பிரதமர் அலுவலகம்
அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு நீருக்கடியில் கம்பிவட இணைப்புத் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
Posted On:
10 AUG 2020 12:23PM by PIB Chennai
இந்தியாவின் சுதந்திரத்துக்காக சுதந்திரப் போராட்டம் நடத்திய நிலமான அந்தமான் நிக்கோபார் மற்றும் அதன் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!
இந்த நாள், அந்தமான் மற்றும் நிக்கோபாரில் உள்ள ஏராளமான தீவுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான நண்பர்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமானது.
நண்பர்களே,
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, சுபாஷ் சந்திரபோஸுக்கு வீரவணக்கம் செலுத்தி, நீருக்கடியில் கண்ணாடி ஒளியிழை கம்பிவட (Optical Fibre Cable) இணைப்புத் திட்டத்துக்கான பணிகளை தொடங்கிவைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து, இந்தத் திட்டத்தை அர்ப்பணிக்கும் வாய்ப்பையும் நான் இன்று பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையிலிருந்து போர்ட்பிளேருக்கும், போர்ட்பிளேரிலிருந்து லிட்டில் அந்தமானுக்கும், போர்ட்பிளேரிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மிகப்பெரும் பகுதியான ஸ்வராஜ் தீவுகளுக்கும் இந்த சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வசதிகளைப் பெற்றதற்கும், தடையில்லா வாய்ப்புகளுடன் கூடிய இணைப்பைப் பெற்றுள்ளதற்கும், அந்தமான்- நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துகள். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-க்கு ஒரு வாரம் முன்னதாக அந்தமான் மக்களுக்கு கிடைத்த அன்பான பரிசாக இதனை நான் பார்க்கிறேன்.
நண்பர்களே,
கடலுக்குள்ளேயே சுமார் 2,300 கிலோமீட்டர் தொலைவுக்கு கம்பிவடத்தைப் பதிக்கும் இந்தப் பணியை, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே முடித்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. ஆழ்கடலில் அளவெடுப்பது அல்லது தரமான கேபிள்களைப் பராமரிப்பது மற்றும் சிறப்பு கப்பல்கள் மூலம் கேபிள்களைப் பதிப்பது ஆகியவை எளிதானது இல்லை. இதற்கும் மேலாக, உயர் அலைகள், புயல்கள் மற்றும் பருவமழை போன்ற தடைகள் இருந்தன. இந்தத் திட்டத்தில் திறன்பெற்றதாக சவால்கள் இருந்தன. பல ஆண்டுகளாகவே இந்த வசதிக்கான தேவை இருந்தபோதிலும், அதனை செயல்படுத்த முடியாததற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. எனினும், அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து இந்தப் பணிகள் முடிவடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்துப் பணிகளையும் முடக்கிய கொரோனா போன்ற நெருக்கடியால் கூட, இந்தப் பணியை நிறைவேற்றுவதைத் தடுக்க முடியவில்லை.
நண்பர்களே,
நாட்டின் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைச் சேர்ந்த கடுமையாக உழைக்கும் மக்களுக்கு அதிநவீன தொலைத்தொடர்பு இணைப்பை வழங்க வேண்டியது நாட்டின் பொறுப்பாக இருந்தது. மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் குழு மற்றும் குழு உணர்வுடன் கூடிய செயல்பாட்டின் மூலம், மிகவும் பழமையான கனவு நனவாகியுள்ளது. இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
முழு உறுதிப்பாட்டுடனும், முழு திறனுடனும் பணியாற்றுவதன் மூலமே, இதுபோன்ற சவாலான இலக்கை நிறைவேற்ற முடியும். டெல்லிக்கும், நாட்டில் உள்ள ஒவ்வொரு பிராந்தியங்கள் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் இடையேயான மனரீதியான மற்றும் நேரடியான தொலைவுகளை இணைக்கவும்; மற்றும் நாட்டில் உள்ள ஒவ்வொரு பிராந்தியங்கள் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக நவீன வசதிகள் சென்றுசேர்வதை உறுதிப்படுத்தவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய கடல்சார் எல்லைப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளின் விரைவான மேம்பாட்டை உறுதிப்படுத்தவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
நண்பர்களே,
நாட்டின் மற்ற பகுதிகள் மற்றும் உலகுடன் அந்தமான்-நிக்கோபாரை இணைக்கும் இந்த கண்ணாடி ஒளியிழை திட்டம், வாழ்வதை எளிதாக்குவது என்ற எங்களது உறுதிப்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய மற்றும் சிறந்த தரமான மொபைல் இணைப்பு மற்றும் அதிவேக இணையதள வசதியில் ஒட்டுமொத்த உலகுக்கும் இன்று இந்தியா தலைவராக விளங்கிவரும் நிலையில், அதனைப் பெறும் வாய்ப்பை அந்தமான்-நிக்கோபார் பகுதி மக்களும் தற்போது பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள மற்ற பகுதி மக்கள் அனுபவித்துவரும் டிஜிட்டல் இந்தியாவின் பலன்களை, அந்தமான்-நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த மக்கள், சகோதரிகள், குழந்தைகள், இளைஞர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களும் தற்போது பெற உள்ளனர். ஆன்லைன் மூலம் படிப்பவர்களாக இருந்தாலும், சுற்றுலா மூலம் வருமானம் பெறுபவர், வங்கி, விற்பனை அல்லது மருத்துவ சேவைகளை பெறுபவராக இருந்தாலும், அந்தமான்-நிக்கோபார் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர், தற்போது இந்த வசதிகளை ஆன்லைன் மூலம் பெற உள்ளனர்.
நண்பர்களே,
அந்தமான் இன்று பெற்றுள்ள வசதிகள் மூலம், சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் பயனடைய உள்ளனர். எந்தவொரு சுற்றுலாத் தலத்துக்கும் சிறந்த இணையதள இணைப்பு என்பது முதலாவது முன்னுரிமையாக இன்று மாறிவிட்டது. முன்னதாக, போதிய மொபைல் மற்றும் இணையதள இணைப்பு வசதி இல்லாததால், உலக நாடுகளைச் சேர்ந்த மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர்கள் தனது குடும்பம் மற்றும் தொழிலிலிருந்து விலகி இருந்தனர். தற்போது இந்தப் பிரச்சினையும்கூட, முடிவுக்கு வர உள்ளது. தற்போது இணையதள வசதி மிகவும் சிறப்பாக அமைய உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் நீண்டகாலத்துக்கு இங்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். சுற்றுலாப் பயணிகள் நீண்ட காலம் தங்கியிருந்து, அந்தமான்-நிக்கோபார் கடல் பகுதியையும், உணவையும் அனுபவிக்கும்போது, அது வேலைவாய்ப்பிலும் கூட மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய வேலைவாய்ப்புகளும் கூட உருவாக்கப்படும்.
நண்பர்களே,
இந்தியாவின் பொருளாதார- பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் முக்கிய மையமாக அந்தமான்- நிக்கோபார் திகழ்கிறது. இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு வலிமையின் மையமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடல் திகழ்கிறது. இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தில் புதிய கொள்கை மற்றும் நடைமுறைகளை தற்போது இந்தியா பின்பற்றி வருகிறது. அந்தமான்- நிக்கோபார் உள்ளிட்ட நமது தீவுகளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. கிழக்கு நோக்கிய கொள்கையின்கீழ், கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பிற கடலோரப் பகுதி நாடுகளுடன் இந்தியாவின் வலுவான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அந்தமான்- நிக்கோபாரின் பங்களிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்க உள்ளது. புதிய இந்தியாவில், அந்தமான்- நிக்கோபார் தீவுகளின் இந்தப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீவுப் பகுதி மேம்பாட்டு முகமை ஏற்படுத்தப்பட்டது. அந்தமான்- நிக்கோபார் பகுதிகளில் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த திட்டங்கள், தற்போது அதிவேகமாக முடிக்கப்படுவதை இன்று நீங்கள் பார்த்து வருகிறீர்கள்.
நண்பர்களே,
அந்தமான்- நிக்கோபாரின் 12 தீவுகளில் உயர் தாக்க திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. மொபைல் மற்றும் இணையதள இணைப்பு தொடர்பான மிகப்பெரும் பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக, சாலை, வான்வழி மற்றும் நீர்வழியாக ஏற்படுத்தப்படும் இணைப்பும் கூட வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அந்தமானை சாலை வழியாக இணைப்பதை மேம்படுத்துவதற்காக இரண்டு மிகப்பெரும் மேம்பாலங்களை அமைப்பது மற்றும் தேசிய நெடுஞ்சாலை-4ஐ அகலப்படுத்தும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. போர்ட்பிளேர் விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 1,200 பயணிகளை கையாளும் திறன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது அடுத்த சில மாதங்களில் தயாராகி விடும்.
இதற்கும் மேலாக, திக்லிபூர், கார் நிக்கோபார் மற்றும் கேம்ப்பெல்-பே பகுதிகளில் உள்ள விமான நிலையங்களும் செயல்பாட்டுக்கு தயாராக உள்ளன. ஸ்வராஜ் தீவு, ஷகீத் தீவு, லாங் தீவு ஆகியவற்றில் பயணிகள் முனையம், மிதக்கும் இறங்குதளம் போன்ற நீர்ப்பகுதி விமானதள கட்டமைப்புகள், வரும் மாதங்களில் தயாராகிவிடும். இதற்குப் பிறகு, உடான் திட்டத்தின்கீழ், இங்கு கடல் விமான சேவைகள் தொடங்கும். இது ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கான இணைப்பை வலுப்படுத்துவதுடன் உங்களது பயண நேரத்தையும் குறைக்கும்.
நண்பர்களே,
தீவுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையேயான நீர்வழி இணைப்பு வசதிகளை அதிகரிப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வரும் 4 கப்பல்களும் வரும் மாதங்களில் விநியோகிக்கப்படும். மிகப்பெரும் கப்பல்களை பழுதுபார்க்கும் வசதியை, அதே தீவில் அடுத்த ஓராண்டில் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இது உங்களது நேரத்தை சேமிக்கும், செலவைக் குறைப்பதுடன், வேலைவாய்ப்புகளையும் கூட உருவாக்கும். இது மீன்வளத் துறைக்கும் கூட மிகப்பெரும் பலன் அளிக்கும்.
நண்பர்களே,
துறைமுக அடிப்படையிலான மேம்பாட்டுக்கான மையமாக வரும் நாட்களில் அந்தமான்- நிக்கோபார் தீவுகள் உருவாக்கப்பட உள்ளது. உலகின் பெரும்பாலான துறைமுகங்களிலிருந்து மிகவும் இடைவிடாத தொலைவில் அந்தமான்- நிக்கோபார் அமைந்துள்ளது. துறைமுகங்கள் மற்றும் அதன் இணைப்பில் சிறப்பாக செயல்படும் நாடு மற்றும் அதன் தொடர்பு, 21-ம் நூற்றாண்டின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் இன்று புரிந்துகொண்டுள்ளது. இதுபோன்ற சூழலில், அந்தமான்- நிக்கோபாரில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு தொடர்பான பணிகள், அதனை வளர்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்லும்.
நண்பர்களே,
தன்னிறைவு தீர்மானத்துடன் இந்தியா இன்று முன்னோக்கி நடைபோடுகிறது. உலகளாவிய விநியோக மற்றும் மதிப்பு சங்கிலியில் முக்கிய செயல்பாட்டாளராக உருவாக்கிக் கொள்வதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. உலகளாவிய உற்பத்தி மையம் என்ற அடிப்படையில், நமது நீர்வழிப் பாதைகள் மற்றும் துறைமுகங்களின் இணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளாக மேற்கொள்ளப்படும் துறைமுக மேம்பாடு மற்றும் துறைமுக அடிப்படையிலான மேம்பாட்டுப் பணிகள், நாட்டுக்கு புதிய பலத்தை அளித்துள்ளது.
இன்று, நாட்டில் உள்ள நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்களுக்கு மிகப்பெரும் கடல் துறைமுகங்களுடனான இணைப்பையும், ஆற்று நீர் வழிப் பாதைகளுக்கான மிகப்பெரும் இணைப்பையும் நாம் இன்று கட்டமைத்து வருகிறோம். துறைமுக கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் நிலவும் சட்டப்பூர்வ தடைகளும் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றன. கடல் பகுதிகளில் தொழில் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கவும், கடல்சார் போக்குவரத்தை எளிதாக்கவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. உலகின் மிகப்பெரும் ஒற்றைச் சாளர தளத்தை உருவாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மூலம், தற்போது நாட்டின் துறைமுக இணைப்புகளின் திறன் மற்றும் தகுதி விரிவாக்கப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர், இந்தியாவின் முதலாவது ஆழ் இழுவை பசுமைதள கடல் துறைமுகத்தை மேற்கு கடலோரப் பகுதியில் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கிழக்கு கடலோரத்தில் ஆழ் இழுவை உள்முக துறைமுக கட்டுமானப் பணிகளும் அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சரக்குகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுவதற்கான துறைமுகத்தை கிரேட் நிக்கோபாரில் ரூ.10,000 கோடி மதிப்பில் கட்டுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டத்தை வரும் 4-5 ஆண்டுகளில் முடிப்பதே நமது இலக்கு. இந்தத் துறைமுகம் தயாராகிவிட்டால், மிகப்பெரும் கப்பல்களைக் கூட, இங்கு நிறுத்த முடியும். இது கடல்சார் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதுடன், நமது இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அளிக்கும்.
நண்பர்களே,
அந்தமான்- நிக்கோபார் பகுதிகளில் தற்போது ஏற்படுத்தப்படும் நவீன கட்டமைப்புகள், கடல்வழி பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும். கடல்வழி பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக மீன்வளம், மீன் வளர்ப்பு மற்றும் கடற்பாசி வளர்ப்பு ஆகியவை உள்ளன. கடற்பாசிகளின் பலன்கள் குறித்து உலகில் இன்று விவாதிக்கப்படுகிறது. இதற்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. அந்தமான்- நிக்கோபாரில் இதற்கான வாய்ப்புகள் குறித்துக் கண்டறிவதற்காக போர்ட்பிளேரில் நடத்தப்பட்ட மாதிரி திட்டத்தின் முடிவுகள், நம்மை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தீவுகளில் இதனை எடுப்பதை ஊக்குவிப்பதற்கான ஆய்வுகள் தற்போது தொடங்கியுள்ளன. மிகப்பெரும் அளவில் இந்த சோதனைகள், வெற்றிகரமாக அமைந்தால், நாட்டில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் இதனை விரிவுபடுத்த முடியும். இது குறிப்பாக, நமது மீனவர்களுக்கு பயனளிக்கும். இந்த ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தமான்- நிக்கோபாருக்கு மட்டுமன்றி, உலகில் உள்ள மக்களுக்கும் புதிய வசதிகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இது உலக சுற்றுலா வரைபடத்தில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும்.
மீண்டும் ஒரு முறை, இந்த நவீன மொபைல் போன் மற்றும் இணையதள இணைப்பு வசதிக்காக அந்தமான்- நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், நீங்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் நான் வாழ்த்துகிறேன். இந்த கொரோனா காலத்தில், எப்போதுமே சமூக இடைவெளி அல்லது 6 அடி இடைவெளியைப் பின்பற்றுவதுடன், முன்னோக்கிச் செல்லுங்கள்.
ஆகஸ்ட் 15—க்கு முன்னதாக, சுதந்திரப் போராட்டத்துக்கான இந்த நிலம் மற்றும் உங்களுக்கு தலைவணங்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் ஆகஸ்ட் 15-க்கு முன்னதாக நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உங்களை நான் அழைக்கிறேன்.
மிக்க நன்றி!
***
(Release ID: 1647562)
Visitor Counter : 354
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam