பிரதமர் அலுவலகம்
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடல்.
மார்ச் 20, 2020 முதல் முதலமைச்சர்களுடன் 5-வது முறையாக ஆலோசனை.
கோவிட்-19 வைரசை ஊரகப்பகுதிகளில் பரவாமல் தடுப்பதற்கு தற்போது முயற்சி மேற்கொள்ள வேண்டும்: பிரதமர்.
கோவிட் பரவலுக்கு பிந்தைய காலத்தில் ஏற்படும் வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்: பிரதமர்
புதிய உலகை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் திட்டமிட வேண்டும்: பிரதமர்
Posted On:
11 MAY 2020 10:22PM by PIB Chennai
கோவிட்-19 வைரஸ் பரவலை எதிர்கொள்வதில் இந்தியாவின் முன் னுள்ள சவால்கள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
தொடக்க உரையாற்றிய பிரதமர், “மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட இந்தியாவில் நோய்த்தொற்று பரவியுள்ள நிலப்பகுதிகள் குறித்து தற்போது நாம் தெளிவான நிலைக்கு வந்துள்ளோம். அதற்கும் மேலாக, இது போன்ற நேரத்தில், மாவட்ட அளவில் செயல்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கடந்த சில வாரங்களில் அதிகாரிகள் உணர்ந்துள்ளனர்,” என்றார்.
கோவிட்-19 பரவல் குறித்த இந்தப் புரிதல், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை குறிப்பிட்ட இலக்குடன் மேற்கொள்ள உதவும் என்று பிரதமர் கூறினார்.
“எனவே, நிலைமைகளின் அடிப்படையில், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் நாம் தற்போது நமது உத்தியில் மேலும் கவனம் செலுத்த முடியும். நமக்கு இரண்டு வகை சவால்கள் உள்ளன. அதாவது, நோய்ப் பரவல் விகிதத்தைக் குறைப்பது மற்றும் படிப்படியாக மக்களின் நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்வது. அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றுவதோடு, இந்த இலக்குகளை நிறைவேற்றுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் பிரதமர்.
கோவிட்-19 வைரசை ஊரகப்பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்க தற்போது முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாநிலங்கள் வழங்கிய ஆலோசனைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
கோவிட்-19 வைரசை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையில் பிரதமரின் தலைமைப்பண்புக்கு முதலமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர். நாட்டில் மருத்துவ மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். பல்வேறு முதலமைச்சர்கள் பேசும் போது, இடம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வரும் நிலையில், புதிதாக நோய்த் தொற்று, குறிப்பாக ஊரகப்பகுதிகளில் பரவாமல் தடுக்க, தனி நபர் இடைவெளி விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துவது, முகக்கவசங்களை அணிவது, கிருமிநாசினி தெளிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினர்.
வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள், தாயகம் திரும்பியவுடன் அவர்களைக் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் எடுத்துரைத்தனர். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மற்றும் மின்சாரம் போன்ற கட்டமைப்புத் திட்டங்களுக்கும் ஆதரவு அளித்தல், கடன்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்தல், வேளாண்மை உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர்கள் பரிந்துரைத்தனர்.
கோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில், தீவிரப் பங்கு வகிப்பதற்காக முதலமைச்சர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், அடிமட்ட அளவில் கிடைத்த அனுபவங்கள் அடிப்படையில், பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பிறகு, அடிப்படையில் உலகம் மாறியிருப்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் தெரிவித்தார். உலகப்போர்கள் காலத்தைப் போன்று, தற்போது உலகம், கொரோனாவுக்கு முந்தைய காலம், கொரோனாவுக்கு பிந்தைய காலம் என்ற அடிப்படையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
புதிய வாழ்க்கை முறை என்பது தனி நபர் என்ற அடிப்படையிலிருந்து மாறி ஒட்டு மொத்த மனித சமூகம் (Jan Se lekar Jag Tak) என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
புதிய உலகை உருவாக்க நாம் அனைவரும் திட்டமிட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
“பொது முடக்கத்தைப் படிப்படியாகத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டாலும், தடுப்பு மருந்து அல்லது தீர்வு கிடைக்கும் வரை, வைரசுடன் போரிட நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதம் என்பது தனி நபர் இடைவெளி தான் என்பதைத் தொடர்ந்து நினைவில் கொள்ள வேண்டும்,” என்றார் பிரதமர்.
தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவதன் (Do Gaz Ki doori) முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு முதலமைச்சர்களும் அளித்த பரிந்துரைகள், மக்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் என்றார்.
பொதுமுடக்கம் குறித்து தனிப்பட்டக் கருத்துக்களை தெரிவிக்குமாறு அனைத்து முதலமைச்சர்களையும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“உங்களது மாநிலங்களில் பொதுமுடக்கக் காலத்தை எவ்வாறு எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்பது குறித்து ஒவ்வொருவரும் விரிவான உத்தியை மே 15-க்குள் என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பொது முடக்கத்தைப் படிப்படியாகத் தளர்த்திய போதும், அதற்குப் பிறகும் பல்வேறு அம்சங்களையும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்ற விரிவான திட்டத்தை மாநிலங்கள் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்றார்.
நமக்கு முன்பு ஏற்படும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள அனைவருக்குமான நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், கோவிட்-19 தவிர மற்ற வேறு பல நோய்களும் பரவும் என்பதால், அவற்றையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பதுடன், நமது மருத்துவ மற்றும் சுகாதார முறையை வலுப்படுத்த வேண்டும்.
கல்வித் துறையில் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய முறைகளை எவ்வாறு புகுத்துவது என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
சுற்றுலாத்துறையைக் குறிப்பிட்ட பிரதமர், உள்ளூர் சுற்றுலாவுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதை தன்னால் பார்க்க முடிவதாகக் கூறினார். ஆனால், இதற்கான எல்லை குறித்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.
அவர் பேசும் போது, “முதலாவது கட்ட பொது முடக்கத்தின் போது, தேவைப்பட்ட நடவடிக்கைகள், இரண்டாவது கட்டத்தின்போது தேவைப்படவில்லை. அதேபோல, மூன்றாவது கட்ட பொது முடக்கத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள், நான்காவது கட்டத்துக்கு தேவைப்படாது என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்,” என்றார்.
ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டெழச் செய்ய இது அவசியமானது, ஆனாலும், அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவை தொடங்கப்படமாட்டாது என்றார். குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில்கள் இயங்கும் என்று பிரதமர் கூறினார்.
எந்தவொரு மாநிலமும் நம்பிக்கையை இழக்காத நிலையில், தானும் தொடர்ந்து, நம்பிக்கையுடன் உணர்வதாக பிரதமர் கூறினார். இந்த ஒருங்கிணைந்த தீர்மானம், கோவிட்-19-க்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் என்று அவர் கூறினார்.
கோவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், அதனை இந்தியா கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
(Release ID: 1623268)
Visitor Counter : 290
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam