பிரதமர் அலுவலகம்

உலகளாவிய இந்தியா வாரம் 2020 தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 09 JUL 2020 3:10PM by PIB Chennai

அனைத்துத் தரப்பினராகப் பங்கேற்றுள்ள சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு, வணக்கம்! இந்தியாவின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வெளிநாடு வாழ் இந்தியக் குழுவினரை நான் பாராட்டுகிறேன். வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்துள்ள அருமையான பணியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. உங்களது நிகழ்ச்சிகளால், இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை உலக அளவிலான மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடிந்துள்ளது. இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்த நீங்கள் உதவியிருக்கிறீர்கள். இந்த ஆண்டு நிகழ்ச்சி, மற்ற நாடுகளுக்கும் சென்றடைவதாக உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறன். அடுத்த ஆண்டில், நீங்களும் மையக் களத்திற்கு வந்து விம்பிள்டனை கண்டு மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தக் காலக்கட்டத்தில், மீட்சி பெறுதல் பற்றி பேசுவது இயல்பானதாக உள்ளது. உலகளவிலான மீட்சி மற்றும் இந்தியா தொடர்பு பற்றி பேசுவதும் அதே அளவுக்கு இயல்பானது. உலக அளவிலான மீட்சியில் இந்தியா முதன்மைப் பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுவதில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இரண்டு அம்சங்களுடன் இது தொடர்பு கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். முதலாவது விஷயம் - இந்தியாவின் திறமை. உலகம் முழுக்க, இந்தியாவின் திறன் வளத்தின் பங்களிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்தியத் தொழில் நிபுணர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களை உலகம் முழுக்க நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இந்தியாவின் தொழில்நுட்பத் துறை மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை யாரால் மறந்துவிட முடியும்? பல தசாப்தங்களாக அவர்கள் தான் வழிகளை உருவாக்கி வருகிறார்கள். திறமைகளின் கிடங்காக இந்தியா உள்ளது. பங்களிப்பு செய்வதில் ஆர்வமாக, கற்றுக் கொள்வதற்குத் தயாராக உள்ள மக்கள் இருக்கிறார்கள். மிகுந்த பயன்தரக் கூடிய வகையில் இரு வழி ஒருங்கிணைப்பு இருக்கிறது.

நண்பர்களே,

சீர்திருத்தம் மற்றும் புத்துயிரூட்டுதலில் இந்தியாவின் திறமை என்பது இரண்டாவது விஷயமாக உள்ளது. இயல்பாகவே இந்தியர்கள் சீர்திருத்தவாதிகள்! சமூக அளவிலாக இருந்தாலும் அல்லது பொருளாதார அளவிலாக இருந்தாலும், அனைத்து சவால்களையும் இந்தியா வெற்றி கண்டுள்ளது என்பதை வரலாறு கண்டிருக்கிறது. சீர்திருத்தம் மற்றும் புத்துயிரூட்டல் உத்வேகத்துடன் இந்தியா இதைச் செய்திருக்கிறது. அதே உத்வேகம் இப்போதும் தொடர்கிறது.

நண்பர்களே,

ஒருபுறத்தில், உலக அளவிலான நோய்த் தொற்றை எதிர்த்து இந்தியா கடுமையாகப் போராடி வருகிறது. மக்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையில், பொருளாதார ஆரோக்கியம் குறித்தும் அதே அளவு கவனத்தை செலுத்தி வருகிறோம். மீட்சி என்று இந்தியா பேசும்போது, கவனத்துடன் கூடிய மீட்சி, அரவணைப்புடன் கூடிய மீட்சி, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார அளவில் நீடித்த பயன் தரக் கூடிய மீட்சி என்பதைப் பற்றித்தான் சிந்திக்கிறோம். இயற்கை அன்னையை எல்லோரும் வணங்கும் கலாச்சாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பூமி தான் நமது தாய், நாமெல்லாம் அவரின் பிள்ளைகள் என்ற நம்பிக்கை இந்தியாவில் உள்ளது.

நண்பர்களே,

கடந்த ஆறு ஆண்டுகளில், ஒட்டுமொத்த நிதிப் பங்கேற்பு நிலை, வீ்ட்டு வசதி மற்றும் கட்டமைப்புக் கட்டுமான சாதனை, தொழில் செய்வதை எளிமையாக்குதல், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள், உலகில் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமாக - ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் என்பவை போன்ற பெரிய விஷயங்களை இந்தியா செய்திருக்கிறது. அடுத்த சுற்று வளர்ச்சிக்கான முன்முயற்சிகளுக்கு அடித்தளம் இடுவதாக இந்தப் பணிகள் அமைந்துள்ளன.

நண்பர்களே,

சாத்தியமற்றது என்று கருதும் விஷயங்களை செய்து காட்டும் உத்வேகம் இந்தியர்களிடம் உள்ளது. பொருளாதார மீட்சி என்ற விஷயத்தில் இந்தியாவில் ஏற்கெனவே வளமான மீட்சியைக் கண்டு வருகிறோம். எங்கள் குடிமக்களுக்கு நாங்கள் நிவாரணங்கள் வழங்கி, ஆழ்ந்த கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம். அதிக உற்பத்தி சார்ந்ததாக, முதலீட்டுக்கு உகந்ததாக, போட்டி நிலை கொண்டதாக பொருளாதாரத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

எங்களுடைய நிவாரணத் தொகுப்புத் திட்டங்கள் புத்திசாலித்தனமானவையாக உள்ளன. மிகுந்த ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், அதிக பயன்களைப் பெறுவதை இலக்காகக் கொண்டு அவை உருவாக்கப் பட்டுள்ளன. நாங்கள் செலவிடும் ஒவ்வொரு பைசாவும், பயனாளிக்கு நேரடியாகச் சென்று சேருவதற்கு தொழில்நுட்பம் எங்களுக்கு உதவியுள்ளது. இலவச சமையல் எரிவாயு அளித்தல், வங்கிக் கணக்குகளில் ரொக்க உதவிகளைச் செலுத்துதல், கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குதல் மற்றும் ஏராளமான இதர விஷயங்கள் இந்த நிவாரணத் தொகுப்புகளில் அடங்கும். முடக்கநிலையை நாங்கள் தளர்த்தத் தொடங்கியதும், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதற்காக, உலகின் மிகப் பெரிய பொதுப்பணிகள் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்குப் புதிய சக்தியை அளிப்பதாக இருப்பதுடன், கிராமப் பகுதிகளில் நீடித்து நிலைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

உலகில் மிகவும் வெளிப்படையான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. உலக அளவிலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து தொழில் தொடங்க நாங்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தியா வழங்கும் அளவிலான வாய்ப்புகளை, மிகவும் சில நாடுகள் மட்டுமே வழங்கும். இந்தியாவில் தொடக்க நிலையில் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் உள்ளன. வேளாண்மைத் துறையில் எங்களுடைய சீர்திருத்தங்கள், சேமிப்பு மற்றும் கிடங்கு வசதிகளை ஏற்படுத்துவதில் முதலீடு செய்ய கவர்ச்சிகரமான வாய்ப்புகளை அளிக்கும். எங்கள் விவசாயிகளின் கடின உழைப்பில் நேரடியாக முதலீடு செய்ய நாங்கள் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறோம்.

நண்பர்களே,

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் நாங்கள் சீர்திருத்தங்கள் செய்திருக்கிறோம். பெரிய தொழிற்சாலைகளுக்கு ஒத்திசைவாக எம்.எஸ்.எம்.இ. துறை இருக்கும். பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால், உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்தியா, நீங்கள் வந்து அந்த ராணுவத்துக்கான பொருள்களை தயாரிக்குமாறு அழைக்கிறது. இப்போது, விண்வெளித் துறையில் தனியார் துறையினர் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. மக்கள் நன்மைக்காக வணிக ரீதியில் விண்வெளித் தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ஸ்டார்ட் அப் துறை துடிப்புமிக்கதாக உள்ளது. டிஜிட்டல் திறன் பெற்ற, வளர்ச்சிக்கான உத்வேகம் பெற்ற கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக என்ன மாதிரியான பொருள்களையெல்லாம் நீங்கள் தயாரிக்கலாம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நண்பர்களே,

இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறை இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிற்கே பெரிய சொத்தாக உள்ளது என்பதை, நோய்த் தொற்று சூழ்நிலை வெளிக்காட்டியுள்ளது. மருந்துகளின் விலைகளைக் குறைப்பதில், குறிப்பாக வளரும் நாடுகளுக்கு விலைகளைக் குறைப்பதில் இந்தியா முக்கியமான பங்காற்றியுள்ளது. உலக அளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இன்றைய காலக்கட்டத்திலும் கூட,  கோவிட்-19 தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து உற்பத்தி செய்யும் சர்வதேச அளவிலான முயற்சியில் எங்களுடைய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நண்பர்களே,

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 130 கோடி இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வுடன், உலக அளவிலான வழங்கலையும் ஒருங்கிணைப்பு செய்வதாக தற்சார்பு இந்தியா திட்டம் உள்ளது. தற்சார்பு என்பது சுயதேவைகளை பூர்த்தி செய்வது என்பதோடு முடிந்துவிடுவதாக, உலகில் இருந்து விலகி இருப்பதாக அர்த்தம் கிடையாது. தேவைகளை சுயமாகப் பூர்த்தி செய்து கொள்வது, சுயமாக உற்பத்தி செய்வது என்பதாக அது இருக்கும். செயல் திறன், சமன் நிலை மற்றும் நீடித்துத் தாங்கும் செயல்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் கொள்களைகளை நாங்கள் வலியுறுத்துவோம்.

நண்பர்களே, இந்த அமைப்பு பண்டிட் ரவிசங்கரின் 100வது பிறந்த தின ஆண்டையும் கொண்டாடுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சாஸ்திரிய இசையின் அருமையை உலக அளவில் கொண்டு சென்றவர் அவர்.  நமஸ்தே என்பது வாழ்த்து சொல்வதற்கான வார்த்தையாக உலகெங்கும் எப்படி பரவியது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். யோகா, ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலக அளவில் அதிகரிக்கச் செய்வதாக இந்த நோய்ப் பரவல் காலம் அமைந்துள்ளது. இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம், இந்தியாவின் உலக அளவிலான அமைதிக்கான நெறிகள் தான் நம்முடைய பலம்.

நண்பர்களே,

உலக நன்மை மற்றும் வளமைக்காக தன்னாலான அனைத்து பணிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. சீர்திருத்தம் பெறும், செயல்படும், நிலைமாற்றம் பெறும் இந்தியாவாக இது உள்ளது. புதிய பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் இந்தியா இது. மானிடர்களை மையமாகக் கொண்ட, பங்கேற்புடன் கூடிய வளர்ச்சிக்கான அணுகுமுறைகளை கையாளும் இந்தியாவாக இது உள்ளது.

உங்களுக்காக இந்தியா காத்திருக்கிறது.

நமஸ்தே,

மிக்க நன்றி.

                                                                                    -----


(Release ID: 1637678) Visitor Counter : 404