பிரதமர் அலுவலகம்

இஸ்ரேல் பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதான்யஹுவுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

Posted On: 10 JUN 2020 9:49PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இஸ்ரேல்  பிரதமர் மேதகு பெஞ்சமின் நெதான்யஹுவுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.

சமீபத்தில் பதவியேற்ற பிரதமர் நெதான்யஹுவிற்கு தனது மனமுவந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்த அவர், பிரதமர் நெதான்யஹுவின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இந்திய- இஸ்ரேல் கூட்டணி தொடர்ந்து வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த உரையாடலின்போது கொரோனா பெருந்தொற்று நிலவி வரும் பின்னணியில் தடுப்பூசிகள், சிகிச்சை மருந்துகள், பரிசோதனைகள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில், இந்தியாவும் இஸ்ரேலும் தங்களது ஒத்துழைப்பினை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்த இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர் குழுக்களுக்கிடையே தற்போது நிகழ்ந்து வரும் தகவல் பரிமாற்றங்களைத் தொடர்ந்து நீட்டிப்பது என்றும் இத்தகைய கூட்டுச் செயல்பாட்டின் மூலம் பெறப்படும் பயன்களை விரிவான மனித குலத்தின் நலன்களுக்கு கிடைக்கச் செய்வது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் அடங்கியுள்ள முக்கியமான விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பரிசீலனை செய்ததோடு, கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகமானது பல துறைகளிலும் பரஸ்பரம் நன்மை செய்யக் கூடிய புதிய வழிகளை உருவாக்கும் என்றும் ஒப்புக் கொண்டனர். குறிப்பாக, சுகாதாரத் தொழில்நுட்பம், விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், ராணுவ ரீதியான ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஏற்கனவே இருந்து வரும் இந்தியா-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் இணைந்த செயல்பாட்டை விரிவுபடுத்துவதற்கான பிரம்மாண்டமான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் இருவரும் மதிப்பிட்டனர்.

இது குறித்த மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், மாறிக் கொண்டே வரும் உலகளாவிய சூழலில் உருவாகி வரும் வாய்ப்புகள், சவால்கள் குறித்து ஒருவரோடு ஒருவர் கலந்து ஆலோசிப்பது என்றும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.



(Release ID: 1630840) Visitor Counter : 212