பிரதமர் அலுவலகம்

அதிவேக கொரோனா பரிசோதனை வசதிகளை மேற்கொள்ளவிருக்கும் மூன்று ஐசிஎம்ஆர் பரிசோதனைச் சாலைகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 27 JUL 2020 6:05PM by PIB Chennai

வணக்கம்!

கோடிக்கணக்கான இந்திய மக்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மிகுந்த துணிவோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று தொடங்கவிருக்கும் உயர்தொழில்நுட்ப, அதிநவீன பரிசோதனை வசதிகள் கொரோனாவிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.

நண்பர்களே,

தில்லி-தேசிய தலைநகரப் பகுதி, மும்பை, கல்கத்தா ஆகியவை பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்காகவும், தங்களது கனவுகளை நனவாக்கவும் இந்த நகரங்களில் வந்து குவிகின்றனர். இந்த மூன்று நகரங்களிலும் தற்போதுள்ள பரிசோதனை வசதிகளோடு இப்போது மேலும் சுமார் 10,000 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் கூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த நகரங்களில் இப்போது மேலும் விரைவாக பரிசோதனைகள் நடத்தப்படும். இதில் நல்லதொரு விஷயம் என்னவெனில், இந்த உயர்தொழில்நுட்ப பரிசோதனைச் சாலைகள் கொரோனா தொற்றுக்கான பரிசோதனையோடு நின்றுவிடுவதில்லை.

எதிர்காலத்தில் ஹெப்பாட்டிடிஸ் பி மற்றும் சி, எச் ஐ வி, டெங்கு போன்றவை உள்ளிட்ட நோய்களைக் கண்டறிவதற்கான வசதிகளைக் கொண்டதாகவும் இந்தப் பரிசோதனைக் கூடங்கள் உருவாகவிருக்கின்றன.

இத்தகைய ஏற்பாடுகளை செய்தமைக்காக மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த  நண்பர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நாட்டில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததன் விளைவாக இன்று இந்தியா மற்ற நாடுகளை விட மேலும் அதிகமான  ஸ்திரமான நிலையில் இருக்கிறது. இன்று நமது நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் என்பது மிகப்பெரும் நாடுகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் இந்த நோயிலிருந்து மீள்வோரில் சதவீதம் மற்ற நாடுகளை விட மிகவும் அதிகமாக உள்ளது என்பதோடு, இந்த நிலை நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டும் வருகிறது. இன்று இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கவுள்ளது.

நண்பர்களே,

கொரோனாவிற்கு எதிரான இந்த பிரம்மாண்டமான, நீண்ட நெடிய போராட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக விளங்குவது குறிப்பாக, கொரோனா தொற்றுக்கென சுகாதாரக் கட்டமைப்பு மிகவும் துரிதமாக உருவாக்கப்பட்டதே ஆகும். இதற்காகவே இந்தப் போராட்டத்தின்  தொடக்கத்திலேயே மத்திய அரசு 15 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பை அறிவித்தது.

தனிமைப்படுத்தும் மையங்கள் ஆனாலும் சரி, கொரோனாவிற்கான சிறப்பு மருத்துவமனைகள் ஆனாலும் சரி, அல்லது பரிசோதனை, கண்டறிவது, சுற்றியுள்ளோரைக் கண்டறிவது ஆகியவற்றுக்கான வலைப்பின்னல் ஆனாலும் சரி, தனது செயல்திறனை மிக வேகமாக இந்தியா விரிவுபடுத்தியது. இன்று இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கான மருத்துவமனைகள் உள்ளன என்பதோடு, 11 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்டோருக்கான படுக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

ஜனவரி மாதத்தில் நம்மிடம் கொரோனாவைக் கண்டறிவதற்கான ஒரே ஒரு பரிசோதனை மையம் மட்டுமே இருந்தது. இன்று நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரிசோதனைக்கென 1300 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு  வருகின்றன. அடுத்த சில வாரங்களுக்குள் நாளொன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வசதிகளை அதிகரிக்க நாங்கள் முயன்று வருகிறோம்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொருவரது தீர்மானமும் ஒவ்வொரு இந்தியனையும் பாதுகாப்பது என்பதாகத்தான் இருந்தது. இந்த உறுதிப்பாடுதான் இந்தியாவிற்கு மகத்தான பயன்களைத் தந்தது. இந்தக் காலத்தில் முழுப் பாதுகாப்புக்கான உடல் கவசம், முகக் கவசங்கள், பரிசோதனைக்கான கருவிகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் இந்தியா செய்த வேலைகள் மிகப்பெரும் வெற்றியின் கதையாகும். ஒரு கட்டத்தில் முழு பாதுகாப்புக்கான உடல் கவசம் ஒன்றே ஒன்று கூட இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனால் இன்று இத்தகைய உடல் கவசங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவில் இந்த உடல் கவசங்களை உற்பத்தி செய்யும் ஒரே ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. ஆனால் இன்று இந்தியா முழுவதிலும் 1200 உற்பத்தியாளர்கள் நாளொன்றுக்கு 5 லட்சம் உடல் கவசங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ஒரு நேரத்தில் என் – 95 முகக் கவசங்கள் கூட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சம் என் 95 முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுவாசக் கருவிகளுக்கு மற்ற நாடுகளை இந்தியா நம்பியிருக்க வேண்டிய ஒரு காலமும் இருந்தது. இன்று ஆண்டுதோறும் 3 லட்சம் சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான திறனை இந்தியா பெற்றுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மருத்துவத்திற்கான பிராணவாயு சிலிண்டர்களின் உற்பத்தியும் கூட பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.

இத்தகைய தீவிரமான முயற்சிகளின் விளைவாக, மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, இதுவரை மற்ற நாடுகளிலிருந்து நாம் இறக்குமதி செய்து வந்த பொருட்களை நாம் இப்போது ஏற்றுமதி செய்து வருகிறோம்.

நண்பர்களே,

மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள்ளேயே இத்தகைய மிகப்பெரும் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய மிகப்பெரும் சவால் நம் முன்னால் இருந்தது என்பதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நம் முன்னால் இருந்த மற்றொரு மிகப்பெரும் சவால் என்பது கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கென நாட்டில் மனித வள ஆதாரங்களை தயார் செய்ய வேண்டியிருந்ததாகும். எனினும் மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள்ளேயே நமது மருத்துவ உதவியாளர்கள், சுகாதார நலப் பணியாளர்கள் (ஆஷா), துணை மருத்துவ உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் இதர சுகாதார மற்றும் பொது ஊழியர்கள் இதுவரை நாடு கண்டிராத வகையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கான பயிற்சியைப் பெற்றனர்.

இன்று கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தைக் கண்டு உலகமே திகைத்துப் போய் இருக்கிறது. அதன் கவலை தவறானதென்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கான மிக முக்கியமான காரணம் என்பது இந்தப் போராட்டத்தின் களவீரர்கள்தான்.

நண்பர்களே,

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில்  விழிப்புணர்வு, அறிவியல் பூர்வமான தரவுகள், ஆதார வளங்கள் ஆகியவற்றில் நாம் பின் தங்கியிருக்கவில்லை  என்ற நிலையை நாம் எட்டியுள்ளோம்.

இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் மாநில அளவிலும், மாவட்ட, வட்ட, கிராம அளவிலும் இந்தப் பெருந்தொற்றுக்கான தேவை, சப்ளை ஆகியவற்றுக்கான மேலாண்மையை வலுப்படுத்த வேண்டியதே ஆகும்.

புதிய சுகாதார கட்டமைப்பினை நாம் உருவாக்க வேண்டியுள்ளது என்பதோடு, ஒவ்வொரு கிராமத்திலும் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், சிகிச்சை மையங்கள் ஆகியவற்றையும் வலுப்படுத்தி, அவற்றை மேலும் செயல்திறன் மிக்கவையாகவும் உயர்த்த வேண்டும். இதனை நாம் செய்தே ஆக வேண்டும். அதன் மூலமே நமது கிராமங்களில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டம் வலுவிழக்காமல் இருக்கும். இதுவரையில் நமது கிராமங்கள் இத்துறையில் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளன.

அதனோடு கூடவே, கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் நமது கள வீரர்கள் எவ்வகையிலும் சோர்ந்துவிடாமல் இருப்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். நமது சுகாதார நல அமைப்பில் புதிய மற்றும் ஓய்வு பெற்ற நிபுணர்களை தொடர்ந்து இணைப்பதிலும் நாம் இடையறாது செயலாற்ற வேண்டும்.

நண்பர்களே,

மிக விரைவிலேயே தொடர்ச்சியாக பல திருவிழாக்களும் வரவிருக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் நமக்கு மகிழ்ச்சியை தரும் அதே நேரத்தில் இந்தப் பெருந்தொற்று மக்களிடையே மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த திருவிழாக் கொண்டாட்டங்களின்போது ஏழைக் குடும்பங்கள் எந்தவகையிலும் பிரச்சனைகளை எதிர்நோக்காமல் இருப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

ஏழைகள்  நலனுக்கான பிரதமரின் உணவுத் திட்டத்தின் பயன்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பத்தையும் உரிய நேரத்தில் சென்றடைவதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

நண்பர்களே,

நமது நாட்டிலுள்ள திறமையான விஞ்ஞானிகள் கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டறிய மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். எனினும் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான செயல்திறன் மிக்க மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் காலம் வரையிலும் முகக் கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை கிருமி நாசினிகளின் மூலம் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். நம்மை மட்டுமின்றி, நமது குடும்பத்தாரையும், வீட்டிலுள்ள இளையவர்கள், முதியவர்கள் ஆகிய அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றே நான் நம்புகிறேன். இந்த உயர் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கியமைக்காக மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

*****



(Release ID: 1641794) Visitor Counter : 178