பிரதமர் அலுவலகம்

பாரம்பரிய ஜவுளி குறித்து இந்திய கலாச்சார தொடர்பு அமைப்பு நடத்திய சர்வதேச இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை

இணைய கருத்தரங்கில் பரிமாறப்படும் கருத்துக்களும் வழிமுறைகளும் கூட்டு முயற்சிக்கு மேலும் உறுதுணையாக இருக்கும்: பிரதமர்

Posted On: 03 OCT 2020 6:59PM by PIB Chennai

பாரம்பரிய ஜவுளி குறித்து இந்திய கலாச்சார தொடர்பு அமைப்பான ஐசிசிஆர்  இன்று   நடத்திய இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் விதமாக  பாரம்பரிய ஜவுளி குறித்த  இணைய கருத்தரங்கிற்கு இந்திய கலாச்சார தொடர்பு அமைப்பும், உத்தரபிரதேச வடிவமைப்பு நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்த தை பாராட்டினார். 

 நாட்டின் வரலாறு, பன்முகத்தன்மை மற்றும் அபரிமிதமான வாய்ப்பினை ஜவுளித் துறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

 

இந்தியாவின் பாரம்பரிய ஜவுளி குறித்து பேசிய பிரதமர், இயற்கை வண்ணங்களில் ஆன பருத்தி மற்றும் பட்டுக்கு நெடிய மற்றும் புராதன வரலாறு இருப்பதாக கூறினார். ஜவுளி களில் காணப்படும் பன்முகத்தன்மை இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை குறிப்பதாக அவர் தெரிவித்தார்.   ஒவ்வொரு கிராமத்திலும் சமூகத்திலும் காணப்படும் பாரம்பரிய ஜவுளி வகைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று அவர் கூறினார். மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடைகளையும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஜவுளித்துறை எப்போதுமே வாய்ப்புகளை அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை திகழ்கிறது என்றார். சர்வதேச அளவில் வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்பினை மேம்படுத்தும் வகையில் இத்துறை விளங்குவதாக பிரதமர் கூறினார். உலக அளவில், இந்திய ஜவுளி, பாரம்பரியம், கலைப்பொருட்கள் உள்ளிட்டவை பிரசித்தி பெற்றவை என்று அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறிய பிரதமர், சாதாரண ராட்டையை இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய சின்னமாக மாற்றியதோடு, ஜவுளித்துறைக்கும் சமூக அதிகாரம் அளித்தலுக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியவர் மகாத்மா காந்தி  என்று கூறினார்.

ஆத்ம நிர்பார் பாரத் எனப்படும் தன்னிறைவு இலக்கை எட்டுவதில் ஜவுளித் துறை முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் கூறினார். குறிப்பாக திறன் மேம்படுத்துதல், நிதி உதவி மற்றும் துறை ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார். நமது நெசவாளர்கள், உலக அளவில் சிறந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு, அது குறித்த வழிகளை கற்றுக் கொள்வதுடன் நமது பாரம்பரிய வழி முறைகளையும் கற்றுக் கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டார். இந்த இணைய கருத்தரங்கில் பரிமாறப்படும் கருத்துக்களும் வழிமுறைகளும்  கூட்டு முயற்சிக்கு  மேலும் உறுதுணையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

உலகளவில் ஜவுளித்துறை, பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், இது மகளிருக்கான அதிகாரத்தை மேம்படுத்தும் என்று கூறினார்.  நமது ஜவுளி கலாச்சாரம் பன்முகத்தன்மை, திறன் மற்றும்  புதிய முயற்சிகளை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

****************



(Release ID: 1661435) Visitor Counter : 207