இந்தியாவின் 57-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒருபகுதியாக, பிரசார் பாரதி தனது முதல் திரைக்கதை பயிற்சித் திட்டமான ‘பேஜ் சே பிச் தக்’ (காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்தில் இருந்து திரைக்கு) திட்டத்தை கோவா மாநிலம், பனாஜியில் உள்ள கலா அகாடமியில் தொடங்கியுள்ளது.
பிரசார் பாரதி தலைவர் திரு பிரசூன் ஜோஷியின் சிந்தனையில் உருவான இத்திட்டம், இந்தியாவின் 10 மொழிகளில், வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான முயற்சியாகும். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கான புதிய திரைக்கதைகளை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு பிரசூன் ஜோஷி, தனிப்பட்ட அனுபவங்கள், பண்பாட்டுப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையிலான உண்மையான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளின் தனித்துவமான கதைகளையும் நாட்டுப்புற மரபுகளையும் வெளிக்கொணர பிரசார் பாரதி உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் திருமதி ரீனா சோனோவால் கவுலி வரவேற்புரையாற்றி, இந்தியாவின் மொழி, படைப்பாற்றல் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த இத்திட்டம் உதவும் என்று குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் 10 பேர் தங்களது திரைக்கதைகளை நடுவர் குழுவிடம் சமர்ப்பிக்கின்றனர். நடிகர் திரு மனோஜ் ஜோஷி, எழுத்தாளர் சந்தீப் பாலகிருஷ்ணா, இயக்குநர் ஸ்ரீ நாராயண் சிங், திரைப்பட விமர்சகர் அனந்த் விஜய் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
நவம்பர் 21 முதல் 23 வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் நவம்பர் 24-ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339736®=48&lang=2
*******
SK/PLM/RJ