பிரதமர் அலுவலகம்
வெளிப்படையான வரிமுறை- நேர்மையானவர்களை கௌரவித்தல்' தொடக்க நிகழ்வில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
Posted On:
13 AUG 2020 12:38PM by PIB Chennai
நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற கட்டமைப்புச் சீர்திருத்த நடைமுறை இன்று புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளது. 'வெளிப்படையான வரிமுறை - நேர்மையானவர்களை கௌரவித்தல்' என்ற 21ஆம் நூற்றாண்டின் புதிய வரிமுறை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை நேரடி சந்திப்பு இல்லாத மதிப்பீடு, நேரடி சந்திப்பு இல்லாத மேல்முறையீடு, வரி செலுத்துவோருக்கான சாசனம் போன்ற முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டுள்ளது. நேரடி சந்திப்பு இல்லாத மதிப்பீடும், வரிசெலுத்துவோரின் சாசனமும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இருப்பினும் நேரடி சந்திப்பு இல்லாத மேல்முறையீடு வசதி தீன்தயாள் உபாத்யாயா பிறந்த தினத்தைக் குறிக்கும் செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்குக் கிடைக்கும். இப்போது, நேரடி சந்திப்பு இல்லாத வரிமுறை வருகின்ற போது, நியாயமானது, அச்சமற்றது என்ற நிலையில் வரிசெலுத்துவோரிடம் நம்பிக்கையைத் தூண்டுவதாக இது உள்ளது.
இதற்காக வரி செலுத்துவோர் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்; மேலும் வருமான வரித்துறையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் கூட நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டுகளில் நமது கவனமெல்லாம் வங்கி வசதி இல்லாதவர்களுக்கு வங்கி வசதி, பாதுகாப்பு இல்லாதவர்களுக்குப் பாதுகாப்பு, நிதி இல்லாதவர்களுக்கு நிதி என்பதாக இருந்துள்ளது . இன்று புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம், அதாவது நேர்மையானவர்களைக் கௌரவிப்பது. நாட்டில் நேர்மையாக வரி செலுத்துபவர், தேசத்தின் கட்டமைப்பிற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறார். நாட்டில் நேர்மையாக வரி செலுத்துபவரின் வாழ்க்கை எளிதாக இருக்கும் போது அவர் முன்னேறுகிறார்; பிறகு இந்த நாடும் வளர்ச்சியடைகிறது; முன்னோக்கிச் செல்கிறது.
நண்பர்களே,
புதிய ஏற்பாடுகளும், வசதிகளும் தொடங்கியுள்ள இன்று
'குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' என்ற எங்களின் உறுதி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களின் வாழ்க்கையிலிருந்து அரசின் குறுக்கீடுகளைக் குறைப்பதை நோக்கிய மிகப்பெரிய முன்னெடுப்பாக உள்ளது.
நண்பர்களே,
ஒவ்வொரு சட்டமும், கொள்கையும் இன்று அதிகார மைய அணுகுமுறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு, மக்களை மையப்படுத்தியதாக, பொதுமக்களுக்கு உகந்ததாக அதனை மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதுதான் புதிய இந்தியாவின் புதிய நிர்வாக முறையாகும். இதிலிருந்து நாடு சாதகமான விளைவுகளைப் பெற்றுள்ளது. குறுக்குவழிகள் சரியல்ல; தவறான வழிகளைப் பின்பற்றுவது சரியல்ல என்று ஒவ்வொருவரும் இன்று உணர்ந்துள்ளனர் . அந்த சகாப்தம் போய்விட்டது. எந்த ஒரு பணியைச் செய்தாலும் கடமை முக்கியமானது என்ற மாற்றத்திற்கான சூழ்நிலை நாட்டில் தற்போது உள்ளது.
கேள்வி இதுதான்: இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? இது கடுமையின் காரணத்தாலா? தண்டனையின் காரணத்தாலா? இல்லை; இல்லவே இல்லை. இதற்கு நான்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, கொள்கையால் இயக்கப்படும் நிர்வாகம். கொள்கை தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் போது தெளிவற்ற பகுதிகள் குறைந்து விடும். இதனால் பணியில் சுயேச்சைஅதிகாரத்துக்கான வாய்ப்பும் குறைந்து விடுகிறது.
இரண்டாவது: சாமானிய மனிதனின் நேர்மையில் நம்பிக்கை கொண்டிருப்பது.
மூன்றாவது: அரசின் நடைமுறையில் மனிதர்களின் தலையீட்டு வரம்பைக் குறைத்துத் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவது.
அரசின் கொள்முதலாக இருந்தாலும், அரசின் ஒப்பந்தப்புள்ளியாக இருந்தாலும், அரசு சேவைகள் வழங்குவதாக இருந்தாலும் இன்று எல்லாவற்றிலும் தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது
நான்காவது: எமது அரசு இயந்திரத்திலும், அதிகாரிகளிடத்திலும் திறமை, நேர்மை, உணர்திறன் ஆகியவற்றின் தரங்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
சீர்திருத்தங்கள் பற்றி ஏராளமாக இங்கே நாம் பேசிய காலம் ஒன்று இருந்தது. சில நேரங்களில் சில முடிவுகள் நிர்பந்தத்தால் எடுக்கப்பட்டன; சில நேரங்களில் சில முடிவுகள் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்டன; அவை சீர்திருத்தங்கள் என்று சொல்லப்பட்டன. அதன் விளைவாக, விரும்பிய பயன்களை நம்மால் பெறமுடியவில்லை. தற்போது சிந்தனை, அணுகுமுறை என்ற இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு சீர்திருத்தம் என்பதன் பொருள் கொள்கை அடிப்படையிலானது; துண்டுதுண்டாகச் செய்வதல்ல. அது முழுமையாக இருக்க வேண்டும் . ஒரு சீர்திருத்தம் மற்றொரு சீர்திருத்தத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் அல்லது ஒரு புதிய சீர்திருத்தத்திற்கு வழி செய்யவேண்டும். ஒரு சீர்திருத்தத்தோடு எதுவும் முடிந்து விடுவதில்லை. இது தொடர்ச்சியான நடைமுறை. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் 1500க்கும் அதிகமான பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் எளிதாக வணிகம் செய்வதற்கான தரவரிசையில் இந்தியா 134வது இடத்தில் இருந்தது . இன்று இந்தியாவின் தரவரிசை 63 ஆக இருக்கிறது. தரவரிசையில் பெரிய தாவலுக்கான பின்னணியில் பல்வேறு விதிகள் மற்றும் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள பல சீர்திருத்தங்களும், மாற்றங்களும் இருக்கின்றன. சீர்திருத்தங்களை நோக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டைக் கண்டு இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதற்குக் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட இந்தியாவுக்குள் சாதனை அளவாக வெளிநாட்டு நேரடி முதலீடு வந்திருப்பது ஓர் உதாரணமாகும்.
நண்பர்களே,
இந்திய வரி முறையில் அடிப்படை மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தேவைப்பட்டன; ஏனெனில் தற்போதுள்ள நமது நடைமுறை பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டவை; பிறகு மெல்ல மெல்ல மாற்றம் செய்யப்பட்டன. சுதந்திரத்திற்குப் பின் இங்கும் அங்குமாக பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் இந்த நடைமுறையின் குணாம்சம் பெருமளவில் ஒரே மாதிரியாகவே இருந்தன.
இதன் விளைவு, தேசக் கட்டமைப்பின் வலுவான தூணாக இருக்கின்ற, வறுமையிலிருந்து நாட்டை விடுவித்து முன்னேற்றுவதில் பங்களிப்பு செய்கின்ற வரிசெலுத்துவோர் எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டனர். வருமானவரி நோட்டீஸ் ஒரு தண்டனையாக மாறியது. பலர் தேவையற்ற இன்னல்களை எதிர்கொண்டனர். இதன் மூலம் மிகச் சிறிய எண்ணிக்கையில் நாட்டை ஏமாற்றுகின்றவர்கள் கண்டறியப்பட்டிருக்கலாம். பெருமிதத்தோடு வரி செலுத்துவோரின் எண்ணிக்கை விரிவாக்கப்படும் போது இணக்கமும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.
இந்தக் குழப்பமான சூழ்நிலையில் கருப்புப்பணத் தொழிலும், வெள்ளைப்பணத் தொழிலும் உருவானது. நேர்மையான வணிகர்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக, நாட்டின் நேர்மையான வணிகர்களையும், தொழில் உரிமையாளர்களையும், இளம் சக்தியின் அபிலாசைகளையும் இந்த நடைமுறை நசுக்கியது.
நண்பர்களே,
சிக்கல் அதிகமாக இருக்கும் இடத்தில் இணக்கமும் சிக்கலாகவே இருக்கும். இயன்றவரை சட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். சட்டம் வெளிப்படையாக இருந்தால், வரிசெலுத்துவோரும் மகிழ்ச்சியாக இருப்பார் நாடும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பணி சிறிது காலத்திற்கு முன்பிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி போன்றவை டஜன் கணக்கான வரிகளை மாற்றி அமைத்துள்ளன. கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து, கூடுதலாக செலுத்திய தொகையைத் திரும்பப்பெறுவது வரையிலான ஏற்பாடுகள் முழுமையாக இணையதளம் மூலம் செய்யப்பட்டுள்ளன.
புதிய படிநிலை வரிமுறை தேவையில்லாமல் காகிதங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் நிர்பந்தத்திலிருந்து விடுவித்துள்ளது. மேலும் ரூ 10 லட்சத்திற்கும் கூடுதலான தாவாக்கள் குறித்து அரசு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது இந்த வரம்பு உயர்நீதிமன்றங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலும், உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. 'விவாத் சே விஷ்வாஸ்' போன்ற திட்டங்கள் மூலம் நீதிமன்றத்திற்கு வெளியே பெரும்பாலான வழக்குகள் தீர்த்து வைக்கப்படுவதை உறுதிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக சுமார் 3 லட்சம் வழக்குகள் மிகக் குறுகிய காலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளன.
நண்பர்களே,
நடைமுறைகளின் சிக்கல்களைக் குறைத்திருப்பதோடு நாட்டில் வரியும் கூட குறைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு இப்போது வரி இல்லை. மற்ற படிநிலைக்கான வரியும் கூட குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரியைப் பொருத்தவரை, உலகில் மிகவும் குறைவாக வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம்.
நண்பர்களே,
நமது வரிமுறை தடையற்றதாக, சிரமம் இல்லாததாக, முகம் பார்க்காததாக இருப்பதை உறுதிசெய்வது எங்களின் முயற்சியாகும். தடையற்றது என்பதன் பொருள், நிலைமையைச் சிக்கலாக்குவதற்கு பதிலாக வரிசெலுத்தும் ஒவ்வொருவரின் பிரச்சினைக்கும் தீர்வுகாண வரிநிர்வாகம் பணி செய்யவேண்டும் என்பதாகும். சிரமமில்லாதது என்பதன் பொருள், தொழில்நுட்பத்திலிருந்து விதிகள் வரை அனைத்தும் எளிமையாக்கப்பட வேண்டும் என்பதாகும். முகம் பார்க்காதது என்பதன் பொருள், வரி செலுத்துபவர் யார்? வரி வசூலிக்கும் அதிகாரி யார்? என்பதைப் பொருட்படுத்தாமல் இருக்கவேண்டும். இன்று முதல் அமலுக்கு வருகின்ற சீர்திருத்தங்கள் இந்தச் சிந்தனையை முன்னோக்கி எடுத்துச்செல்லப் போகின்றன.
நண்பர்களே,
இதுநாள் வரை, நாம் வசித்து வரும் நகரைச் சேர்ந்த வரித் துறையினரே, வரிகள் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கையாண்டு வந்தனர். பரிசீலித்தல், நோட்டீஸ் அனுப்புதல், ஆய்வுசெய்தல் அல்லது பறிமுதல் என எதுவாக இருந்தாலும், அதே நகரைச் சேர்ந்த வருமான வரித்துறையில் உள்ள வருமானவரி அதிகாரியே செயல்படுவார். தற்போது இந்த முறை முடிவுக்கு வந்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது இது மாறியுள்ளது.
தற்போது, கணக்குகளை ஆய்வுசெய்யும் பணி, நாட்டின் எந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிக்கும் தோராயமாக ஒதுக்கீடு செய்யப்படலாம். உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த வரி செலுத்துவோரின் கணக்குத் தாக்கல் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் பணி, மும்பையைச் சேர்ந்த அதிகாரிக்கு ஒதுக்கப்படாது; இது சென்னையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத குழுவினருக்கு சென்று சேர வாய்ப்பு உண்டு. அங்கிருந்து வரும் உத்தரவை, ஜெய்ப்பூர் அல்லது பெங்களூரு போன்ற மற்றொரு நகரில் உள்ள குழுவினர் மறுஆய்வு செய்யலாம். கண்ணுக்குத் தெரியாத குழுவில் என்ன இருக்கும்? அதில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள் என்பதெல்லாம் தற்போது தோராயமாக முடிவு செய்யப்படுகிறது! இதில், ஒவ்வொரு ஆண்டும் மாற்றங்கள் இருக்கும்.
நண்பர்களே,
இந்த முறையின் மூலம், வரிசெலுத்துவோரும், வருமானவரி அலுவலகமும் ஒருவருக்கொருவர் அறிமுகமாவதற்கோ, அல்லது ஆதிக்கம் செலுத்துவதற்கோ எந்தவொரு வாய்ப்பும் இல்லை. அனைத்துமே தங்களின் கடமைகளுக்கு ஏற்ப செயல்படும். இதில், வருமான வரித்துறைக்கு சாதகமான அம்சம் என்பது, தேவையில்லாத வழக்குகள் இருக்காது. பணியிட மாற்றம் செய்வதற்காக தேவையில்லாமல் சக்தியைச் செலவிடுவதும் தவிர்க்கப்படும். அதேபோல, வரி தொடர்பான விவகாரங்களில் விசாரணையைத் தவிர, மேல்முறையீடும் கூட கண்ணுக்குத் தெரியாமலேயே நடைபெறும்.
நண்பர்களே,
வரி செலுத்துவோர் சாசனம் கூட, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மிகப்பெரும் நடவடிக்கையாக உள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, வரி செலுத்துவோரின் உரிமைகள் மற்றும் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வரிசெலுத்துவோருக்கு இந்த அளவுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு அளிக்கும் சில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
வரிசெலுத்துவோருக்கு நியாயமான, மரியாதை அளிக்கக் கூடிய முன்னுரிமைச் செயல்பாடுகள் கிடைப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவோரின் கௌரவம் மற்றும் உணரும் திறனை வருமானவரித் துறை கவனத்தில் கொண்டுள்ளது. தற்போது வரிசெலுத்துவோர் மீது வருமானவரித் துறை நம்பிக்கை வைத்துள்ளது. எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் அல்லது தேவையில்லாமல் வருமான வரித்துறை சந்தேகிக்க முடியாது. ஏதாவது ஒரு சந்தேகம் ஏற்பட்டாலும் கூட, வரி செலுத்துவோருக்கு மேல் முறையீடு செய்வது மற்றும் மறுஆய்வு செய்யக் கோருவதற்கு உரிமை உள்ளது.
நண்பர்களே,
கடமைகள் மற்றும் பணிகளுடன் உரிமைகள் எப்போதும் கூடவே வரும். இந்த சாசனத்தில், வரி செலுத்துவோரிடமிருந்து சில எதிர்பார்ப்புகள் இடம்பெற்றுள்ளன. வரியை, வரிசெலுத்துவோர் செலுத்துவது அல்லது வரியை அரசு விதிப்பது என்பது உரிமை விவகாரம் இல்லை. இது இருதரப்பினருக்கும் பொறுப்பாக உள்ளது. வரி செலுத்துவோர் வரியைச் செலுத்த வேண்டும். ஏனெனில், இதன் மூலமே அமைப்பு செயல்படுகிறது. இதன் மூலமே, நாட்டில் உள்ள கோடிக்கணக்கானோர் மீதான பொறுப்பை தேசத்தால் நிறைவேற்ற முடியும்.
இந்த வரியின் மூலமே, வரிசெலுத்துவோரும் கூட, வளர்ச்சிக்கான கட்டமைப்புகள் மற்றும் சிறந்த வசதிகளைப் பெறுகிறார். அதே நேரத்தில், வரிசெலுத்துவோர் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயையும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. சலுகைகளையும், பாதுகாப்பையும் வரி செலுத்துவோர் பெறும் சூழ்நிலையில், வரிசெலுத்தும் ஒவ்வொருவரும் தங்களது கடமைகளை அதிக அளவில் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று தேசமும் எதிர்பார்க்கிறது.
நண்பர்களே,
நாட்டு மக்கள் மீதான நம்பிக்கையின் தாக்கம், அடிமட்ட அளவில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். 2012-13-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த வருமானவரி கணக்குகளில் 0.94 சதவீதக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இது 2018-19-ஆம் ஆண்டில் 0.26 சதவீதமாகக் குறைந்தது. அதாவது, ஆய்வு செய்யப்படும் கணக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு குறைந்துள்ளது. ஆய்வு அளவு நான்கு மடங்கு குறைந்திருப்பது என்பதன் மூலமே, மாற்றம் எந்த அளவுக்கு உள்ளது என்பது வெளிப்படுகிறது.
நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டுகளில் வரிநிர்வாகத்தில் ஆளுமைக்கான ஒரு புதிய மாதிரி உருவாகியிருப்பதை இந்தியா கண்டுள்ளது. சிக்கல்களைக் குறைத்திருக்கிறோம், வரிகளைக் குறைத்திருக்கிறோம். வழக்குகளைக் குறைத்திருக்கிறோம். வெளிப்படைத்தன்மையை அதிகரித்திருக்கிறோம். வரி செலுத்தும் அளவை அதிகரிக்கச் செய்துள்ளோம். வரி செலுத்துவோர் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளோம்.
நண்பர்களே,
இத்தகைய அனைத்து முயற்சிகளுக்கும் மத்தியில், கடந்த 6-7 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 2.5 கோடி அதிகரித்துள்ளது. எனினும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மிகவும் குறைவான அளவிலேயே இன்னும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்பதும் உண்மை. இதுபோன்ற மிகப்பெரும் நாட்டில், 1.5 கோடி மக்கள் மட்டுமே வருமானவரி செலுத்துகிறார்கள். வரி செலுத்தும் திறன் பெற்றவர்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துவோரும் இதுகுறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று எனது நாட்டு மக்களை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நாடு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயசார்பு இந்தியாவுக்காக சுயபரிசோதனை செய்துகொள்வது இன்றியமையாதது, தவிர்க்க முடியாதது. இந்தப் பொறுப்பு வரித்துறைக்கு மட்டுமானதல்ல, ஒவ்வொரு இந்தியருக்குமானது. வரி செலுத்த முடியும் என்ற நிலையிலும், இன்னும் வரிசெலுத்தும் நிலைக்கு வராதவர்கள் அனைவரும் சுயஊக்குவிப்புடன் தாங்களாகவே முன்வர வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். ஆகஸ்ட் 15 வருவதற்கு இரண்டு நாள்களே உள்ளன. நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்வோம். நீங்களும்கூட, ஒரு பங்களிப்பைச் செய்ததாக உணர்வீர்கள்.
புதிய இந்தியா, சுயசார்பு இந்தியாவுக்கான உறுதியை நிறைவேற்ற நாம் முன்வருவோம். நம்பிக்கை, உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கான இந்தத் தளத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். நாட்டில் தற்போது நேர்மையான முறையில் வரிசெலுத்துவோர், எதிர்காலத்தில் நேர்மையான முறையில் வரிசெலுத்த உள்ளோர் ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு அனைத்தும் சிறப்பாக அமைய நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப்பெரிய முடிவாகும்! வருமான வரி அதிகாரிகளுக்கு நான் மட்டும் நன்றி தெரிவிப்பது போதுமானதாக இருக்காது. வருமானவரி அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வரிசெலுத்துவோரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த வகையில் அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். தங்களது சொந்த பலம் மற்றும் உரிமைகளை அவர்கள் குறைத்துக் கொண்டுள்ளனர். இந்த மாதிரியாக வருமானவரித் துறை அதிகாரிகள் முன் வரும் போது யார் பெருமை கொள்ளாமல் இருப்பார்கள்! இதற்காக நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெருமை கொள்ள வேண்டும். கடந்த காலத்தில், அமைப்பு முறை காரணமாக, வரி செலுத்துவதற்கு மக்கள் முன்வராமல் இருந்திருக்கலாம். தற்போது வரி செலுத்துவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான வழி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அற்புதமான இந்தியாவைக் கட்டமைப்பதற்கு இந்த அமைப்பின் பலன்களை ஏற்றுக் கொள்வோம். மற்றும் இந்த அமைப்பில் சேர முன்வருவோம். மீண்டும் ஒரு முறை, உங்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்! நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக, நீண்டகாலம் பலனளிக்கும் வகையில், பல்வேறு சாதகமான முடிவுகளை எடுத்த நிர்மலா அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
மிக்க நன்றி.
***
(Release ID: 1648161)
Visitor Counter : 276
Read this release in:
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Urdu
,
Gujarati
,
English
,
Assamese
,
Kannada
,
Malayalam