பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடனான கலந்துரையாடலின் தொடக்கத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள்

Posted On: 16 JUN 2020 4:33PM by PIB Chennai

நண்பர்களே வணக்கம்!

முதல்கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இரண்டு வாரங்கள் கடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இன்றைய ஆலோசனையில், உங்களிடமிருந்து ஏராளமான கருத்துக்களை அறிந்துகொள்ளவும், கற்றுக் கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய ஆலோசனை மற்றும் நீங்கள் தெரிவிக்கும் பரிந்துரைகள், நாட்டின் அடுத்தகட்ட திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்பதே முக்கியமான அம்சம்.

நண்பர்களே,

எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்வதில் நேரம் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவானது, நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருந்தது.

எதிர்காலத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் குறித்து ஆய்வு செய்யும் போதெல்லாம், இந்த நேரத்தில் நாம் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டோம், ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணம் எவ்வாறு அமைக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளப்படும்.

 

 

நண்பர்களே,

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் இல்லாத போதே, இதனை எதிர்கொள்ள இந்தியா முடிவெடுத்து, தயாரானது. ஒவ்வொரு இந்தியரின் உயிரையும் பாதுகாக்க நாள்தோறும் தீவிரமாகப் பணியாற்றினோம்.

கடந்த வாரங்களில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள், வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர். லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனர். ரயில், சாலை, விமானம், கடல் மார்க்கம் என அனைத்து வகையான போக்குவரத்தும் திறக்கப்பட்டது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதிலும், மற்ற நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று, இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் இந்திய மக்கள் இன்று வெளிப்படுத்திவரும் கட்டுப்பாடுகள் குறித்து உலகம் முழுவதும் உள்ள வல்லுநர்களும், சுகாதார நிபுணர்களும் விவாதித்து வருகின்றனர்.

இன்று, இந்தியாவில் குணமடைவோர் விகிதம், 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. கோவிட்-19 நோயாளிகளில் அதிக அளவிலானோர் குணமடைவதில் முன்னணியில் உள்ள உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. கொரோனா வைரஸால் எந்தவொரு நபரும், எந்தவொரு இந்தியரும் உயிரிழப்பது மோசமானது மற்றும் எதிர்பாராதது. கோவிட்-19 தொற்றால் குறைந்த உயிரிழப்பு பதிவான நாடுகளில் ஒன்றாக இந்தியா இன்று திகழ்கிறது என்பதும் உண்மை.

பல்வேறு மாநிலங்களின் அனுபவங்கள் இன்று, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் இழப்புகளைக் குறைத்து, பொருளாதாரத்தை வேகமாக பழைய நிலைக்கு இந்தியாவால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

நண்பர்களே,

முதல்கட்டமாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு வாரங்களில், விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது, கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாட்டை நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

எனவே, முகக்கவசம் அல்லது முகத்தை மறைத்திருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். முகக்கவசம் அல்லது முகத்தை மறைக்காமல் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. இது தன்னை சுற்றியிருப்பவர்களால் ஏற்படும் பாதிப்பை விட, தனிநபர்கள் தனக்குத் தானே அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதாக அமையும். 

எனவே, “இரண்டு மீட்டர் இடைவெளி” அல்லது சமூக இடைவெளி என்ற நமது மந்திரத்தை நாம் கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம்; நாள்தோறும் சோப்பு மூலம் கைகளை 20 விநாடிகளுக்கு, பல முறை கழுவ வேண்டும், அதோடு கிருமிநாசினிகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது கட்டாயம். இது தனிநபர்களின் பாதுகாப்பு, குடும்பத்தின் பாதுகாப்பு, குறிப்பாக வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது.

தற்போது, பெரும்பாலான அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் துறை அலுவலகங்கள் கூட செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அலுவலகங்கள், சந்தைகள் மற்றும் வீதிகளுக்கு மக்கள் செல்லத் தொடங்கிவிட்டதால், கூட்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில், இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றுவதால், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவது தடுக்கப்படும். சிறிதளவுக்கு கவனம் இல்லாமல் போனாலும், ஒழுங்கில் குறைபாடுகள் இருந்தாலும், அது கொரோனா வைரஸுக்கு எதிரான நமது போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும்.

வைரஸ் பரவுவதை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தே, அதிக அளவிலான பொருளாதார வாய்ப்புகள் ஏற்படும், நமது அலுவலகங்கள் திறக்கப்படும், சந்தைகள் திறக்கப்படும், போக்குவரத்து தொடங்கும், அதேபோல, புதிய வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

வரும் நாட்களில் பல்வேறு மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதன் அனுபவம், மற்ற மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக அமையும். கடந்த சில வாரங்களில் நமது பொருளாதாரத்தில் பசுமை இலை துளிர்விடத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் குறைந்திருந்த மின்சாரப் பயன்பாடு, தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில், உர விற்பனை, கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்ததைவிட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு, கரீப் பருவ விதைப்புப் பணி, முந்தைய ஆண்டைவிட 12-13% அதிகமாக உள்ளது. இருசக்கர வாகன உற்பத்தி அளவானது, பொதுமுடக்கத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த அளவில் சுமார் 70% என்ற அளவை எட்டியுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் அளவானது, பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்த அளவுக்கு வந்துள்ளது.

இதற்கும் மேலாக, மே மாத சுங்கக்கட்டண வசூல் அதிகரித்துள்ளது. இது பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஏற்றுமதி குறைந்த நிலையில், ஜூன் மாதத்தில் ஏற்றுமதி மீண்டெழுந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய கடந்த ஆண்டில் இருந்த அளவுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த அறிகுறிகள் அனைத்துமே, நாம் முன்னோக்கிச் செல்வதை ஊக்குவிக்கிறது.

நண்பர்களே,

பெரும்பாலான மாநிலங்களில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு மிக அதிகமாக உள்ளது. “சுயசார்பு இந்தியா” பிரச்சாரத்தின்கீழ், இந்தத் துறைகளுக்கு கடந்த சில நாட்களில் பல்வேறு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அண்மையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகளிடமிருந்து உரிய காலத்தில் கடன் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.100 கோடிவரை விற்றுமுதல் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தானாகவே 20% கூடுதல் கடன் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

வங்கி குழுக்கள் மூலம், தொழில் நிறுவனங்கள் வேகமாக கடன் பெறுவதை உறுதிப்படுத்துகிறோம். இதன்மூலம், விரைவில் பணிகளைத் தொடங்க முடிவதுடன், மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.

நண்பர்களே,

இங்குள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்களும், ஆதரவும் தேவைப்படுகிறது; உங்களது தலைமையின்கீழ், இதற்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியும். சங்கிலித் தொடராக நாம் பணியாற்ற வேண்டும். இதன்மூலமே, வர்த்தகமும், தொழில் நிறுவனங்களும் பழைய நிலைமைக்கு வர முடியும். மாநிலத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் நாள் முழுவதும் செயல்படுவது, சரக்குகளை ஏற்றி, இறக்குவது வேகமாக நடைபெறுவது, உள்ளூர் அளவில் சரக்குகளை ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு கொண்டுசெல்வதில் தடையில்லாமல் இருப்பது ஆகியவற்றின் மூலம், பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும்.

 

 

நண்பர்களே,

விவசாயிகளின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு பெருமளவில் பயனளிக்கும். இதன்மூலம், விவசாயிகள் தங்களது பொருட்களை விற்பனை செய்ய புதிய மாற்றுவழியைப் பெறுவார்கள். இது, அவர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும். இயற்கையின் மாறுபாடு மற்றும் போதிய அளவில் சேமிப்பு வசதிகள் இல்லாதது ஆகியவற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை நம்மால் குறைக்க முடியும். விவசாயிகளின் வருமானம் உயரும்போது, நிச்சயமாக தேவை அதிகரிக்கும். மாநிலங்களின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, வடகிழக்கு மற்றும் பழங்குடியின பகுதிகளில், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத்  துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இயற்கைப் பொருட்கள், மூங்கில் பொருட்கள் அல்லது பிற பழங்குடியினப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், இந்தத் துறைகளுக்கு புதிய சந்தைகள் திறக்கப்பட உள்ளன. உள்ளூர் பொருட்களுக்காக அறிவிக்கப்பட்ட தொகுப்பு அடிப்படையிலான கொள்கை மூலம், ஒவ்வொரு மாநிலமும் பயனடையும். இதுபோன்ற பொருட்களை ஒவ்வொரு வட்டங்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டறிந்து பதப்படுத்தவோ அல்லது சந்தைப்படுத்தவோ வேண்டும். இதன்மூலம், அவர்களை நமது நாட்டிலும், சர்வதேச சந்தையிலும் நிலைநிறுத்த முடியும்.

நண்பர்களே,

“சுயசார்பு பாரதம்” திட்டத்தின்கீழ் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த பின்னணியில், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்த உங்களது ஆலோசனைகள் மற்றும் தயார்படுத்துதல் திட்டங்களை அறிந்துகொள்ள நானும் ஆவலாக உள்ளேன். தொடர்ந்து விவாதங்களை நடத்துமாறு உள்துறை அமைச்சரை தற்போது நான் கேட்டுக் கொள்கிறேன்.

*****


(Release ID: 1632052) Visitor Counter : 263