தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் படைப்பாற்றல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கும் - டாக்டர் எல். முருகன்

18,000-க்கும் மேற்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பத்து லட்சம் சந்தாதாரர்களைக் கடந்துள்ளன - இது வளர்ந்து வரும் படைப்பாற்றல் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது : டாக்டர் எல். முருகன்

இடுகை இடப்பட்ட நாள்: 29 SEP 2026 7:46PM by PIB Chennai

இளம் படைப்பாளிகள் செயற்கை நுண்ணறிவை, புத்தாக்கம், அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் கூறியுள்ளார். எதிர்காலம் என்பது செயற்கை நுண்ணறிவுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையிலான போராட்டமாக இருக்கக்கூடாது எனவும், செயற்கை நுண்ணறிவானது படைப்பாளிகளுக்கு அதிகாரமளிப்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இன்று (29.09.2026) புது தில்லியில் நடைபெற்ற, “சிறந்த தாக்கத்தை இணைந்து ஏற்படுத்துதல்: இந்தியாவின் டிஜிட்டல் தலைமைத்துவமும் படைப்பாற்றல் பொருளாதாரம்” என்ற கருப்பொருளைக் கொண்ட யூடியூப் தள தாக்க உச்சிமாநாடு 2026- ல் உரையாற்றிய அமைச்சர், இளம் படைப்பாளிகள் துணிச்சலுடனும் பொறுப்புடனும் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பத் வல்லுநர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் பங்கேற்ற இந்த உச்சிமாநாட்டில், சிறப்புரை ஆற்றிய டாக்டர் எல். முருகன், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உலகளாவிய கலாச்சாரத் தொடர்புகளை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் டிஜிட்டல், படைப்பாற்றல் பொருளாதாரத்தின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துரைத்தார்.

 

உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட யூடியூப் தாக்க அறிக்கையின்படி, யூடியூப்பின் படைப்பாற்றல் சூழலமைப்பு 2025-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ₹18,000 கோடிக்கும் மேல் பங்களித்ததுடன், நாடு முழுவதும் 9.6 லட்சத்திற்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளித்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்தியாவில் தயாரிக்கப்படும் உள்ளடக்கங்களுக்கான மொத்த பார்வை நேரத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவிற்கு வெளியே உள்ள பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கின்றன என்றும், அதே நேரத்தில் 18,000-க்கும் மேற்பட்ட இந்திய யூடியூப் சேனல்கள் பத்து லட்சம் சந்தாதாரர்களைக் கடந்துள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது வளர்ந்து வரும் படைப்பாளிப் பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கிறது என அவர் தெரிவித்தார்.

 

டிஜிட்டல் பணம் செலுத்துதல், டிஜிட்டல் பொது கட்டமைப்பு, புத்தொழில் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, குறைந்த விலை இணைய இணைப்பு, டிஜிட்டல் கல்வி ஆகியவற்றின் மூலமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள  டிஜிட்டல் மாற்றத்தை டாக்டர் முருகன் எடுத்துரைத்தார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் “இந்தியாவில் உருவாக்குவோம், உலகிற்காக உருவாக்குவோம்” என்ற தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட அமைச்சர், படைப்பாற்றல் பொருளாதாரத்தின் மூன்று தூண்களான உள்ளடக்கம், படைப்பாற்றல், கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துரைத்தார் .

 

படைப்பாற்றல் என்பது பொழுதுபோக்கையும் தாண்டி , வேலைவாய்ப்புகள், வணிகங்கள், கலாச்சாரத் தாக்கம் ஆகியவற்றை உருவாக்கக்கூடியது என்று அவர் கூறினார் .

 

செயற்கை நுண்ணறிவு படைப்பாளர்களை மாற்றுவதற்குப் பதிலாக அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அனைவரும் அணுகக்கூடிய, பொறுப்பான, அறநெறி சார்ந்த முறையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

 

2030-ம் ஆண்டுக்குள் இந்தத் துறைக்கு ஏறக்குறைய 20 லட்சம் தொழில் வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைவரையும் உள்ளடக்கிய, உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாற்றல் சூழலமைப்பைக் கட்டமைக்க கூட்டு முயற்சிகள் தேவை என இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்தார். யூடியூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திருமதி குஞ்சன் சோனி, யூடியூப்பின் உலகளாவிய அரசு விவகாரங்கள், பொதுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் திருமதி லெஸ்லி மில்லர், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு செந்தில் ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316688&reg=3&lang=1

(Release ID: 2316688)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2316713) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada , Malayalam