சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய சுகாதாரச் செயலாளர் கோவிட்-19 நோயாளிகள் அதிகரித்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், முதன்மை மருத்துவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்

Posted On: 08 JUN 2020 2:06PM by PIB Chennai

மத்திய சுகாதாரச் செயலாளர் திருமிகு பிரீத்தி சுதன், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி திரு.ராஜேஷ் பூஷன் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற 10 மாநிலங்களின் 38 மாவட்டங்களில் உள்ள 45 நகராட்சிகள் / மாநகராட்சிகளின் ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், முதன்மை மருத்துவ அதிகாரிகள், மாவட்ட மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்கள், மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் ஆகியோருடன் காணொளிக் காட்சி மூலம் உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர்.

மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த 38 மாவட்டங்கள் உள்ளன.

மக்கள் நெருக்கடி மிகுந்த நகரப் பகுதிகளில் பரவலாக நோய்த்தொற்று அதிகரித்தல், அதிலும் குறிப்பாக பொதுவசதிகளைப் பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் நோய்த்தொற்று அதிகரித்தல்; வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தலின் முக்கியத்தும்; முறையான பரிசோதனை மற்றும் அதைத் தொடர்ந்து முறையான தனிமைப்படுத்துதல்; நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல், நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாட்டு மண்டல உத்திகள்  போன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் நோயாளிகளைக் கையாளுதல், பஃபர் மண்டலங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கோவிட் பாதுகாப்புக்கு ஏற்ற நடத்தைகளை மேம்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநில அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.  நோயாளிகள் மரணம் அடையும் விவிதத்தைக் குறைப்பதற்கு தொற்றுள்ளவரோடு தொடர்புடையவர்களைத் தடம் கண்டறியும் போது பாதிப்புக்கு அதிகம் ஆளாகும் வாய்ப்புள்ள முதியோர், ஏற்கனவே நோய் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை தருதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இறப்புகளைத் தடுத்தல்; தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள்; அறிகுறிகள் அதிகம் ஆவதற்குள் நோயாளிகளை உரிய காலத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்தல் ஆகியவை குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளம் ஆகியவை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.  போதுமான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து திட்டமிடுதல்; போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்புக் குழுக்களை நியமித்தல்; படுக்கை வசதிகள் கிடைப்பதை தெரிவிக்கின்ற முறையான அமைப்பு ஒன்றை உருவாக்குதல்; தேவைக்கு ஏற்ப சுகாதாரச் சேவைகளை குடிமக்களுக்கு வழங்குவதற்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்ற மருத்துவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு ஆதரவு தருகின்ற செயல்திறன் மையங்கள் ஆகியவை குறித்தும் மாநில அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

களநிர்வாகம் குறித்துப் பேசும் போது நகராட்சி அதிகாரிகள் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டு ”முழுமையான அரசு அணுகுமுறை” என்பதன்கீழ் நகராட்சியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வசதிகளையும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை தரப்பட்டது.  கோவிட்-19 நிர்வாக முயற்சிகளின் ஊடாகவே, குடிமக்களுக்கு வழக்கமாக கிடைக்கக் கூடிய முக்கியமான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

சரியான நேரத்தில் தொற்றுள்ளவர்களை அடையாளம் காண்பதற்குத் தீவிரமான முறையில் வீடு வீடாகச் சென்று சர்வே செய்தல்; சர்வே செய்யும் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்; ஆம்புலன்ஸ் நிர்வாகத்தைத் திறம்படக் கையாளுதல்’ மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் பாதிப்பை திறம்பட முன்கணிப்பு செய்தல் மற்றும் படுக்கைகளைக் கவனமாக நிர்வகித்தல்; இறப்பு விகிதங்களை குறைக்கும் நோக்கத்தில் 24X7 நேரமும் சுழற்சி முறையில் மருத்துவக் குழுவினர் மருத்துவமனையில் சேர்ந்துள்ள நோயாளிகளைக் கவனித்தல்; தொற்றுள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரியான நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சையை ஆரம்பித்தல், பரிசோதனைக் கூடங்கள் ஆய்வு முடிவுகளை உரிய நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல் என்பது போன்ற விஷயங்களில் தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் கிடைக்கின்ற சுகாதாரச் சேவைகளை மதிப்பீடு செய்யவும் ஊரகப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தோடு ஒன்றிணைந்து செயல்படும் வகையில் மக்கள் பிரதிநிதிகளை ஈடுபடுத்தலாம் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பஃபர் மண்டலங்களில் எஸ்.ஏ.ஆர்.ஐ / ஐ.எல்.ஐ ஆகியவற்றைக் கண்டறிவதற்கான காய்ச்சல் கிளினிக்குகளை நடத்துமாறு மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.  ஊரடங்கு தளர்வாக்கப்பட்டும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டும் வரும் தற்போதைய சூழலைக் கவனத்தில் கொண்டு வரும் மாதங்களுக்கான மாவட்ட அளவிலான முன்கணிப்பு திட்டங்களை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை தரப்பட்டு உள்ளது.

இதுவரை மொத்தம் 1,24,430 நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,137 நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.  இதனையும் சேர்த்துக் கணக்கிட்டால், நோயாளிகள் குணமாகும் விகிதம் 48.49% என உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,24,981 ஆகும்.

*****



(Release ID: 1630214) Visitor Counter : 255