பிரதமர் அலுவலகம்

வாரணாசியைச் சேர்ந்த அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 09 JUL 2020 1:25PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவா!

புனித நிலமான காசியைச் சேர்ந்த உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இது சாவன் மாதம். இந்த நேரத்தில், ஒவ்வொருவருக்கும் பாபா-வின் காலில் அடிபணிவது போன்ற உணர்வு ஏற்படும். பாபா-வின் நகரைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதன்மூலம், எனக்கு தரிசனம் கிடைத்ததைப் போன்றே இன்று எனக்கு அமைந்துள்ளது. முதலில், கடவுள் சிவனுக்கு உகந்த இந்த மாதத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் சிவனின் அருளால், இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட, முழு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் காசி அமைந்துள்ளது. இந்த நாட்களில் பாபா விஸ்வநாதர் ஆலயத்துக்கு மக்களால் செல்ல முடியவில்லை என்பதே உண்மை. சாவன் புனித மாதத்தில் கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்ற உங்களது வேதனையை என்னால் உணர முடிகிறது. மாணஸ் ஆலயம் மற்றும் துர்கா ஆலயம் என அனைத்தும் மூடப்பட்டதுடன், சங்கட மோச்சன் பகுதியில் சவன் திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

எனினும், இந்த மிகப்பெரும் நெருக்கடியான நேரத்தில், இதற்கு எதிராக எனது காசி, நமது காசி உறுதியுடன் போராடுகிறது. அதன் ஒரு அங்கமாகவே இன்றைய நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. எவ்வளவு பெரிய பேரிடராக இருந்தாலும், காசியில் உள்ள மக்களுக்கு இருப்பதைப் போன்ற மனவுறுதி வேறு யாருக்கும் இல்லை. தங்களது நகரத்தின் முன்பு, கொரோனா போன்ற நெருக்கடி ஒன்றுமில்லை என்பதை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது, உலகுக்கே உத்வேகத்தை அளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, மிகவும் பிரபலமான டீ ரிங்குகளுக்கு செல்வதை மக்கள் நிறுத்திவிட்டதாக என்னிடம் தெரிவித்தனர்; எனவே, டிஜிட்டல் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள், இந்த முறையை மீட்டெடுத்துள்ளனர். பிஸ்மில்லா கான், கிரிஜா தேவி, ஹிராலால் யாதவ் போன்ற மாபெரும் இசைக்கலைஞர்கள் மூலம், இசை பாரம்பரியம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியத்தை காசியைச் சேர்ந்த புதிய தலைமுறை கலைஞர்கள் இன்று முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர். இதேபோன்ற பல்வேறு பணிகள், கடந்த 3-4 மாதங்களாக காசியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த காலகட்டத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசில் உள்ள பல்வேறு தரப்பினருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். காசியிலிருந்து எனக்கு வரும் தகவல்கள் மூலம், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று அவர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். வாரணாசியில் உள்ள பலருடனும் வழக்கமாக தொலைபேசியில் பேசி, தகவல்களையும், கருத்துக்களையும் பெற்றுள்ளேன். நான் தொலைபேசியில் பேசியவர்களில் சிலர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

தொற்று பரவலைத் தடுக்க யார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்? மருத்துவமனைகளின் நிலை என்ன? என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? தனிமைப்படுத்துதலின் நிலை என்ன? வெளியூரிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு நம்மால் என்ன ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று அனைத்து விவகாரங்கள் குறித்தும் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.

நண்பர்களே,

பாபா விஸ்வநாதர், அன்னை அன்னபூர்ணா ஆகியோர் நமது காசியில் வசிக்கின்றனர். ஒரு முறை அன்னை அன்னபூர்ணா-விடம் கடவுள் மகாதேவர் யாசகம் கேட்டதாக நம்பப்படுகிறது. அதன்பிறகு, யாரும் பசியுடன் தூங்கக் கூடாது என்று காசிக்கு சிறப்பு வரம் வழங்கப்பட்டுள்ளது; ஒவ்வொருவருக்கும் அன்னை அன்னபூர்ணா-வும், பாபா விஸ்வநாதரும் உணவுக்கு ஏற்பாடு செய்வார்கள்.

இந்த நேரத்தில் ஏழைகளுக்கு சேவை செய்ய, அனைத்து அமைப்புகளுக்கும் குறிப்பாக உங்கள் அனைவருக்கும் கடவுள் மாபெரும் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த வழியில், தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் அன்னை அன்னபூர்ணா மற்றும் பாபா விஸ்வநாதரின் செய்திகளை வழங்குபவராக நீங்கள் மாறியுள்ளீர்கள்.

மிகவும் குறுகிய காலத்தில், உணவு வழங்குவதற்காக உதவி எண்களை நீங்கள் ஏற்படுத்தியுள்ளீர்கள். பொது சமையலறைக்காக விரிவான இணையத்தைக் கட்டமைத்துள்ளீர்கள். உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளதோடு, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள், தரவு அறிவியல் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளீர்கள். வாரணாசி பொலிவுறு நகரத்துக்கான கட்டுப்பாட்டு மையத்தை இதற்காக முழுமையாக பயன்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு மட்டத்திலும் ஏழைகளுக்கு உதவ முழு திறனுடன் ஒவ்வொருவரும் பணியாற்றினீர்கள். நமது நாட்டில் சேவை உணர்வு ஒன்றும் புதிதல்ல; இது நமது கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை கூறிக் கொள்ள விளைகிறேன். எனினும், இந்த நேரத்தில் மக்களுக்கு உதவுவது, சாதாரண விஷயமல்ல. இந்த முறை, சோகத்தில் இருப்பவர்களின் கண்ணீரைத் துடைப்பது அல்லது ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது மட்டுமல்ல, இதில், கொரோனாவைரஸ் நோய் தொற்றிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே, சேவை உணர்வோடு மட்டுமன்றி, தியாக உணர்வும் அமைந்துள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கொரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்றிவரும் மக்கள், சாதாரண செயலில் ஈடுபடவில்லை. இது வெறும் கடமையாற்றுவது மட்டும் கிடையாது. அவர்களின் முன்பு அச்சமும், மிகப்பெரும் அபாயமும் உள்ளது. இதனை தாங்களாகவே முன்வந்து அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இது புதிய வடிவிலான சேவை.

உணவு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் போதுமான அளவில் வாகனங்கள் இல்லாதபோது, தங்களிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள வாகனங்களைப் பயன்படுத்த அஞ்சல் துறை அனுமதி அளிப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, அரசும், நிர்வாகமும் ஒவ்வொன்றையும் மறுத்துள்ளது என்றே கருதப்பட்டது. ஒவ்வொரு துறையும் தங்களின் எல்லைகள் குறித்து மோதிக் கொண்டன. அதாவது, “இது எனது துறை. நான் ஏன் உங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறிவந்ததைப் பார்த்துள்ளோம். ஆனால், இங்கு ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிவருவதைக் காண முடிகிறது. இந்த ஒற்றுமையே, காசியையும் மிகவும் அற்புதமானதாக மாற்றியுள்ளது. இங்குள்ள நிர்வாகங்களான காயத்ரி பரிவார் ரச்னத்மக் அறக்கட்டளை, ராஷ்ட்ரிய ரோட்டி வங்கி, பாரத் சேவாஷ்ரமம் சங்கம், நமது சிந்தி சகோதர, சகோதரிகள், பகவான் அவ்துத் ராம் குஷ்த் சேவை ஆஷ்ரமம், சர்வேஷ்வரி குழுமம், வங்கிகளில் பணியாற்றுபவர்கள், தொழில் சங்கத்தினர் என எண்ணற்ற மக்கள், ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி வருகின்றனர். இதன்மூலம், காசியின் பெருமையை மேம்படுத்தியுள்ளனர். ஆனால், 5-6 பேரிடம் மட்டுமே தற்போது என்னால் பேச முடியும். மனிதசமூகத்துக்கு சேவையாற்ற தங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான அமைப்புகள் மற்றும் மக்கள் உள்ளனர்; அவர்கள் அனைவருடனும் என்னால் பேச முடியாது. ஒவ்வொருவரின் பணிக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த இலக்கில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். நான் உங்களுடன் இன்று பேசும்போது, தகவல்களைப் பெறுவதோடு மட்டுமல்லாது, உங்களிடமிருந்து உத்வேகத்தையும் பெற உள்ளேன். இந்த நெருக்கடியான நேரத்தில் உங்களைப் போன்ற மக்கள் அதிகமாக உழைக்கிறீர்கள். உங்களிடமிருந்து ஆசியை விரும்புகிறேன். பாபா போல்நாத்-தும், அன்னை அன்னபூர்ணா-வும் உங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கட்டும்!

நண்பர்களே,

இந்த கொரோனா நெருக்கடியானது, சிந்தனை, பணி, உணவு, நீர்  என மக்களின் அனைத்து செயல்பாடுகளையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. நீங்கள் சேவையாற்றும் விதம், சமூக வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது குழந்தைப் பருவத்தில் நான் ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது, “பொற்கொல்லர் ஒருவர் இருந்தார். தனது வீட்டிலேயே பணியாற்றும் அவர், சில குடும்பத்தினருக்கு தங்கத்திலான பொருட்களை செய்து கொடுத்தார். அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது. சந்தையிலிருந்து குச்சிகளை வாங்கி வருவார். காலையில் பல் துலக்குவதற்கு பிரஷ்களை நாம் பயன்படுத்துகிறோம். அந்த நாட்களில் நாம் குச்சிகளைக் கொண்டு பல்துலக்கி வந்தோம். அவர், மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எத்தனை பேர் என கணக்கெடுப்பார். மாலை நேரத்தில் மருத்துவமனைக்கு சென்று, அவர்களுக்கு குச்சிகளை வழங்குவார். குச்சிகளைக் கொடுத்து மக்களுக்கு உதவும் சிறு பழக்கத்தை அவர் கொண்டிருந்தார். இதன்மூலம், ஒட்டுமொத்தப் பகுதிக்கும் அவர் பிரபலமடைந்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். அவரது சேவை உணர்வைப் பற்றி அதிக அளவில் ஒவ்வொருவரும் பேசுவார்கள். மேலும், தங்கத்தில் எந்த வகையான பொருளை செய்வதாக இருந்தாலும் அவரிடம் செல்ல விரும்புவார்கள். மக்களுக்கு சேவையாற்றுவதன் மூலம், தனக்குத் தானே நல்ல பெயரை உருவாக்கியிருந்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நம்பிக்கைக்கு உரிய நபராக அவர் மாறினார்.” எனவே, சேவை செய்யும் உணர்வை, வெறும் கொடுத்து வாங்குவதைவிட மிகவும் பெரியதாக நமது சமூகம் கருதுகிறது. மேலும், சேவையைப் பெறும் ஒருவர், தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், யாருக்காவது உதவி செய்வார். இந்த சுழற்சி சென்றுகொண்டே இருக்கும். இதுதான் சமூகத்தை ஊக்குவிக்கிறது.

கொடுமையான பெருந்தொற்று, நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுமைக்கும் தாக்கியதாக நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மற்றொரு பெருந்தொற்று உலகைத் தாக்கியுள்ளது. அந்த நேரத்தில், இந்தியாவுக்கு இந்த அளவு மிகப்பெரும் மக்கள்தொகை கிடையாது. ஆனால், அந்த நேரத்தில், பெருந்தொற்றால் அதிக அளவிலான மக்கள் உயிரிழந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். எனவே, இந்த பெருந்தொற்றில், இந்தியாவின் பெயரை குறிப்பிட ஒட்டுமொத்த உலகமும் அஞ்சின. நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்றால் இந்தியா அழிந்தது; இந்தியாவில் ஏராளமானோர் உயிரிழந்தனர், இந்தியாவின் மக்கள்தொகை தற்போது மிகப்பெரும் அளவில் அதிகரித்துள்ளது, எனவே, பல்வேறு சவால்கள் உள்ளன என்று வல்லுநர்கள் தெரிவித்தனர். அவர்கள் இந்தியா குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கினர். தற்போதும்கூட, இந்தியா அழிவை சந்திக்கும் என்று அவர்கள் கருதினர். ஆனால் என்ன நடந்தது? 23-24 கோடி மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேசம் பாதுகாக்கப்படுமா என்று மக்கள் பல்வேறு சந்தேகங்களைத் தெரிவித்ததை நீங்கள் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். உத்தரப்பிரதேசத்தில் கடும் வறுமை உள்ளது, ஏராளமான இடம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்று சிலர் கூறினர். அவர்கள் எவ்வாறு 6 அடி இடைவெளியைப் பின்பற்றுவார்கள்? கொரோனாவால் இல்லாவிட்டாலும், பட்டினியால் அவர்கள் இறப்பார்கள் என்று தெரிவித்தனர். ஆனால், உங்களது ஒத்துழைப்பு, கடினஉழைப்பு மற்றும் உத்தரப்பிரதேச மக்களின் பலத்தால், அனைத்து அச்சங்களும் அழிக்கப்பட்டன. 

நண்பர்களே,

24 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பிரேசில் போன்ற மிகப்பெரும் நாட்டில், கொரோனாவால் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், அதே அளவு மக்கள்தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், கொரோனாவால் 800 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் உயிரிழப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தியதோடு மட்டுமன்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரும் வேகமாக குணமடைந்து வருகின்றனர் என்பதே தற்போதைய நிலை. இதற்கு விழிப்புணர்வு, உங்களைப் போன்ற ஏராளமான மிகப்பெரும் மனிதர்களின் சேவை மற்றும் தீவிர செயல்பாடே முக்கிய காரணம். உங்களைப் போன்ற சமூக, மத மற்றும் சேவை அமைப்புகளின் சேவை, உங்களது தீர்மானம், உங்களது மதிப்பு ஆகியவை இந்த நெருக்கடியான நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் பலத்தை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்குகிறது. மிகவும் நெருக்கடியான தருணத்தில் இந்தப் பலமே, அதிக அளவில் உதவி செய்கிறது.

நண்பர்களே,

நாம் காசியில் வசித்துவருகிறோம். கபீர்தாஸ் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்-

सेवक फल मांगे नहीं, सेब करे दिन रात ||

மற்றவர்களுக்கு சேவையாற்றும் ஒருவர், சேவையாற்றுவதற்கான பலனை கேட்க மாட்டார். நாள் முழுவதும் சுயநலமற்ற சேவையில் ஈடுபடுவார்கள். மற்றவர்களுக்கு செய்யும் சுயநலமற்ற சேவையின் இந்த மதிப்புகளே, இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்களுக்கு உதவியாக உள்ளன. இந்த உணர்வுடனேயே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடிமக்களின் பாதிப்பைக் குறைக்கவும், பகிர்ந்துகொள்ளவும் மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை மக்களுக்கு உணவுதானியங்கள் கிடைக்கவும், அவர்களது சட்டைப் பையில் பணம் இருக்கச் செய்யவும், வேலைவாய்ப்புகள் கிடைக்கவும், அவர்களது பணிகளுக்கு கடன் கிடைக்கச் செய்யவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

நண்பர்களே,

இந்தியாவில் இன்று 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இது ஏழை மக்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது. வாரணாசியைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் பயனளிக்கிறது. அமெரிக்காவைவிட இரண்டு மடங்கு  மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், ஒரு பைசா கூட வாங்காமல் தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் யூகித்துப் பாருங்கள். இந்தத் திட்டம், நவம்பர் 30 வரை, அதாவது, தீபாவளி மற்றும் சத் பூஜை வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. திருவிழா சமயத்தில் எந்தவொரு ஏழையும் உணவு இல்லாமல் தவிக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உணவுப் பொருட்களைத் தவிர, உஜ்வலா திட்டப் பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. பொதுமுடக்க காலத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏழைகளுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இதனை வழங்கினோம். 

நண்பர்களே,

அரசு இடைவிடாது பணியாற்றிவருகிறது. ஏழைகளின் மக்கள் நிதி கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாயை செலுத்தியது, ஏழைகள், சிறு தொழில் துறையினர் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு எளிதாக கடன் வழங்கியது, பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் போன்ற துறைகள் மீது நடவடிக்கைகள் என வரலாற்றுப்பூர்வ முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ரூ.20,000 கோடி மதிப்பில் மீன்வளத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மீனவ விவசாயிகளுக்கும் பயனளிக்கும். அதோடு, வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான மற்றொரு சிறப்பு பிரச்சாரத்துக்கு, உத்தரப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின்கீழ், மற்ற மாநிலங்களிலிருந்து திரும்பிய கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், பிற கலைஞர்கள் அல்லது தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

கொரோனா நெருக்கடி என்பது, அதனை எதிர்கொள்ள தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற அளவுக்கு மிகப்பெரியது. நாம் வெறுமனே அமர்ந்துவிட முடியாது. குறைந்தபட்ச நெருக்கடியையே எதிர்கொள்வதை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறோம் என்பதை நெசவாள சகோதர, சகோதரிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழில் துறையினர் மற்றும் ஒவ்வொருவருக்கும் நான் உறுதியளிக்க விரும்புகிறேன். அதேநேரத்தில், வாரணாசியும் தொடர்ந்து முன்னேற்றம் பெறும். வாரணாசியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு, நமது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருடன் தொழில்நுட்பம் மூலமாக நீண்ட நேரம் நான் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனை மிகவும் விரிவாக இருந்தது. தொழில்நுட்பம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம், ஒவ்வொரு திட்டத்தையும் நான் கண்காணித்தேன். அப்போது, சாலைகள், மின்சாரம் மற்றும் நீர் போன்ற மற்ற திட்டங்களுடன் பாபா விஸ்வநாதர் ஆலயத் திட்டத்தின் நிலவரம் குறித்து எனக்கு விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டன. நானும்கூட, சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டேன். சில நேரங்களில் தடைகள் இருந்தன. அந்தத் தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தற்போது, காசியில் மட்டும் ரூ.8,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.8,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம், பல்வேறு மக்களும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். பழைய நிலை திரும்பியதும், காசியின் பழமையான பெருமையும் கூட திரும்பும்.

இதற்காகவே நாம் தற்போதுமுதலே தயாராக வேண்டும். எனவே, அனைத்து திட்டங்களும், குறிப்பாக, படகு சுற்றுலா, ஒளி மற்றும் ஒலி காட்சிகள், தசாஸ்வமேத படித்துறையை சீரமைத்தல், கங்கா ஆர்த்திக்காக ஆடியோ-வீடியோ காட்சிகளை ஏற்படுத்துவது மற்றும் படித்துறைகளின் மற்ற ஏற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் அதிவேகமாக செய்துமுடிக்க கவனம் செலுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

வரும் நாட்களில், தற்சார்பு பாரதம் திட்டத்தின் மிகப்பெரும் மையமாக காசி மாற வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இதற்கான பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது. அண்மையில் அரசு மேற்கொண்ட முடிவுகளுக்குப் பிறகு, சேலைகளுக்கான புதிய வர்த்தக வாய்ப்புகள் இங்கு வர உள்ளன. அதோடு, பிற கைவினைப் பொருட்கள், பால்வளப் பொருட்கள், மீன்வளப் பொருட்கள் மற்றும் தேனீ வளர்ப்புக்கான வாய்ப்புகளும் வர உள்ளன. தேன்கூட்டுக்கு உலகில் மிகப்பெரும் தேவை உள்ளது. இதனை பூர்த்திசெய்ய நம்மால் முயற்சி செய்ய முடியும்.

இந்த மாதிரியான தொழில்களில் மிகப்பெரும் அளவில் பங்கேற்பதை உறுதிப்படுத்துமாறு விவசாயிகள் மற்றும் நமது இளம் நண்பர்களையும் நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இது நமது பொறுப்பு. நம் அனைவரின் முயற்சியின் மூலம், இந்தியாவின் மிகப்பெரும் ஏற்றுமதி முனையமாக காசி வளரும். மேலும், நாம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் உந்துசக்திக்கு ஆதாரமாகவும் காசியை மாற்ற வேண்டும்.

 

நண்பர்களே,

உங்கள் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பை இன்று பெற்றிருப்பதால், உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாவன் மாதத்தில் காசி மக்களைப் பார்ப்பது மிகப்பெரும் பாக்கியம். மக்களுக்கு நீங்கள் சேவையாற்றும் விதத்துக்காகவும், மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்பட்டுவருவதற்காகவும் உங்களுக்கு உண்மையில் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

உங்களது சேவைப் பணியின்மூலம், ஒவ்வொருவரையும் நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள். நாம் ஒன்றை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொருவருடனும் இணைந்து செய்ய வேண்டும். தனிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்-கை ஒழிக்க விரும்புகிறோம். இந்த விஷயத்தை நாம் கைவிட்டுவிடக் கூடாது. சாலைகளில் எச்சில் துப்பும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும். இரண்டாவதாக, 6 அடி இடைவெளியைப் பேணுவதுடன், முகக்கவசம் அணிவதை கைவிடக் கூடாது. கைகளை கழுவும் பழக்கத்தை மேற்கொள்வதுடன், மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதனை நாம் நமது கலாச்சாரமாகவும், நமது பழக்கமாகவும் தற்போது மாற்ற வேண்டும்.

பாபா விஸ்வநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசி உங்கள் அனைவருடனும் இருக்கட்டும். இந்த விருப்பத்துடன் எனது உரையை முடித்துக் கொள்கிறேன்! மீண்டும் ஒரு முறை, நீங்கள் செய்துவரும் மாபெரும் பணிக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மிக்க நன்றி!

ஹர ஹர மகாதேவா!!!

 

*****

 



(Release ID: 1639277) Visitor Counter : 251