உள்துறை அமைச்சகம்

சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோக சங்கிலி பராமரிப்புக்கு தடையற்ற வாகனங்கள் இயக்கத்தை உறுதி செய்ய வேண்டும்- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Posted On: 30 APR 2020 7:27PM by PIB Chennai

நாட்டின் பல்வேறு பகுதிகளின், மாநில எல்லைகளில்,  லாரிகள் தடையின்றிச் செல்வதற்கு அனுமதிப்பதில்லை என்றும், உள்ளூர் அதிகாரிகள் தனி அனுமதிச் சீட்டுகள் தேவை என்று கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

பொது முடக்க நடவடிக்கையால், மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க, லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் காலியாகச் செல்வதற்கும் தனிப்பட்ட அனுமதிச் சீட்டு தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் ,யூனியன்  பிரதேசங்களுக்கு அறிவுறுத்திக் கூறியுள்ளது.

தற்போதைய பொது முடக்க காலத்தில், நாட்டில் சரக்குகள் மற்றும் சேவைகள் விநியோகச் சங்கிலியைப் பராமரிக்க, லாரிகள் மற்றும் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்து அவசியம் என்று உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராட அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க நடவடிக்கைகள் பற்றிய   மாற்றியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி  அன்று வெளியிட்டுள்ளது.

(https://www.mha.gov.in/sites/default/files/MHA%20order%20dt%2015.04.2020%2C%20with%20Revised%20Consolidated%20Guidelines_compressed%20%283%29.pdf). லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலம் நடைபெறும் அனைத்து  சரக்குப் போக்குவரத்தையும் தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும் என்று இந்த ஒருங்கிணைந்த விதிமுறைகள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

இந்த விதிமுறைகளுக்கு இணங்க, மாவட்ட அதிகாரிகள் மற்றும் கள முகமைகள் இந்த அறிவுறுத்தல்களை உணர்ந்து, இதில் தெளிவை ஏற்படுத்தும் வகையில், லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களை சரக்குகளுடனும், காலியாகவும் தடையின்றிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ தகவலைத் தெரிந்து கொள்ள, https://static.pib.gov.in/WriteReadData/userfiles/MHA%20Do%20Ltr%20Dt.%2030.4.2020%20to%20Chief%20Secretaries%20to%20allow%20unhindered%20movement%20of%20trucks%20carrying%20goods.pdf-ல் இணைப்பை தொடர்பு கொள்ளவும்.

 


(Release ID: 1620014) Visitor Counter : 220