பிரதமர் அலுவலகம்

இந்திய உலக வார தொடக்க அமர்வில் பிரதமர் உரை

உலக மறுமலர்ச்சியில் இந்தியா முன்னணி பங்கு ஆற்றி வருகிறது – பிரதமர்

Posted On: 09 JUL 2020 3:17PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்தியா உலக வார தொடக்க அமர்வில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

தற்போதைய நெருக்கடியான நிலையைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்தியா முன்னணியில் செயலாற்றி வருவதாக கூறினார். இது இரண்டு அம்சங்களுடன் நெருங்கியது என அவர் கூறினார். முதலாவது, இந்தியாவின் திறமை. இரண்டாவது, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்துக்கான இந்தியாவின் செயல் திறன். உலகம் முழுவதும், இந்தியாவின் திறமைமிக்கவர்களின் பங்களிப்பு, குறிப்பாக, இந்தியாவின் தொழில்நுட்பம், தொழில் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

ஆற்றல்மிக்க திறமைகளின் பிறப்பிடமாக உள்ள இந்தியா, பங்களிக்க ஆவலுடன் உள்ளது என்று அவர் கூறினார். இந்தியர்கள் இயல்பிலேயே சீர்திருத்தவாதிகள் என்று குறிப்பிட்ட அவர், சமூகம் அல்லது பொருளாதார சவால் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு சவாலையும் இந்தியா முறியடித்துள்ளது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும் என்றார்.

இந்தியா மறுமலர்ச்சி பற்றி பேசும் போது, கவனத்துடனான மறுமலர்ச்சி, கருணாயுடனான மறுமலர்ச்சி, நீடித்திருக்கக்கூடிய மறுமலர்ச்சி ஆகியவை சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் அடைந்த பயன்களைப் பின்வருமாறு பிரதமர் பட்டியலிட்டார்; மொத்த நிதி உள்ளடக்கம், வீட்டுவசதியில் சாதனை மற்றும் உள்கட்டமைப்பு, தொழில் நடத்த எளிதான சூழல், ஜிஎஸ்டி உள்ளிட்ட துணிச்சலான வரி சீர்திருத்தங்கள்.

பொருளாதார மீட்புக்கான ஆக்கபூர்வ அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன. இது இந்தியாவின் எழுச்சியைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இலவச எரிவாயு வழங்கல், வங்கிக் கணக்குகளில் ரொக்கம் செலுத்துதல், லட்சக்கணக்கான மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கல் மற்றும் இதர திட்டங்கள் என ,ஒவ்வொரு பயனையும் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க அரசுக்கு இன்றைய தொழில்நுட்பம் உதவுகிறது என்று அவர் கூறினார்.

உலகின் திறந்த பொருளாதாரங்களுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும், இந்தியாவில் தங்கள் தொழில் நிறுவனங்களை அமைக்குமாறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்தியா ஏராளமான சாத்தியங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட நாடு என்று பிரதமர் குறிப்பிட்டார்.

விவசாயத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், உலகத் தொழில் துறைக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் குறு, சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றும், அந்த தொழில் பிரிவு மிகப் பெரிய தொழில்துறையாக உருவெடுக்க இது பயன்படும் என்றும் பிரதமர் கூறினார்.

பாதுகாப்புத்துறையிலும், விண்வெளித்துறையிலும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவின் மருந்துத் தொழில்துறை இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் ஒரு பொக்கிஷமாகும் என்பதை இந்தப் பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு , மருந்துகளின் விலையைக் குறைப்பதில் , இது முன்னணி பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

சுயசார்பு இந்தியா என்பது உள்நாட்டுடன் சுருங்கி விடுவதோ அல்லது உலகத்துக்கு மூடப்பட்டதோ அல்ல, சுய நீடிப்பு, சுய உற்பத்திக்கு ஏற்ற ஒரு இயக்கமாகும் என அவர் தெரிவித்தார்.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றைக் கொண்டதாக இந்தியா தற்போது உள்ளது என்று கூறிய அவர், அது புதிய பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் இந்தியா என்றார். மனிதத்தை மையப்படுத்தி, உள்ளார்ந்த மேம்பாட்டுக்கான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் இந்தியா என்று கூறிய அவர், இந்தியா உங்களுக்காக காத்திருக்கிறது என்றார்.

இந்தியாவின் தொன்மையான இசையை உலகுக்கு வழங்கிய பண்டிட் ரவி சங்கரின் நூறாவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலான ஏற்பாட்டை இந்த அமைப்பு செய்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறை எவ்வாறு உலகம் முழுவதும் பரவியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். உலகத்தின் நன்மைக்கும் , முன்னேற்றத்துக்கும் மேலும் இயன்ற அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

*****


(Release ID: 1637677) Visitor Counter : 336