சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 நிலவரம்

Posted On: 14 APR 2020 5:02PM by PIB Chennai

நாட்டில் கொரானா கொவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்காக, மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகளின் வாயிலாக கண்காணிக்கப்படுகின்றது.

இன்று காலையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, பின்வரும் 7 அம்சங்களை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார் :

1. உங்கள் வீடுகளில் உள்ள முதியவர்கள், குறிப்பாக கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீது தனிப்பட்டகவனம் செலுத்துங்கள். அவர்களைக் கொரோனோவைரஸ் நோயிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக வைத்திருக்க, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2. ஊரடங்கின் லட்சுமணக் கோட்டையும், தனி நபர் விலகலையும் முற்றிலுமாகப் பின்பற்றுங்கள். தவறாமல், வீடுகளில் செய்யப்பட்ட முகக்கவசங்களை தயவு செய்து பயன்படுத்துங்கள்.

3. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்துள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள். அவ்வப்போது, வெந்நீரை உட்கொள்ளுவதுடன், கொப்பளிக்கவும் செய்யவும்.

4. கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க, ஆரோக்கிய சேது கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும். இதேபோல, இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மற்றவர்களை ஊக்குவிப்பு செய்யுங்கள்.

5. உங்களால் இயன்றவரையில், ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள். குறிப்பாக, அவர்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள்.

6. உங்களது தொழில் நிறுவனங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர் மீது கருணை காட்டுங்கள். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்படி விட்டு விடாதீர்கள்.

7. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகிய நாட்டின் கொரோனோ வீரர்கள் மீது அதிக மரியாதை செலுத்துங்கள்.

 

கொவிட்-19 தொற்றைப் பொருத்தவரை, நேற்று மேலும் 1211 நபர்களுக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டதுடன், 31 இறப்புகள் பதிவாகியுள்ளன. இன்றைய நிலவரப்படி, 1036 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்த அனைத்து உண்மையான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://www.mohfw.gov.in/ என்ற வலைதளத்தைப் பார்வையிடவும்.

 

*****



(Release ID: 1614399) Visitor Counter : 238