பிரதமர் அலுவலகம்

தில்லி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

Posted On: 07 NOV 2020 2:42PM by PIB Chennai

வணக்கம்,

எனது அமைச்சரவை நண்பர்கள் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், திரு சஞ்சய் தோத்ரே, நிர்வாகிகள் வாரியத் தலைவர், தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் டாக்டர் ஆர் சிதம்பரம், பேராசிரியர் வி ராம் கோபால் ராவ், வாரிய மற்றும் செனட் உறுப்பினர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர், இளம் நண்பர்களே....

உலக தொழில்நுட்பத்தில் இன்று ஒரு மிக முக்கியமான நாள். தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வாயிலாக  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்று நாட்டிற்கு கிடைக்கிறார்கள். இந்த முக்கிய விழாவில் பட்டம் பெறும் மாணவர்களுக்கும், குறிப்பாக அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று, தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் 51- ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் இந்த உயர்கல்வி நிறுவனம் தனது வைர விழாவையும் தற்போது கொண்டாடுகிறது. நடப்பு தசாப்தத்திற்கான தனது தொலைநோக்கு அறிக்கையையும் தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் தயார் செய்துள்ளது. வைரவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த தசாப்தங்களில் உங்களது லட்சியங்கள் நிறைவேறவும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்திய அரசு உங்களுக்கு  அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளிக்கிறேன்.

இன்று, தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் சி வி ராமனின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுவது இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பானதாக ஆக்குகிறது. நான் அவருக்குத் தலை வணங்குகிறேன். அவரது தலைசிறந்த படைப்புகள் நம் அனைவரையும் குறிப்பாக எனது இளம் அறிவியல் நண்பர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கும்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்று உலக அளவில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கொவிட் பரவலுக்குப் பிந்தைய காலம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும், அதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். கூட்டங்கள், தேர்வுகள், வாய்மொழித் தேர்வுகள் அல்லது பட்டமளிப்பு விழாக்களில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும் என்று கடந்த ஆண்டு யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தற்போது மெய்நிகர் மெய்ம்மையும், மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மையும், செயல்முறை மெய்ம்மையை மாற்றி விட்டன.

உங்கள் குழுவிற்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். நாம் பட்டம் பெறும் ஆண்டில்தானா இதெல்லாம் நடக்க வேண்டும்? என்று நீங்கள் நிச்சயம் உங்களை கேட்டுக் கொள்வீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அதையே சற்று வித்தியாசமாக சிந்தியுங்கள். முதலாவதாக இருப்பதில் சில நன்மைகள் உள்ளன. பணியிடங்கள் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் வரையறுக்கப்பட்டுள்ள புதிய இயல்புநிலைக்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளவும் அதிலிருந்து கற்றுக் கொள்ளவும் உங்களுக்கு கூடுதல் அவகாசம் உள்ளது. எனவே இதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பிரகாசமான விஷயங்களையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். உங்களது இறுதி ஆண்டை பல்கலைக்கழக வளாகத்தில் கழிக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்று இருந்தீர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப் பாருங்கள். தேர்வுக்கு முந்தைய இரவுகளில் நூலகங்களிலும் படிக்கும் அறைகளிலும் கழித்த நாட்களை நீங்கள் நினைவு கூர்வீர்கள். தில்லி இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இரு பிரிவு நண்பர்கள் இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்: கல்லூரி நண்பர்கள். விடுதி காணொலி விளையாட்டு நண்பர்கள். இந்த நினைவுகள்  உங்கள் மனதைவிட்டு அகலாது.

நண்பர்களே,

இதற்கு முன்பு சென்னை, மும்பை மற்றும் குவஹாத்தி இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களின் பட்டமளிப்பு விழாவில் நேரிலும் இதுபோன்ற வகையிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த அனைத்து இடங்களுக்கும் பொதுவாக, ஏதாவது ஒரு வகையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுவதை நான் கண்டேன். தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தின் வெற்றிக்கு இது ஒரு முக்கிய காரணி. கொவிட்-  19, உலகிற்கு ஒரு விஷயத்தை கற்றுத் தந்துள்ளது. உலகமயமாக்கல் அவசியம், ஆனால் தற்சார்பு அடைவதும் அதே அளவு முக்கியம்.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியா என்ற பிரசாரம் இளைஞர்கள், தொழில்நுட்பவாதிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய திட்டம். அவர்கள் தங்களது திட்டங்களை நிறைவேற்றவும், புதிய கண்டுபிடிப்புகளைத் தயாரித்து சுதந்திரமாக அவற்றை சந்தைப்படுத்தவும், ஏற்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. இளைஞர்கள் எளிய முறையில் வர்த்தகம் செய்ய இந்தியா உறுதியாக உள்ளது, இதன் மூலம் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் உருவாக்குவார்கள். எளிய முறையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாடு மேற்கொள்ளும். உங்களது திறமை, அனுபவம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் வாயிலாக நாட்டின் ஏழை குடிமக்களும் எளிய வாழ்க்கையை வாழ நீங்கள் வழி செய்யுங்கள்.

இதனைக் கருத்தில் கொண்டே அண்மையில் அனைத்துத் துறைகளிலும்  மிகப்பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதன் முறையாக வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) எண்ணிலடங்கா வாய்ப்புகள் உள்ளன. முதன்முறையாக விண்வெளித் துறையில் தனியார் முதலீட்டுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிபிஓ துறையில் வர்த்தகத்தை எளிமையாக்கும் விதமாக மிகப்பெரும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதர சேவை வழங்கும் தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வழி முறைகள் எளிதாகப்பட்டு அவற்றின் மீது இருந்த தடைகளையும் அண்மையில் அரசு நீக்கியுள்ளது. இதன்மூலம் பிபிஓ தொழில்துறையின் சுமைகளும்  குறைக்கப்படும். பிபிஓ துறைக்கு, வங்கி உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தொழில்நுட்பத்துறையில் வீடுகளிலிருந்து அல்லது வேறு இடங்களிலிருந்து பணி செய்வதில் இருந்து வந்த சட்ட சிக்கல்களும் தீர்த்து வைக்கப் பட்டுள்ளன.இதன் மூலம் நாட்டின் தகவல் தொழில்நுட்பத்துறை, உலகச் சந்தையில் போட்டியிடவும், இளம் திறமையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கவும் ஏதுவாக இருக்கும்.

நண்பர்களே,

உங்களது தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்ற பழைய வழிமுறைகள் மாற்றப்பட்டு புதிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த நூற்றாண்டின் சட்டதிட்டங்கள் அடுத்த நூற்றாண்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது. உலக அளவில் மிகக் குறைந்த வர்த்தக வரியைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டின் மொத்த காப்புரிமைகள் நான்கு மடங்காக உயர்ந்து இருக்கின்றன. நாட்டின் மொத்த வணிக உரிமைக்குறிகள் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளன. நிதி தொழில்நுட்பத் துறையுடன் வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் மருத்துவத் துறை களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்களிப்பு பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் 20க்கும் மேற்பட்ட யூனிகார்ன் நிறுவனங்கள் இந்தியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து, உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

தற்போது தொடக்க நிலையிலிருந்து நிதி அளிப்பது வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் ரூபாய் பத்தாயிரம் கோடி முதலீட்டில் நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதுமேலும் மூன்று வருடங்கள் வரைக்கும் நிறுவனங்களுக்கு வரியிலிருந்து விலக்கு, சுய சான்றிதழ் மற்றும் எளிய விலகல் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய உள்கட்டமைப்புக் குழாய் இணைப்பின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை செய்ய  திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் நாட்டில் உருவாக்கப்படும்.

நண்பர்களே,

 இன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிகபட்சத் திறமையை அடையும் லட்சியத்தோடு நாடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கிருந்து சென்று புதிய பணியிடத்தில் வேலை செய்யும்போது, நான்கு தாரக மந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை:

தரத்தின் மீது திடமாக இருத்தல்; தரத்தில் தளர்வு ஏற்படக்கூடாது. அளடுவிடுதலை உறுதி செய்தல்; உங்களது படைப்புகள் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும்படி செயல்படுங்கள். நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல்; சந்தையில் நீண்ட கால நம்பிக்கையை உருவாக்குங்கள். எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளுதல்; மாற்றத்திற்கும் எதிர்பாராத நிகழ்வுகளை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருங்கள்.

இதன்படி நீங்கள் நடந்தால், தனிநபர் மற்றும் இந்தியாவின் அடையாளம் பிரகாசமடையும், ஏனென்றால் மாணவர்கள்தான் இந்தியாவின் சிறந்த தூதுவர்கள்.

நண்பர்களே,

ஆட்சிமுறை, அடித்தட்டு மக்களையும் எப்படி எளிதாக சென்றடைவது என்பதை தொழில்நுட்பங்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளன. பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தற்போது டிஜிட்டல் வழியாக வழங்கப்படுகின்றன. சாமானிய மக்கள் எளிதில் பயனடையும் வகையில் டிஜிட்டல் சுகாதார அட்டை, டிஜிட்டல் லாக்கர் வசதிகள் உள்ளிட்டவைகளை வழங்குவதில் நாடு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை கைகளிலும் உலக அளவில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் யுபிஐ போன்ற தளங்களைச் செயல்படுத்த விரும்புகின்றன.

நண்பர்களே,

அண்மையில் தொழில்நுட்பத்தின் மிகப்பெறும் பங்குடன் செயல்படும் ஒரு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அதுதான் ஸ்வாமித்வா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக வீடுகளும் சொத்துக்களும் ஒன்றிணைக்கப் பட்டுள்ளன.   டிரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தப் பணி நடத்தப்படுவதால் கிராம மக்களும் திருப்தி அடைந்து உள்ளனர்.

நண்பர்களே,

நாட்டில் நிலவி வரும் பல்வேறு சவால்களுக்கு உங்களால் தான் தீர்வு காண முடியும்- பேரிடர் மேலாண்மை, நிலத்தடி நீர் அளவை பாதுகாத்தல், சூரிய ஒளி சக்தி உற்பத்தி, தொலை மருத்துவ தொழில்நுட்பம், ரிமோட் அறுவை சிகிச்சை, பெரிய தரவு பகுப்பாய்வு போன்றவை.

நண்பர்களே,

இதுபோன்ற நாட்டின் பிரச்சினைகளுக்கு உங்களது புதிய கண்டுபிடிப்புகள், எண்ணங்கள், ஆற்றல் மற்றும் செயல்பாடுகளின் மூலம் தீர்வு காண முடியும். நாட்டின் தேவையை அறிந்து மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு உங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு சாமானிய மக்களின் விருப்பங்களையும் அடிமட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்களையும் அறிந்து செயல்படுங்கள்.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் திறமை வாய்ந்த மாணவர்கள். ஜேஈஈ போன்ற கடினமான தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து உள்ளீர்கள். அதன்பிறகு இந்தியத் தொழில்நுட்பக் கழகத்திற்கு வந்துள்ளீர்கள். எனினும் இரண்டு முக்கிய அம்சங்கள் உங்களது திறமையை மேலும் வலுப்படுத்தும்- வளைந்து கொடுக்கும் தன்மை, பணிவுடைமை. வளைந்து கொடுக்கும் தன்மை என்பது தனித்தன்மையுடன் இருப்பது மற்றும் இணைந்து செயல்படுவது. வாழ்க்கையின் எந்த நிலையிலும் உங்கள் அடையாளத்தை விட்டுத் தரக்கூடாது. எப்பொழுதும் நீங்கள் உண்மையாகவே இருங்கள். அதேசமயம் ஒரு குழுவுடன் இணைந்து இருப்பதில் தயக்கம் காட்டாதீர்கள். தனிநபர் செயல்களுக்கு வரைமுறை உள்ளன. இரண்டாவது பணிவுடைமை.

உங்களது வெற்றி மற்றும் சாதனைகளைக் கண்டு நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்.

வெகு சிலரே, நீங்கள் செய்ததைச் செய்துள்ளார்கள்.

இது உங்களை மேலும் பணிவுடையவராக ஆக்க வேண்டும்.

நண்பர்களே,

ஒருவர் தம்மிடமே சவால் செய்துகொண்டு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம். வாழ்நாள் முழுவதும் உங்களை ஒரு மாணவராக எண்ணுவதும் இன்றியமையாதது.

உங்களுக்கு தெரிந்திருப்பது போதும் என்று எப்போதும் எண்ணிவிடாதீர்கள். உங்கள் அறிவு, அனுபவம் மற்றும் ஆற்றலால் நாட்டிற்கு நன்மை விளைவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

------


(Release ID: 1671220) Visitor Counter : 249