உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தீவிரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அங்கீகரித்த இரு தரப்பும், அனைத்து வகைகளிலும், அனைத்து விதமான தீவிரவாதமும் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளதாக மீண்டும் கூறினர்.

17. இருநாடுகளுக்குமிடையே மக்களுக்கிடையிலான போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று இரு தரப்பும் வலியுறுத்தின. இந்தியாவில் உள்ள நிலப் பகுதிகளில் இருந்து, தக்க ஆவணங்களுடன் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் மக்கள் மீதான பயணத் தடையை, அகாரா (திரிபுரா) மற்றும் கோஜதன்ஸா (மேற்கு வங்கம்) ஆகிய சோதனைச் சாவடிகளில் தொடங்கி படிப்படியாக நீக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி பங்களாதேஷ் கோரிக்கை விடுத்தது.

வளர்ச்சிக்கான வர்த்தகக்கூட்டு

18. 2011ஆம் ஆண்டுமுதல், எஸ் எஃப்டி வின்கீழ், பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு தீர்வையும்,கோட்டாவும் இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளதற்கு பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார். துறைமுகக் கட்டுப்பாடுகள், பல்வேறு நடைமுறைகளால் ஏற்படும் இடையூறுகள், தனிமைப்படுத்தப்படுவதற்கான கட்டுப்பாடுகள் உட்பட கட்டணம் சாராத பல்வேறு இடையூறுகள் குறித்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இதனால் இரு நாடுகளும் எஸ் எஃப் டி கீழ் முழு பயனடைய முடியும் என்றும், வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் இரு பிரதமர்களும் வலியுறுத்தினார்கள். இந்தியாவிலிருந்து பங்களாதேஷிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இன்றியமையாப் பொருட்கள், அந்தநாட்டின் உள்நாட்டு சந்தையை பாதிக்கக் கூடிய ஒரு முக்கிய அம்சமாகும் என்பதால் இந்திய அரசு ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளில் கொண்டுவரும் சட்டதிருத்தங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று இந்தியாவை பங்களாதேஷ் தரப்பு கேட்டுக்கொண்டது. இந்தக் கோரிக்கை குறித்து இந்தியத் தரப்பு குறித்துக் கொண்டது.

19. கோவிட் 19 காலத்தின் போது பொருள் வழங்கு தொடர் எந்தவித இடையூறும் இல்லாமல், தற்போதைய ரயில் வழிப்பாதைகள் மூலமாகவும், பக்கவாட்டுக் கதவு கொண்ட கன்டெய்னர்கள் பயன்படுத்தியும், சரக்குப் பெட்டக ரயில்கள் மூலமாகவும் சரக்குப் போக்குவரத்து கையாளப்பட்டு, பராமரிக்கப்பட்டதற்கு வர்த்தகத் துறை ரயில்வே துறை அதிகாரிகள் அளித்த ஒத்துழைப்புக்கு இரு தலைவர்களும் பாராட்டுத் தெரிவித்தார்கள்.

20. இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார வர்த்தக உறவுகளுக்கான மிகச்சிறந்த வாய்ப்புகள் உள்ளதை அங்கீகரித்த இரு பிரதமர்களும் இரு நாடுகளுக்கிடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சி பி ) ஒன்றை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தற்போது நடைபெற்று வரும் கூட்டு ஆய்வை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

21. முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய - பங்களாதேஷ் ஜவுளித்துறை அமைப்பின் முதலாவது கூட்டத்தை வரவேற்ற இரு தலைவர்களும் ஜவுளித்துறையில் அதிக அளவிலான இணைப்புகளையும் கூட்டு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஜவுளித்துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது குறித்து இந்திய அரசின் மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கும், பங்களாதேஷ் அரசின் ஜவுளி மற்றும் சணல் துறை அமைச்சகத்துக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் விவாதங்களை விரைந்து முடிக்குமாறு தலைவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.தேவையற்ற பொருட்களைக் கொட்டுவதற்கு எதிராக விதிக்கப்படும் தீர்வை, பங்களாதேஷில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சணல் பொருட்கள் மீது விதிக்கப்படும் சுற்று வழிக்கெதிரான தீர்வை (ஆன்டிடம்பிங், ஆன்டிசர்கம்வென்ஷன்ட்யூட்டி) ஆகியவை தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைகளை வரவேற்ற அவர்கள் டி டி தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

செல்வச் செழிப்புக்கான இணைப்பு

22. இருநாடுகளுக்குமிடையே 1965 ஆம் ஆண்டுக்கு முன் இருந்த ரயில்வே இணைப்புகளை மீண்டும் புதுப்பிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளின் தொடர் முன்னேற்றம் குறித்து இரு பிரதமர்களும் திருப்தி தெரிவித்தனர். ஹல்திபாரிக்கும் (இந்தியா) சிலஹட்டிக்கும் (பங்களாதேஷ்) இடையே புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ரயில் இணைப்பை இருவரும் இணைந்து துவக்கி வைத்தனர். இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தையும், இரு தரப்பு மக்களுக்கும் இடையேயான உறவுகளையும் வலுப்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். கோவிட் நிலைமை சீரடையும் போது இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டது.

23. இருநாடுகளுக்கும் இடையே இருதரப்பு இணைப்பை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் கேட்டறிந்தனர். உள்நாட்டு நீர்வழி வர்த்தக ஒப்பந்தம் (பி டபுள்யு டி டி) இரண்டாவது திருத்தசேர்க்கை (அடெண்டம்) கையெழுத்திடப்பட்டது; இந்தியப் பொருட்கள் கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவிற்கு சட்டோகிராம் வழியாக எடுத்துச் செல்லப்படுவதற்கான பரிசோதனை ஓட்டம்; பி டபிள்யூ டி டி கீழ் சோனாமுறா-தவுட்கண்டி ஒப்பந்த வழித்தடத்தை இயக்கியது ஆகியவை உட்பட பல்வேறு முயற்சிகளை அவர்கள் பாராட்டினர். சட்டோகிராம் மோங்கிலா துறைமுகங்கள் வழியாக இந்தியப்பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதை இயக்குவதற்கு விரைந்து செயல்பட வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

24. இரு நாடுகளுக்குமிடையே பயணிகள் போக்குவரத்தையும், சரக்குப் போக்குவரத்தையும் எளிமையாக்குவதற்கும், இரு நாடுகளுக்கிடையே மேலும் நல்ல முறையில் இணைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் பி பி என் மோட்டார் வாகன ஒப்பந்தத்தை விரைவில் இயக்குவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதற்குத் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தம் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுடன் விரைவில் கையெழுத்திடப்பட வேண்டும். பின்னர் பூட்டான் இணைந்து கொள்வதற்கான வகையில் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

25. இந்தியா, மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், மூன்று வழி நெடுஞ்சாலைத் திட்டம் குறித்து மிகுந்த ஆர்வம் தெரிவித்த பங்களாதேஷ் பிரதமர், தெற்கு மண்டலத்திற்கும் தென்கிழக்காசிய மண்டலத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்தில் பங்களாதேஷையும் இணைத்துக் கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோரினார். இதேபோல் மேற்கு வங்கத்திலிருந்து (ஹில்லி) மேகாலயாவிற்கு (மகேந்திர கஞ்சு) பங்களாதேஷ் வழியாகச் செல்வதற்கு இணைப்பு வழங்க அனுமதி வழங்குமாறு இந்தியத் தரப்பு பங்களாதேஷைக் கேட்டுக் கொண்டது.

26. இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையே மிகக்குறைந்த அளவிலான நெகட்டிவ் பட்டியல் கொண்ட குறைந்தபட்சம் ஒரு தரைவழித் துறைமுகமாவது இரு நாடுகளுக்கிடையே இருக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. அகர்தலா அக்காரா தொடங்கி இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள அண்டை மாநிலங்களுடன் இது தொடங்கலாம் என்று கோரிக்கையை வலியுறுத்தியது. பணிகள் நிறைவடைந்த பிறகு ஃபெனி பாலத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் வட கிழக்குப் பகுதிகளுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ள பங்களாதேஷ் ட்ரக்குகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் தரப்பு கோரிக்கை வைத்தது.

27. இரு நாடுகளுக்குமிடையேயான துடிப்புமிக்க வளர்ச்சி ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் அங்கீகரித்தன. எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுக்குள் உள்ள திட்டங்களை விரைவில் நிறைவடையச் செய்வதற்காக, அவை தொடர்பான பணிகளைத் தொடர்ந்து பரிசீலிப்பதற்காக பங்களாதேஷின் பொருளாதார உறவுகள் பிரிவின் செயலர் மற்றும் டாக்காவில் உள்ள இந்தியத் தூதர் தலைமையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட உயர்நிலை கண்காணிப்புக் குழு சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்பதை இரு தரப்பும் வலியுறுத்தின.

28. கோவிட் 19 காலத்தின் போது இரு தரப்பிலிருந்தும் பயணம் செய்ய வேண்டிய அவசரத்தேவை இருந்தவர்களின் வசதிக்காக இரு தரப்புக்கும் இடையே தாற்காலிகமான விமானப் போக்குவரத்து பப்ள் துவக்கியது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். தரை மார்க்கமாகவும் விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே அன்றாடப் போக்குவரத்தை மீண்டும் துவக்குமாறு இந்தியத் தரப்பை பங்களாதேஷ் தரப்பு கேட்டுக்கொண்டது.

நீராதாரம், மின்சாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு

 

29. இரு நாட்டு அரசுகளும் 2011ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டபடி டீஸ்டா நீர் பங்கீடு தொடர்பான இடைக்கால ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்திட வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தினார். இதுதொடர்பாக இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் எடுத்துரைத்தார்.

30. மனு, மஹுரி, கொவாய், கும்டி, தர்லா, தூத்குமார் ஆகிய ஆறு இணை நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான இடைக்கால ஒப்பந்தத்திற்கான வரையறைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.

31. நீர்ப்பாசன வசதிகளுக்காக குஷியாரா நதி நீரைப் பயன்படுத்துவதற்காக ராஹிம்பூர் காலில் எஞ்சியுள்ள பகுதிகளில் தோண்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு சம்மந்தப்பட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு இந்தியத் தரப்பு தகவல் அளிக்க வேண்டும் என்று பங்களாதேஷ் தரப்பு கேட்டுக்கொண்டது. குஷியாரா நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது நிலுவையில் உள்ள நிலையில், குஷியாரா நதியில் இருந்து இருதரப்பும் எடுத்துக் கொள்ளக்கூடிய நீரின் அளவைக் கண்காணிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இந்தியத்தரப்பிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இணை நதிகள் குழு (ஜே ஆர் சி) ஆற்றிய பங்களிப்பு குறித்து நினைவுகூர்ந்த இரு தலைவர்களும் செயலர்கள் அளவிலான ஜே ஆர் சி குழுவின் அடுத்த சுற்று கூட்டம் விரைவில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்கள்.

 

32. தனியார் துறை உட்பட மின்சாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் நல்ல ஒத்துழைப்பு இருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தியா பங்களாதேஷ் நட்பு பைப்லைன் திட்டம், மைத்திரி சூப்பர் அனல் மின் திட்டம் மற்றும் இதர திட்டங்கள் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட இருதரப்பும் ஒப்புக்கொண்டன. முதலீட்டை ஒழுங்குபடுத்துதல், தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டு ஆய்வுகள், பயிற்சி, ஹைட்ரோகார்பன் இணைப்பு மேம்பாடு, ஆகியவற்றின் மூலமாக எரிசக்தி இணைப்புகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு வரையறை கையெழுத்திடப்பட்டதை இருதரப்பும் வரவேற்றன. எரிசக்தித் திறன், உயிரி எரிபொருள் உட்பட தூய்மையான எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. பசுமையான, தூய்மையான, மீண்டும் பயன்படுத்தக்கூடிய எரிபொருள் பயன்பாட்டை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு ஏற்ப நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் உட்பட துணை மண்டல ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. மின்சாரம், எரிசக்தி இணைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டன

 

மியான்மரில் ராக்கினிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள்

33. மியான்மரில் ராக்கின் என்னுமிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட 1.1 மில்லியன் மக்களுக்கு உறைவிடம் அளித்து, மனிதாபிமான அடிப்படையில் உதவி வரும் பங்களாதேஷின் தாராள குணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தார். இந்த மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும், தொடர்ந்து தங்கள் நாடு திரும்புவதன் அவசியத்தை இரு பிரதமர்களும் மீண்டும் வலியுறுத்தினார்கள். ஐநா பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் ஷேக் ஹசினா வாழ்த்து தெரிவித்தார். மியான்மரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ரோஹிங்யாக்களை மீண்டும் மியான்மருக்கு அனுப்ப இந்தியா உதவும் என்று பங்களாதேஷ் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

 

மண்டலத்திலும், உலகிலும் கூட்டாளிகள்

 

34. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவளித்ததற்காக பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். ஐநா பாதுகாப்புக் குழுவின் சீர்திருத்தங்களை விரைவில் மேற்கொள்ளுதல்; பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளல்; தொடர் மேம்பாட்டு குறிக்கோள்களை அடைதல்; புலம்பெயர்ந்தோர் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அடைவதற்காக தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. அஜெண்டா 2030ல் கூறியுள்ளபடி தொடர் மேம்பாட்டுக் குறிக்கோள்களை அடைவதற்கான வழிகளை நடைமுறைப்படுத்துவதற்காக உலக அளவிலான கூட்டு முயற்சிகளின் கீழ், வளர்ந்த நாடுகள் அளித்துள்ள உறுதிப்பாட்டை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இரு பிரதமர்களும் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

35. கோவிட் 19 பெருந்தொற்றையடுத்து நிலவும் மண்டல, உலக பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சார்க் மற்றும் பி ஐ எம் எஸ் டி இ சி போன்ற அமைப்புகள் முக்கியமான பங்கு வகிக்க வேண்டியுள்ளது என்று இரு தலைவர்களும் வலியுறுத்தினர். கோவிட் 19 பெருந்தொற்றின் துவக்க காலத்தில் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சார்க் அமைப்பின் தலைவர்களின் காணொலி மாநாடு ஏற்பாடு செய்ததற்காக இந்திய பிரதமருக்கு பங்களாதேஷ் பிரதமர் நன்றி தெரிவித்தார். தெற்காசிய பகுதியில் பெருந்தொற்று காரணமாக ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்காக அவசரகால உதவி நிதியத்தை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்ததற்காக இந்தியப் பிரதமருக்கு பங்களாதேஷ் பிரதமர் நன்றி தெரிவித்தார். சார்க் மருத்துவ மற்றும் பொது சுகாதார ஆராய்ச்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை மீண்டும் முன்வைத்த பங்களாதேஷ் பிரதமர் இது தொடர்பாக இந்திய ஆதரவை நாடினார். 2021ஆம் ஆண்டில் ஐ ஓ ஆர் ஏ அமைப்புக்கு பங்களாதேஷ் தலைமையேற்க உள்ளது. மேலும் சிறந்த அளவிலான கடல் பாதுகாப்புக்காகப் பணியாற்றுவதற்கு, இந்தியாவின் ஆதரவை பங்களாதேஷ் கோரியது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான அமைப்புக்கு தற்போது தலைமை வகித்து வரும் பங்களாதேஷிற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார்.

 

36. புதிய வளர்ச்சி வங்கியின் பணிகளுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா பாராட்டுத் தெரிவித்தார். இந்த அமைப்பில் சேருமாறு பங்களாதேஷிற்கு இந்தியா விடுத்த அழைப்புக்கு அவர் நன்றி கூறினார். கட்டமைப்பு மேம்பாடு உட்பட பல்வேறு துறைகளில் வங்கி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு பங்களாதேஷ் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

இருதரப்பு ஆவணங்கள் கையெழுத்து;

பல்வேறு திட்டங்கள் துவக்கம்

 

37. இந்த மாநாட்டின் போது பின்வரும் இரு தரப்பு ஆவணங்கள், இந்திய பங்களாதேஷ் அரசு அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டன

 

  • ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு வரையறை (எஃப் ஓ யூ)
  • எல்லைகளுக்கு இடையிலான யானை பாதுகாப்பு ஒப்பந்தம் (ப்ரோடோகால்)
  • அதிக தாக்கம் அளிக்கக் கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர பொதுத்துறை அமைப்புகள் மூலமாக நடைமுறைப்படுத்துதல்
  • பரிஷால் நகர மாநகராட்சிக்கு லம்சோரி பகுதியில் கழிவுப் பொருட்கள்/ திடக் கழிவு அகற்றும் இடத்தை மேம்படுத்துவது; அதற்கான கருவிகளை வழங்குவது ஆகியவை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இந்தியா பங்களாதேஷ் சி இ -களுக்கான அமைப்புக்கான நிபந்தனை குறிப்புகள்
  • பங்களாதேஷில் டாக்காவில் உள்ள தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு அருங்காட்சியகத்துக்கும், இந்தியாவில் புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • விவசாயத்துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

இருதரப்பு வளர்ச்சிக்கான பின்வரும் கூட்டுத் திட்டங்களும் துவக்கி வைக்கப்பட்டன:

  • ராஜ்சாகி நகரத்தில் நகர அழகுபடுத்தல் மற்றும் மேம்பாட்டு திட்டம்
  • குல்நாவில் காளிஷ்பூர் காலேஜியேட் மகளிர் பள்ளி கட்டுதல்
  • புதிய இயல்பு சூழலுக்கு இடையே இந்த ஏற்பாடுகளை செய்ததற்காக இரு பிரதமர்களும் பரஸ்பரம் நன்றி தெரிவித்துக்கொண்டனர்
  • பங்களாதேஷ் விடுதலை பெற்ற 50 ஆவது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டு விழாவையொட்டியும் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்க வருமாறு தாம் விடுத்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டமைக்காக, பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்தார்.

 

************



(Release ID: 1681671) Visitor Counter : 363