ஆயுஷ்

சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் கருத்துகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்

Posted On: 18 JUN 2020 6:32PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2020-இன் முக்கிய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக  பிரதமர்  திரு. நரேந்திர மோடியின் செய்தி இருக்கும். பிரதமரின் கருத்துகள் 21 ஜூன், 2020 அன்று காலை 6:30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இந்த வருடத்தின் சர்வதேச யோகா தினம் மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஆயுஷ் அமைச்சகத்தால் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

டிடி நேஷ்னல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி இந்தியா, டிடி உருது, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான், அனைத்து RLSS அலைவரிசைகள் மற்றும் அனைத்து பிராந்திய நிலையங்களிலும் பிரதமரின் கருத்துகள் ஒளிபரப்பப்படும். கடந்த வருடங்களின் சர்வதேச யோகா தினங்களைப் போலவே, இந்த உரையைத் தொடர்ந்து மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் குழுவினரால் 45- நிமிடங்களுக்கு பொது யோகா செயல்முறைகள் நேரலையில் செய்து காட்டப்படும். பல்வேறு வயதினர் மற்றும் பலதரப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு இந்த பொது யோகா செயல்முறை பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பொது யோகா செயல்முறையில் பயிற்சி மேற்கொள்வோருக்கு யோகா மீது ஆர்வமும், உந்துதலும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளதல், அவர்கள் இதை நீண்ட காலத்துக்கு தொடரலாம்.

கடந்த வருடங்களின் சர்வதேச யோகா தினங்களில், பொது இடங்களில் மக்கள் பெரிய அளவில் கலந்து கொண்ட இணக்கமான யோகா நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றது கவனிக்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய உலகளாவிய சுகாதார அவசர நிலையினால், அத்தகைய கொண்டாடங்களில் சிறிய அளவில் இந்த வருடம் கவனம் செலுத்தி, மக்கள் தங்களது வீடுகளில் ஒட்டு மொத்தக் குடும்பத்தோடு யோகா செய்வதன் மீது அதிகமாக கவனம் திரும்பியுள்ளது.

சர்வதேச யோகா தினத்தை நாடு முழுவதும் அனுசரிப்பதற்கான மைய அமைச்சகமாக உள்ள ஆயுஷ் அமைச்சகம், கொவிட்-19 நெருக்கடியின் போது வீடுகளில் யோகா பயிற்சி மேற்கொள்ளும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், பல்வேறு இணைய மற்றும் கலப்பு-இணைய முயற்சிகளை கடந்த மூன்று மாதங்களாக எடுத்து வருகிறது.

செயல் முறையை மக்கள் கற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும், டிடி பாரதியில் தினசரி காலை, பொது யோகா செயல்முறை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் முயற்சிகளை ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டது. ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளம், யோகா இணையதளம், அதன் சமுக ஊடகப்பக்கங்கள், தலைசிறந்த யோகா நிபுணர்களின் தினசரி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் கிடைக்கச் செய்யப்பட்டன. கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கலாச்சார அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமான தனிநபர்களும், நிறுவனங்களும் தங்களது பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் நலனுக்காக சர்வதேச யோகா தினத்தில் தங்கள் வீடுகளில் இருந்தே கலந்து கொள்ள உறுதியளித்துள்ளன. இந்த முயற்சிகளின் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள யோகா சமூகத்தினரும், வீடுகளில் இருந்து இணையப் போகும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும், சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கத் தற்போது தயாராக உள்ளனர்.

21 ஜூன், 2020 அன்று காலை 6:30 மணிக்கு சர்வதேச யோகா தினம் 2020- கொண்டாடவும், வீடுகளில் இருந்து மகிழ்ச்சியான முறையில் மேற்கொள்ளப்போகும் பொது யோகா செயல்முறையில் கலந்து கொள்ளவும் உலகெங்கிலும் உள்ள யோகா மேற்கொள்பவர்களை ஆயுஷ் அமைச்சகம் வரவேற்கிறது.

***


(Release ID: 1632512) Visitor Counter : 300