பிரதமர் அலுவலகம்
இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர்
இந்தியாவின் எதிரிகள் நமது படையினரின் அனன்றெழுந்த எழுச்சியையும், கோபத்தையும் கண்டுள்ளனர் - பிரதமர்
கடந்த சில வாரங்களில் நமது ஆயுதப் படையினரின் அசாத்திய துணிச்சல் காரணமாக இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்துள்ளது; பிரதமர்
அமைதிக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை இந்தியாவின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது; பிரதமர்
நாடு பிடிக்கும் சகாப்தம் முடிவடைந்தது, இது வளர்ச்சியின் சகாப்தம் ;பிரதமர்
எல்லை உள்கட்டமைப்புக்கான செலவு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது- பிரதமர்
Posted On:
03 JUL 2020 2:59PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்திய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக லடாக்கில் உள்ள நிம்புவுக்கு சென்றார். சிந்து நதிக்கரையில் உள்ள நிம்பு ஸன்ஸ்கார் சரகத்தால் சூழப்பட்டுள்ளது. பிரதமர் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை காவல்துறை பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.
வீரர்களின் தீரத்துக்கு பாராட்டு
நமது ராணுவ வீரர்களின் தீரத்தைப் பெரிதும் பாராட்டிய பிரதமர், அவர்களது துணிச்சலும், அன்னை இந்தியாவின் மீதான பக்தியும் ஈடு இணையற்றது என்று புகழ்ந்துரைத்தார் உறுதியாக நின்று, நாட்டைப் பாதுகாப்பதை . நமது ஆயுதப்படையினர் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்பதால், அவர்களால் அமைதியாக இருக்க முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த சில வாரங்களில், ஆயுதப் படையினரின் மகத்தான தீரம் காரணமாக, இந்தியாவின் வலிமையை உலகம் உணர்ந்துள்ளது என்றார் பிரதமர்.
கல்வான் பள்ளத்தாக்கு தியாகத்தை நினைவு கூர்தல்
கல்வான் பள்ளத்தாக்கில், அன்னை இந்தியாவின் தீரமிக்கப் புதல்வர்கள் செய்த உயிர்த் தியாகத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். வீரமரணம் மூலம் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், அவர்களது தியாகம், நம் நாட்டின் தீரத்தைக் காட்டியுள்ளது என்றார்.
லே-லடாக், கார்கில் அல்லது சியாச்சின் பனிமலை என எந்தப்பகுதியாக இருந்தாலும், உயரிய மலைகளானாலும், ஆறுகளில் ஓடும் குளிர்ந்த நீரானாலும், அவையெல்லாம் இந்திய ஆயுதப்படையினரின் வீரத்துக்கும், தீரத்துக்கும் சான்றாகத் திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார். நமது படையினரின் உள்ளத்தில் கொளுந்து விட்டெறியும் நெருப்பையும், ஆவேசத்தையும் இந்தியாவின் எதிரிகள் கண்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.
அன்னை இந்தியா, இந்தியாவுக்கு ஈடு, இணையற்ற வகையில் விடா முயற்சியுடன் தொண்டாற்றி வரும் துணிச்சல் மிக்க அனைத்து வீரர்களின் அன்னையர் என்று இரண்டு அன்னையர்க்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார்.
அமைதி மீதான நமது அர்ப்பணிப்பு, நமது பலவீனமாகாது
நமது நினைவுக்கு எட்டாத காலம் தொட்டு, அமைதி, நட்புணர்வு, துணிச்சல் ஆகிய உயர்பண்புகள் இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என விரிவாக எடுத்துரைத்த பிரதமர், நம் நாட்டில் நிலவி வரும் அமைதி மற்றும் முன்னேற்ற சூழலுக்கு இடையூறு ஏற்படுத்த யாராவது முயன்ற போதெல்லாம், இந்தியா அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுத்து வந்துள்ளது என்பதை நினைவு கூர்ந்தார்.
இந்தியா அமைதியையும், நட்புறவையும் பேணிப்பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், ஆனால், இந்த அர்ப்பணிப்பு உணர்வை, இந்தியாவின் பலவீனமாக யாரும் கருதமுடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார். கடற்படை வலிமை, விமானப்படை ஆற்றல், விண்வெளி சக்தி, ராணுவத்தின் வலிமை என இன்று இந்தியா வலுவுடன் திகழ்கிறது. நவீன ஆயுதங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை நமது பாதுகாப்புத் திறனை பலமடங்காக அதிகரித்துள்ளன.
இரண்டு உலகப் போர்களில் பங்கேற்றது உள்பட உலக ராணுவ நடவடிக்கைகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்களுக்குத் துணிச்சல் மிக்க மிக நீண்ட வரலாறு உள்ளது என பிரதமர் நினைவு கூர்ந்தார்.
வளர்ச்சி சகாப்தம்
நாடு பிடிக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறிய பிரதமர், இது வளர்ச்சிக்கான சகாப்தம் என்றார். பிற நாட்டு நிலப்பரப்பை அபகரிக்கும் மனப்போக்கு மிகப்பெரிய தீங்கு விளைக்கக்கூடியது என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் படைகளின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு உரிய தயார் நிலை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நவீன ஆயுதங்கள் கிடைக்கச் செய்வது, எல்லைக் கட்டமைப்பை அதிகரித்தல், எல்லைப்பகுதி மேம்பாடு, சாலைக் கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை இவற்றில் அடங்கும். எல்லை உள்கட்டமைப்புச் செலவு மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நமது ஆயுதப்படையினர் நலனை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பிரதமர் விளக்கினார். முப்படைத் தலைவர் பதவி உருவாக்கம், கம்பீரமான தேசிய போர் நினைவுச் சின்னம் அமைத்தல், பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஒரு பதவி ஒரே ஓய்வூதியக் கோரிக்கை நிறைவேற்றம், ஆயுதப்படை வீரர் குடும்பங்களின் நலனை உறுதி செய்தல் போன்ற அரசின் அண்மைக்கால முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.
லடாக் கலாச்சாரத்துக்கு மரியாதை
இந்தக் கலந்துரையாடலின் போது, குசோக் பகுளா ரிம்போச்சேயின் உன்னதமான போதனைகளையும், லடாக் கலாச்சாரத்தின் பெருமையையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். லடாக் தியாக பூமி என்று குறிப்பிட்ட அவர், பல தேசபக்தர்களை இந்த பூமி அளித்துள்ளதாகக் கூறினார்.
துணிச்சல் என்பது நம்பிக்கை, கருணை ஆகியவற்றுடன் இணைந்தது என்று கூறிய கௌதம புத்தரின் போதனைகளால் இந்திய மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1655542)
Visitor Counter : 340
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam