பிரதமர் அலுவலகம்

பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடல்

Posted On: 06 APR 2020 8:34PM by PIB Chennai

பஹ்ரைன் பேரரசின் மன்னர் மேதகு ஹமாத் பின் இசா அல் கலிஃபா-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.

தற்போதைய கொவிட்-19 சுகாதார நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதில், சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் நிதி சந்தைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையில், பஹ்ரைனில் அதிக அளவில் உள்ள இந்திய சமூகத்தினரின் நலனில் தனிப்பட்ட கவனம் செலுத்த உள்ளதாக பிரதமரிடம் மன்னர் உறுதியளித்தார். புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீது எப்போதும் பஹ்ரைன் அரசு கவனம் செலுத்துவது மற்றும் ஈடுபாடு காட்டுவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கொவிட்-19 சவால்களை எதிர்கொள்ள பரஸ்பரம் அனைத்து உதவிகளையும் செய்யவும், தங்களது அதிகாரிகளுக்கு இடையே தொடர் ஆலோசனை நடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அண்டை நாடுகளைத் தாண்டிய நல்லுறவில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பஹ்ரைனை இந்தியா கருதுவதாக மன்னரிடம் பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த ஆண்டில் பஹ்ரைனுக்கு பயணம் மேற்கொண்டதை பிரதமர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

 

*****



(Release ID: 1611879) Visitor Counter : 133