பிரதமர் அலுவலகம்
2020 ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய அறிக்கை
Posted On:
20 JUN 2020 1:40PM by PIB Chennai
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்கு சில தரப்பினர் உள்நோக்கத்துடன் அர்த்தம் கற்பிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் ஆக்கிரமிக்க நடக்கும் எந்த முயற்சிகளையும் இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று பிரதமர் தெளிவாகக் கூறினார். உண்மையில், கடந்த காலங்களில் இதுபோன்ற சவால்கள் புறக்கணிக்கப்பட்ட நிலைக்கு மாறாக, உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த அத்துமீறல் நடந்தாலும், இந்திய ராணுவத்தினர் இப்போது உறுதியாக பதிலடி கொடுத்து வருகிறார்கள் (“unheroktehain, unhetoktehain”) என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த முறை, உண்மை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு சீன படையினர் பெருமளவில் வந்திருந்ததாகவும், அதற்கேற்ப இந்தியா தரப்பில் பதிலடி தரப்பட்டது என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறலைப் பொருத்த வரையில், ஜூன் 15ஆம் தேதி கல்வான் பகுதியில் நடந்த வன்முறையானது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் சீன தரப்பினர் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாலும், அதை நிறுத்த மறுத்த காரணத்தாலும் தான் ஏற்பட்டது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பகுதியில் நடந்த நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டது பற்றி மட்டுமே அனைத்துக் கட்சிக் கூட்ட விவாதங்களில் பிரதமரின் கருத்துகள் இருந்தன. அந்தப் பகுதியில் சீன தரப்பினரின் முயற்சிகளை முறியடித்ததில் நமது படையினரின் தீரச் செயல் மற்றும் தேசபக்திக்கு பிரதமர் மிகுந்த பாராட்டு தெரிவித்தார். நமது ஆயுதப் படையினரின் துணிச்சலான செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாகத் தான் நமது பகுதிக்குள் சீன தரப்பினர் யாரும் வர முடியாமல் போனது என்று பிரதமர் குறிப்பிட்டார். 16 பிகார் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த வீரர்களின் உயிர்த் தியாகங்களால், சீன தரப்பினரின் கட்டுமானப் பணி முயற்சி முறியடிக்கப்பட்டது. அன்றைய தேதியில் அந்தப் பகுதியில் சீன தரப்பினர் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.
``நமது நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்தவர்களுக்கு, நம் மண்ணின் மைந்தர்களின் துணிச்சலான செயல்களால், சரியான பதிலடி தரப்பட்டது'' என்று பிரதமர் கூறியது, நமது ஆயுதப்படையினரின் மரியாதை மற்றும் மாண்புகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் குறிப்பிடுவதாக உள்ளது. ``நமது எல்லைகளைப் பாதுகாக்க நமது ராணுவத்தினர் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்'' என்றும் பிரதமர் கூறினார்.
இந்தியாவின் எல்லை எது என்பது, இந்தியாவின் வரைபடத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம், அந்த வரைபடத்தின் எல்லைகளில் உறுதியாக, வலுவாக நம்பிக்கை கொண்டுள்ளது. சில சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைப் பொருத்த வரையில், கடந்த 60 ஆண்டுகளில், பல்வேறு சூழ்நிலைகளில் எப்படி 43,000 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒருதலைபட்சமாக மாற்றம் செய்யும் எந்த முயற்சியையும் இந்த அரசு அனுமதிக்காது.
நமது எல்லைகளை, துணிச்சலான நமது வீரர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவர்களின் மனோதிடத்தைப் பாதிக்கும் வகையில், தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. இருந்தபோதிலும், தேசிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கும், ராணுவத்துக்கும் ஒருமித்த ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்களால், இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட முடியாது என்று நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
----
(Release ID: 1655454)
Visitor Counter : 346
Read this release in:
Punjabi
,
Hindi
,
Marathi
,
Gujarati
,
Urdu
,
Assamese
,
Bengali
,
Telugu
,
English
,
Manipuri
,
Odia
,
Kannada
,
Malayalam