குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கோவிட் சூழ்நிலைகள் பற்றியும் நாடாளுமன்ற கமிட்டிகளின் கூட்டங்கள் பற்றியும் மாநிலங்களவைத் தலைவர், மக்களவை சபாநாயகர் கலந்துரையாடல்.

Posted On: 07 MAY 2020 5:12PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம். வெங்கய்ய நாயுடு, கோவிட் -19 நோய்த் தாக்குதல் சூழ்நிலை குறித்து மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லாவுடன் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் ஆய்வு நடத்தினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றியும், நாடாளுமன்றக் கமிட்டிகளின் கூட்டங்களை நடத்துவது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான செயல்பாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாகப் பங்கேற்று வருவதாக இரு அவைகளின் தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். மக்கள் நல உதவிகளுக்கான முயற்சிகளை முன்னெடுத்து செய்தல், அரசு மற்றும் மக்கள் நல அமைப்புகள் மூலமான மனிதாபிமான உதவிகள் வழங்குதலுக்கு ஏற்பாடு செய்தலில் உறுப்பினர்கள் தீவிரமாகp பங்கேற்று வருவது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில், எம்.பி.க்கள் அவர்களுடன் இருப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில், நாடு முழுக்க பயணத்துக்குக் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களின் கூட்டங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி திரு நாயுடு, திரு பிர்லா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். வழக்கமான நடைமுறைகளின்படி விரைவில் இந்தக் கூட்டங்களை நடத்துவதற்கு வாய்ப்பு இருக்காது என்றால், இந்தக் கூட்டங்களை நடத்துவதற்கான மாற்று வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, காணொளி மூலம் நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டத்தை நடத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராயுமாறு இரு அவைகளின் செயலாளர்களையும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். வேறு நாடுகளில் இதுபோல காணொளி மூலம் கூட்டங்கள் நடத்திய அனுபவங்களை அறியவும், இதற்குத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்று ஆய்வு செய்யவும் முற்படுமாறு அவர்கள் கூறியுள்ளனர். இரு அவைகளின் உயர்நிலை அதிகாரிகளால் தரப்படும் அறிக்கையின் அடிப்படையில், அவைகளின் தலைவர்கள் இந்த விஷயத்தில் முடிவு எடுப்பார்கள்.



(Release ID: 1621907) Visitor Counter : 234