நிதி அமைச்சகம்

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு: இது வரையிலான முன்னேற்றம்

Posted On: 13 APR 2020 4:11PM by PIB Chennai

32 கோடிக்கும் அதிகமான ஏழை மக்கள், ரூ.29,352 கோடி நிதி உதவியை பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் கீழ் பெற்றனர்.

* பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டத்தின் கீழ் 5.29 கோடி பயனாளிகளுக்கு பொது விநியோக முறையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* 9.78 லட்சம் இலவச உஜ்வாலா சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

* ரூ. 510 கோடி பணத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ஆன்லைன் மூலம் எடுத்து 2.1 லட்சம் உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

* பிஎம் கிசான் முதல் தவணை: 7.47 கோடி விவசாயிகளுக்கு ரூ.14,946 கோடி  வழங்கப்பட்டுள்ளது.

* ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 19.86 கோடி மகளிருக்கு, ரூ.9930 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 2.82 கோடி பேருக்கு,

 ரூ.1400 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* ரூ.3071 கோடி நிதியுதவியை கட்டிடம், கட்டுமானத் தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.

 

கொவிட்-19  பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருக்கின்ற பொது முடக்கத்தின் போது சமூகத்தின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும் அவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமனால் 26 மார்ச் 2020 அன்று ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இந்த மக்களை பொது முடக்கத்தின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக அறிவிக்கப்பட்டதாகும் இது.

பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் தொகுப்பின் ஒரு பகுதியாக, இலவச உணவு தானியங்கள், பெண்கள், வயதான மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கு பண உதவி ஆகியவை அரசால் அறிவிக்கப்பட்டன.

இந்தத் தொகுப்பின் கீழ், 32.32 கோடி பயனாளிகளுக்கு, நேரடி நிதி ஆதரவாக ரூ 29,352 கோடி, நேரடிப் பண பரிமாற்ற முறையில் 13 ஏப்ரல் 2020 வரை வழங்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்திற்கான 40 லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீட்டில் 20.11 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 31 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இது வரை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 1.19 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 5.29 கோடி பயனாளிகளுக்கு 2.65 லட்சம் மெட்ரிக் டன்கள் 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் ஏப்ரல் 2020இல் இவை விநியோகிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 3985 மெட்ரிக் டன்கள் பருப்புகளும் அனுப்பப்பட்டுள்ளன.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தமாக 1.39 கோடி சமையல் எரிவாயு உருளைகள் இது வரை பதிவு செய்யப்பட்டு, 97.8 லட்சம் பிரதமரின் உஜ்வாலா திட்ட இலவச சமையல் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு விட்டன.

ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் 2.1 லட்சம் உறுப்பினர்கள் ரூ.510 கோடி பணத்தை ஆன்லைன் மூலம் எடுத்துள்ளனர்.

வருங்கால வைப்பு நிதியின் 3 மாத பங்களிப்பு- 100 ஊழியர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்களில் உள்ள மாதம் ரூ 15,000க்கும் கீழ் ஊதியம் பெறும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 24சதவீதம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்காக 2020 ஏப்ரல் மாதத்துக்கென ரூ.1000 கோடி வருங்கால வைப்பு நிதிக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. 78.74 லட்சம் பயனாளிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்

உயர்த்தப்பட்ட ஊதியம் 01.04.2020 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 19.56 லட்சம் நபர்களின் மனித சக்தி நாட்களுக்கான வேலை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊதியம் மற்றும் பொருள்களுக்கான நிலுவைத் தொகைகளைச் செலுத்த ரூ.7100 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்:

22.12 லட்சம் சுகாதாரப் பணியாளர்களைக் காக்கும் விதமாக நியூ இந்தியா அஷ்யூரன்ஸால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு ஆதரவு:

மொத்தத் தொகையில், பிஎம் கிஸானின் முதல் தவணையை செலுத்துவதற்காக ரூ.14,946 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட 8 கோடி பயனாளிகளில், 7.47 கோடி பேர் தங்கள் கணக்குகளில் நேரடியாக ரூ.2,000 பெற்றுள்ளனர்.

பிரதமர் ஜன் தன் திட்ட மகளிர் கணக்கு வைத்திருப்போருக்கு ஆதரவு:

இந்தியாவில் பெரும்பான்மையான வீடுகள் பெரும்பாலும் பெண்களால் நிர்வகிக்கப்படுவதால், 19.86 கோடி மகளிர் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர், இந்தத் திட்டத்தின் கீழ், தங்கள் கணக்குகளில் ரூ.500 பெற்றனர். 13 ஏப்ரல் 2020 வரை, இந்தத் தலைப்பின் கீழான மொத்த பண விநியோகம் ரூ.9,930 கோடி ஆகும்

வயது முதிர்ந்தோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு:

சுமார் 2.83 கோடி வயது முதிர்ந்தோர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,400 கோடியை தேசிய சமூக உதவித் திட்டம் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ஒவ்வொரு பயனாளியும் ரூ.500 கருணைத் தொகையாகப் பெற்றனர். அடுத்த தவணையான ரூ 500 அடுத்த மாதத்தில் வழங்கப்படும்.

கட்டிட , இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆதரவு:

மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் கட்டிட மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நிதியில் இருந்து 2.17 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்கள் நிதி உதவி பெற்றுள்ளனர். பயனாளிகளுக்கு இதன் கீழ் ரூ.3,071 கோடி வழங்கப்பட்டுள்ளது.

 

***
 



(Release ID: 1614041) Visitor Counter : 416