பிரதமர் அலுவலகம்
இந்தியா-லக்சம்பர்க் மெய்நிகர் உச்சிமாநாடு குறித்த கூட்டறிக்கை
Posted On:
19 NOV 2020 8:24PM by PIB Chennai
- இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் பிரதமர் திரு. சேவியர் பெட்டில் ஆகியோர் இடையிலான முதலாவது இந்திய-லக்சம்பர்க் மெய்நிகர் உச்சிமாநாடு 2020 நவம்பர் 19ம் தேதி நடைபெற்றது.
- பகிரப்பட்ட கொள்கைகள், ஜனநாயக மாண்புகள், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா, லக்சம்பர்க் இடையே நல்லுறவுகள் நிலவுவதாக இரு நாட்டு பிரதமர்களும் குறிப்பிட்டனர்.
- 1948-ம் ஆண்டு ராஜீய உறவுகள் உருவாக்கப்பட்டதில் இருந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவும், இதயபூர்வமான நல்லுறவும் நிலவி வருவதாக இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தக் காலகட்டத்தில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். ஆனால், வர்த்தகம், நிதி, உருக்கு, விண்வெளி, ஐசிடி, புத்தாக்கம், உற்பத்தி, வாகனத்தொழில், நீடித்த வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் உறவுகளின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
- இந்தியா, லக்சம்பர்க் இடையே உயர்மட்ட நிகழ்வுகள் திருப்தியளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், முன்னதாக கோவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டியூக் கோமகனின் இந்தியப் பயணத்தை, தொற்று நிலை சீரடைந்ததும், பரஸ்பரம் வசதியான தேதியில் ஆவலுடன் எதிர்நோக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இருதரப்பு நலன் கொண்ட உலக விஷயங்களில் இந்தியா, லக்ச்ம்பர்க் இடையே கருத்தொற்றுமை வளருவதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் நிலவ அர்ப்பணிப்புடன் செயல்பட அவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். இச்சூழலில், இந்திய வெளியுறவு அமைச்சகம், லக்சம்பர்க் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே அடிக்கடி இருதரப்பு ஆலோசனைகளுக்கான நிறுவனப்படுத்துதலை அவர்கள் வரவேற்றுள்ளனர்.
பொருளாதார உறவு
- இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவுகளை இரு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர். இந்தியா, லக்சம்பர்க் ஆகியவற்றின் நிறுவனங்கள் தங்களது இருப்பை பரஸ்பரம் விரிவுபடுத்தி வருவது குறித்தும் அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தச் சூழலில், வர்த்தக ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைக் காண்பதற்கு இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா, லக்சம்பர்க் நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர வர்த்தக ஒத்துழைப்பை உருவாக்கி ஆதரவளிக்க, இன்வெஸ்ட் இந்தியா, லக்சின்னோவேசன் இடையே ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தாவதை இரு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர்.
- உருக்குத் துறையில் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக ஒத்துழைப்பு நிலவுவதை இரு பிரதமர்களும் கவனத்தில் கொண்டுள்ளனர். பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகளைக் கண்டறியுமாறு எஸ்எம்இ-க்கள், ஸ்டார்ட் அப்கள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இரு தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர். தூய்மை கங்கை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச் சூழல், தூய்மையான எரிசக்தி, நீடித்த தொழில்நுட்பங்கள் தொடர்பான பல்வேறு இந்தியாவின் முன்முயற்சிகளில் லக்சம்பர்க் நிறுவனங்களுக்கு ஆர்வம் அதிகரிப்பதை அவர்கள் குறித்துக் கொண்டனர்.
- பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான, இந்தியாவுக்கும், பெல்ஜியம்-லக்சம்பர்க் பொருளாதார யூனியனுக்கும் இடையிலான 17-வது கூட்டுப் பொருளாதார ஆணைய கூட்டத்தை தலைவர்கள் ஆவலுடன் எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
- விநியோக சங்கிலிகளை அதிக விரிதிறனுடனும், பொறுப்பான, நிலைத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கடந்த சில பத்தாண்டுகளாக விநியோக சங்கிலிகள் அதிக சிக்கல் நிறைந்ததாக, உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு குழுவினரை நம்பியிருக்கும் நிலை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். எதிர்கால உலக விநியோக முறை, சுமுகமான, ஒத்துழைப்பு அடிப்படையில் அமைவதில் உள்ள சவாலை இரு தலைவர்களும் உணர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
நிதி
- பசுமை வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சியை உருவாக்க பசுமை நிதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ள இரு தலைவர்களும், லக்சம்பர்க் பங்கு சந்தை, இந்திய சர்வதேச பங்கு சந்தை பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளதை வரவேற்றுள்ளனர். செபி மற்றும் சிஎஸ்எஸ்எப் ஆகிய ஒழுங்குமுறை ஆணையங்கள் இடையே கையெழுத்தாக உள்ள உத்தேச உடன்படிக்கை பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இது நிதித்துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் முன்னணி சர்வதேச நிதி மையமாக விளங்கும் லக்சம்பர்க், இந்தியாவின் நிதி சேவைகள் தொழில் துறையை சர்வதேச சந்தைகளுடன் இணைக்க பாலமாக செயல்பட்டு, ஐரோப்பிய, உலக முதலீட்டாளர்கள் அணுகும் வகையில் செயல்பட முடியும் என்று பிரதமர் பெட்டில் தெரிவித்துள்ளார்.
- பசுமை மற்றும் மேலும் நீடித்த பொருளாதாரத்தை நோக்கிய உலக மாறுதலுக்கு ஆதரவளிப்பதில் நிதி தொழில் துறை முக்கிய பங்காற்றுவதாக இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இது தொடர்பாக, நீடித்த நிதி மேம்பாட்டுக்கு கூட்டு முன்முயற்சிகளைக் கண்டறிந்து மேம்படுத்த அவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். மேலும், இரு தலைவர்களும், நிதித் துறையில் புதுமை மற்றும் டிஜிட்டல் மயமாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இரு நாடுகளின் ஸ்டார்ட் அப் சமுதாயத்தினரை நிதி தொழில்நுட்பத்துடன் இணைக்கும் ஆற்றல் குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விண்வெளி மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பு
- இந்தியாவுக்கும் லக்சம்பர்க்குக்கும் இடையே நிலவி வரும், செயற்கைக்கோள் ஒலிபரப்பு , தகவல் தொடர்பு உள்ளிட்ட விண்வெளி ஒத்துழைப்பு குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். லக்சம்பர்க்கை சேர்ந்த விண்வெளி நிறுவனங்கள், தங்கள் செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவுவதற்கு இந்தியாவின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள துவங்கியுள்ளது பற்றியும் அவர்கள் திருப்தி வெளியிட்டனர். லக்சம்பர்க்கின் 4 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி49 இஸ்ரோவால் கடந்த 7-ம்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அவர்கள் வரவேற்றுள்ளனர். விண்வெளியின் மேற்பரப்பை அமைதி நோக்கத்துக்காகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்த விஷயத்தில், தற்போது இரு அரசுகளுக்கும் இடையே நடந்து வரும் ஆலோசனை அடிப்படையில் ஒத்துழைப்பு இறுதியாக்கப்படுவதை இரு தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
- கோவிட்-19 டிஜிட்டல்மயமாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில், டிஜிட்டல் பரப்பு மற்றும் உருவெடுக்கும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு அவசியம் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவும், லக்சம்பர்க்கும் டிஜிட்டல்மயமாக்கத்தை முறையே, டிஜிடல் இந்தியா திட்டம் மற்றும் டிஜிட்டல் லக்சம்பர்க் முன்முயற்சி மூலம் உருவாக்கி வருவதை அவர்கள் குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே வாய்ப்புகளை உருவாக்க அவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி
14 தேசிய மூளை ஆராய்ச்சி மையம், லக்சம்பர்க் சுகாதார நிறுவனம் மற்றும் லக்சம்பர்க் உயிரி மருத்துவ மையம் போன்ற இந்திய பங்குதார நிறுவனங்கள் இடையே நரம்பியல் நோய்கள் தொடர்பான துறையில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு திருப்தியளிப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர். பாம்பே, கான்பூர், சென்னை ஐஐடிக்கள், இந்திய தேசிய சட்டப் பள்ளி ஆகிவற்றுடன் லக்சம்பர்க் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தொடர்பு குறித்து குறிப்பிட்ட அவர்கள், இரு நாடுகளிலும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது பற்றியும் ஆலோசித்து ஒப்புக்கொண்டனர்.
கலாச்சாரம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகள்
15.தற்போதைய உலகச் சூழலில், அகிம்சையின் மாண்புகளை இந்தியாவும், லக்சம்பர்க்கும் பகிர்ந்து கொண்டுள்ளதை இரு தலைவர்களும் பாராட்டினர். இந்த விஷயத்தில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், லக்சம்பர்க் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டதை பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியாவிலும், லக்சம்பர்க்கிலும் 20 ஆண்டுகள் வாழ்ந்த இந்தியாவின் நவீன சிற்பி அமர்நாத் சேகல் (1922-2007) வடிவமைத்து, லக்சம்பர்க் நகரத்தின் நகராண்மை பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையின் அடிப்படையில் அந்த நினைவு அஞ்சல் தலை வடிவமைக்கப்பட்டதாக பிரதமர் பெட்டில் நினைவு கூர்ந்தார்.
16. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மக்களுக்கிடையிலான பரிவர்த்தனைகளை அதிகரிப்பது அவசியம் என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, லக்சம்பர்க்கில் எண்ணிக்கை ரீதியில் அதிகரித்துள்ள இந்திய வம்சாவளியினரின் ஆக்கபூர்வமான பங்களிப்பு அதன் செழுமையான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதை அவர்கள் வரவேற்றுள்ளனர். இதனை மேலும் வலுப்படுத்த, இந்தியாவுக்கும், பெனிலக்சுக்கும் இடையே, ராஜீய/ அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்போருக்கு விசா விலக்கு குறித்த உடன்படிக்கை மற்றும் புலம் பெயர்தல், நகர்வு உடன்படிக்கைக்கான உத்தேச வரைவு குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கொவிட்-19 பெருந்தொற்று
17. தற்போது பரவி வரும் கொவிட்-19 பெருந்தொற்று, அதன் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சுகாதார, சமூக, பொருளாதார விளைவுகள் குறித்து விவாதித்த இரு தலைவர்களும், அதனைச் சமாளிக்க தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். கோவிட்-19 மீட்புக்கு பின்பு, சமூக, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய, பெருந்தொற்றை செயல்திறனுடன் சமாளிக்க உலக ஒற்றுமை அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு, பொருளாதார ஊக்குவிப்பு மற்றும் நிதி ரீதியிலான விரிதிறன் அவசியம் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலக சுகாதார அமைப்பு போன்ற பொருத்தமான சர்வதேச நிறுவனங்கள் வாயிலாக, சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வெளிப்படையான, சரியான விதத்தில் தடையின்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், முன்னேற்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்திய-ஐரோப்பிய யூனியன் வரைவுக்குள், ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஐரோப்பிய யூனியன்-இந்திய உறவுகள்
18. ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், பாதுகாப்பான மேலும் நிலையான பசுமை உலகத்துக்கு பங்களித்தல் போன்ற மாண்புகளை உள்ளடக்கிய இந்திய-ஐரோப்பிய ஒன்றிய மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இருதலைவர்களும் அங்கீகரித்துள்ளனர். இந்த நிலையில், 2020 ஜூலை மாதம் 15-ம்தேதி வெற்றிகரமாக நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய யூனியன் மெய்நிகர் உச்சிமாநாடு குறித்து அவர்கள் திருப்தி வெளியிட்டனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, விரிவான, நீடித்த, விதிமுறைகள் அடிப்படையிலான இணைப்பு ஆகியவற்றின் மூலம் இந்திய-ஐரோப்பிய யூனியன் உறவுகளை மேலும் தீவிரப்படுத்த அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்திய-ஐரோப்பிய யூனியன் உறவுகளை வலுப்படுத்த, அந்த யூனியனின் நிறுவன உறுப்பு நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க் கடந்த பல பத்தாண்டுகளாக ஆற்றிய ஆக்கபூர்வமான பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார். இந்த சூழலில், இந்திய-ஐரோப்பிய யூனியன் உறவுகளை தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்த லக்சம்பர்க் அளித்துள்ள உயர் முன்னுரிமையை பிரதமர் பெட்டில் விளக்கினார். இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும், பரஸ்பர பாதுகாப்பு, முன்னேற்றம், நீடித்த மேம்பாடு ஆகியவற்றில் பொதுவான நலன் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
19. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு விஷயத்தில், இந்திய-ஐரோப்பிய யூனியன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது மிகவும் அவசியம் என்பதை இரு தலைவர்களும் அங்கீகரித்துள்ளனர். இத்தகைய சூழலில், சமன்பாடான, உன்னதமான, பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய தடையற்ற வர்த்தகம், முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளியிட்டனர்.
பன்னோக்கு ஒத்துழைப்பு
20. ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் அடிப்படை சார்ந்த, விதிமுறைகள் அடிப்படையிலான பன்னோக்கு ஒழுங்கை சீர்திருத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டனர். பருவநிலை மாற்றத்தை சமாளித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நீடித்த மேம்பாட்டு இலக்குகளை செயல்படுத்துல் ஆகியவற்றில் ஒத்துழைக்கும் தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் தெரிவித்தனர்.
21. இந்தச் சூழலில், பாரிஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேசிய அளவில் உறுதி செய்யப்பட்ட பங்களிப்பை செயல்படுத்துவதில் தங்களது தீர்மானமான உறுதியை அவர்கள் தெரிவித்தனர். சூரிய சக்தியை ஈடுபடுத்துவதற்கான, சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் தங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சுற்றுச்சூழல் சார்ந்த நீடித்த முதலீடுகளை நோக்கிய தனியார் முதலீடுகளைத் திரட்ட சர்வதேச நீடித்த நிதி தள விஷயத்திலும் இந்த தீர்மானத்தை அவர்கள் வெளியிட்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் சேரும் லக்சம்பர்க்கின் உத்தேசத்தை பிரதமர் பெட்டில் தெரிவித்தார்.
22. மேலும், புதிய பேரிடர் அபாயங்களைத் தடுக்கவும், ஏற்கனவே உள்ள பேரிடர் அபாயங்களைக் குறைக்கவும், பேரிடர் அபாயக் குறைப்பு பற்றிய சேன்டாய் வரைவை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க தங்களது தயார் நிலையை அவர்கள் வெளிப்படுத்தினர். இது தொடர்பாக, பேரிடர் குறுக்க உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்குள் இந்திய- ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்பை அவர்கள் எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
23. ஐ.நா பாதுகாப்பு சபையில் 2021-2022 வரை நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளதை பிரதமர் பெட்டில் வரவேற்றுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையை, நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து விரிவாக்குதல் உள்ளிட்ட அதன் சீர்திருத்தத்துக்கு லக்சம்பர்க் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் உறுதியான முடிவுகளை எட்டும் ஒட்டுமொத்த நோக்கத்துடன், ஐ.நா பொதுச்சபையின் 75-வது அமர்வின் உரை அடிப்படையிலான பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்தல் குறித்த, அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைமுறைகளை உறுதியுடன் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக, ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்படுவதில் லக்சம்பர்க் ஆதரவு அளிப்பதாக பிரதமர் பெட்டில் உறுதியளித்தார். அணுசக்தி விநியோகக் குழுவில் இந்தியாவின் பங்கேற்புக்கு ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதிலும், ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா நுழைவதிலும் லக்சம்பர்க் ஆற்றிய முக்கிய பங்கு உள்பட பல்வேறு சர்வதேச, பன்னோக்கு நிறுவனங்களில் இந்தியா உறுப்பினராக லக்சம்பர்க் தெரிவித்துவரும் ஆதரவுக்கு இந்தியாவின் பாராட்டை பிரதமர் மோடி தெரிவித்தார். ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் லக்சம்பர்க் 2022-2024 வரை உறுப்பினராவது உள்பட ஐ.நா சபையில் லக்சம்பர்க் உறுப்பினராக இந்தியாவின் ஆதரவுக்கு லக்சம்பர்க்கின் பாராட்டுதலை பிரதமர் பெட்டில் தெரிவித்தார்.
24. எல்லை கடந்த பயங்கரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தின் தொடர் அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்த இரு தலைவர்களும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், அவற்றின் விளைவுகளையும் கண்டித்தனர். பயங்கரவாதத்தைத் தடுத்து முறியடிக்க நிதி பணிக்குழு போன்ற அமைப்புகள் மற்றும் ஐ.நா-வில் மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு, இந்தியா- லக்சம்பர்க் இடையே ஒத்துழைப்பை தொடர்வதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
முடிவுரை
25. இந்தியா-லக்சம்பர்க் இடையிலான முதலாவது உச்சிமாநாடு இருதரப்பு உறவுகளில் புதிய கட்டத்துக்கு முத்திரை பதித்துள்ளது என்பதை இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இருதரப்பு உறவின் உருவெளி தோற்றத்தை விரிவுபடுத்தலை நோக்கிய தீர்மானத்தை அவர்கள் உறுதி செய்தனர். பரஸ்பரம் மற்றும் உலக நலன் சார்ந்த விஷயங்களில், பிராந்திய மற்றும் பன்னோக்கு அமைப்புகளில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைகளை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் உறுதி மேற்கொண்டனர். லக்சம்பர்க்குக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு பிரதமர் பெட்டில் அழைப்பு விடுத்தார்.
*****
(Release ID: 1674299)
Visitor Counter : 278
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam