குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பொது முடக்கத்தின் போது கல்வி அட்டவணையின் தொடர்ச்சியை உறுதி செய்யுமாறு குடியரசு துணைத்தலைவர் பல்கலைக்கழகங்களைக் கேட்டுக்கொண்டார்

Posted On: 13 APR 2020 1:33PM by PIB Chennai

பொது முடக்கத்தின் போது கல்வி அட்டவணையின் தொடர்ச்சியை உறுதி செய்ய தொழில்நுட்பத்தின் சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களையும், இதர கல்வி நிறுவனங்களையும் குடியரசு துணைத் தலைவர், திரு. வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

தில்லி, புதுச்சேரி, பஞ்சாப், மக்கன்லால் சதுர்வேதிப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களோடும், இந்தியப் பொதுநிர்வாக நிறுவனத்தின் இயக்குநரோடும் காணொளிக் காட்சி மூலம் உரையாடிய குடியரசுத் துணைத் தலைவர், இயல்பு நிலை திரும்ப இன்னும் சில காலம் ஆகும் எனக் குறிப்பிட்டதோடு, கொவிட்-19 பெரும் தொற்று நோயால் ஏற்பட்டுள்ள இடையூறை எதிர்கொள்ள அவர்களிடம் உள்ள திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

மாணவர்களைச் சென்றடைந்து ஒருங்கிணைந்த கற்றலையும் சுயகற்றலையும் ஊக்குவிக்குமாறு இந்த நிறுவனங்களை இந்தியப் பொதுநிர்வாக நிறுவனத்தின் தலைவரும், மேற்கண்ட நான்கு பல்கலைக்கழகங்களின் வேந்தருமான குடியரசு துணைத்தலைவர் கேட்டுக்கொண்டார். தொழில்நுட்பக்கருவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி, இணைந்த கற்றலை அனைத்து மாணவர்களுக்கும் உறுதி செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமுடக்கத்தின் போது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்யுமாறு அவர் மேலும் கூறினார்.

கொரோனாவால் ஏற்பட்ட துன்பங்கள் படைப்பாற்றல் மிக்க தீர்வுகளை நோக்கி மக்களை உந்துவதாக தெரிவித்த திரு. நாயுடு, கற்பித்தல் கற்றல் செயல்பாடு பாதிக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக பல்கலைக்கழகங்களைப் பாராட்டினார். இணைய வழி பாடங்கள் நேருக்கு நேர் கற்றலுக்கு துணை செய்வதாகக் கூறிய அவர், "நாம் இந்த சிக்கலை விட்டு வெளியே வந்த பிறகு இதுவே புதிய இயல்பாகவும் ஆகிவிடலாம்," என்று அவர் கூறினார்.

***



(Release ID: 1613900) Visitor Counter : 118