சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட் – 19 தற்போதைய நிலவரம் குணமடைவோர் விகிதம் 49.47 சதவீதமாக உயர்வு

Posted On: 12 JUN 2020 4:00PM by PIB Chennai

கோவிட் – 19 தொற்றுள்ள நோயாளிகளில் குணமடைவோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், தற்போதைய நிலவரப்படி அது 49.47 சதவீதமாக உள்ளது. மொத்தம் 1,47,194 தனிநபர்கள் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், இத்துடன் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 1,41,842 பேராக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,166 பேர் கோவிட்-19ல் இருந்து குணமடைந்துள்ளனர்.

இரட்டிப்பு விகிதம் / காலம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அது ஊரடங்கு தொடங்கும் காலத்தில் இருந்த 3.4 என்ற நாள் அளவில் இருந்து தற்போது 17.4 நாட்களாக உயர்ந்துள்ளது.

கேபினட் செயலாளர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சோதனைகள், மற்றும் நோயாளிகளைக் கண்டறிதல், சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பாடு, நோயாளிகளுக்கான மருத்துவ மேலாண்மை, கோவிட்-19 தொடர்பான சீரிய மேலாண்மையில் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், நோய் அதிகம் பரவும் மையங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான விதிகளைக் கடுமையாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும்படி மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று சிறப்புக் குழுக்கள் மூலம் சோதனை நடத்தி, ஆரம்ப காலத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மருத்துவமனைகள் கட்டமைப்பு மேம்படுத்துதலை விரைவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் கணிக்கப்பட்ட அளவிலான நோயாளிகளை சமாளிக்க முடியும் என்பதுடன், போதுமான அளவிலான உபகரணங்கள் (உதாரணத்துக்கு நாடித்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவீடு கருவிகள்), பயிற்சி பெற்ற தனிமனித வளங்கள் (டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் அல்லாத ஊழியர்கள்) இருப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று கூறப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது மிக முக்கியமானது என்றும், பாதிக்கப்படக்கூடிய மக்களில் குறிப்பாக முதியவர்கள் மற்றும் தீவிர நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ நிபுணர்கள் மையங்கள் தயாரித்தளித்த நோய் அறிகுறிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவப் பயிற்சிகள் உதவியுடன் நோயாளிகளை உரிய சிகிச்சைக்குப் பரிந்துரைத்தல் குறித்தும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து நேரத்திலும் சமூகவிலகல் மற்றும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாநிலங்கள் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர்களிடம் நாவல் கொரோனா வைரசைக் கண்டறிவதற்கான சோதனை மையங்களின் எண்ணிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகரித்துள்ளது. தற்போது 877 ஆய்வகங்கள் (637 அரசு ஆய்வகங்கள் மற்றும் 240 தனியார் ஆய்வகங்கள்) நாட்டில் இயங்கி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 1,50,305 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 53,63,445 மாதிரிகள் இதுவரையில் சோதனை செய்யப்பட்டுள்ளன.


(Release ID: 1631198) Visitor Counter : 255