பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசிய நிலவரம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார்

மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை கவலையளிப்பதாக உள்ளது: பிரதமர்

ஹோர்மூஸ் நீரிணையில் போர் தொடங்கியதிலிருந்து, கப்பல்களின் போக்குவரத்து மிகவும் சவாலாகிவிட்டது: பிரதமர்

இருப்பினும், பெட்ரோல், டீசல் எரிவாயு விநியோகம் பெரிதாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய எங்கள் அரசு முயற்சி செய்து வருகிறது : பிரதமர்

மனிதகுல நலனுக்காக இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறது : பிரதமர்

प्रविष्टि तिथि: 23 MAR 2026 3:47PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், அது இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ள பரந்த அளவிலான சவால்கள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். இந்த நெருக்கடி இப்போது மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், இது உலகப் பொருளாதாரத்திலும் மனித உயிர்களிலும் ஆழமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இதற்கு உடனடியாக ஒரு தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். சூழ்நிலையின் தீவிரத்தை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த நெருக்கடிக்கு கூடிய விரைவில் ஒரு தீர்வு காணுமாறு அனைத்துத் தரப்பினரையும் ஒட்டுமொத்த உலகமும் வலியுறுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

 

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் தன்மையை விரிவாக எடுத்துரைத்த பிரதமர், இந்தப் போர் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார, தேசியப் பாதுகாப்பு, மனிதாபிமான அழுத்தங்களை உருவாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். போரிடும் நாடுகளுடனும், போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுடனும் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது என்றும், மோதல் பகுதி முக்கிய வர்த்தகப் பாதைகளில் அமைந்துள்ளது என்றும், இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு தேவைகளில் பெரும் பங்கு இந்தப் பகுதிகள் வழியாகவே பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். வளைகுடா நாடுகளில் வசித்து வரும், பணிபுரியும் ஏறத்தாழ ஒரு கோடி இந்தியர்கள், அந்தக் கடற்பரப்பில் உள்ள வர்த்தகக் கப்பல்களில் இருக்கும் கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாலுமிகள் ஆகியோர் குறித்து பேசிய பிரதமர், இது தொடர்பாக இந்தியாவின் கவலைகள் அதிகமாக உள்ளன எனவும், இந்த நெருக்கடி குறித்து இந்திய நாடாளுமன்றத்திலிருந்து உலகிற்கு ஒருமித்த, ஒருமனதான குரல் ஒலிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

 

இந்தியக் மக்களைப் பாதுகாப்பதற்கான அரசின் விரைவான நடவடிக்கைகளை விவரித்த பிரதமர், போர் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவையில் தெரிவித்தார். பெரும்பாலான மேற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களுடன் தாம் இரண்டு சுற்றுக்களாகத் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், அவர்கள் அனைவரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து முழுமையான உறுதி அளித்துள்ளதாகவும் கூறிய திரு நரேந்திர மோடி, காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்படுகிறது என்று கூறினார். இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள தூதரக, நிறுவன ரீதியான ஆதரவுக் கட்டமைப்பு குறித்து பிரதமர் மேலும் விவரித்தார். பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களும் தொடர்ச்சியாக உதவி செய்து வருவதாகவும், வழக்கமான ஆலோசனைகளை வெளியிட்டு வருவதாகவும், மேலும் இந்தியாவிலும் மற்ற பாதிக்கப்பட்ட நாடுகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளும் அவசர உதவி எண்களும் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வழிமுறைகள் மூலம், பாதிக்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் உடனடித் தகவல்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

 

மீட்புப் பணியை எடுத்துரைத்த பிரதமர், போர் தொடங்கியதிலிருந்து 3,75,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர் என்றும், அவர்களில் ஈரானிலிருந்து மட்டும் சுமார் 1,000 இந்தியர்கள் வந்துள்ளனர் என்றும், அவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் இளம் மருத்துவ மாணவர்கள் என்றும் அவையில் தெரிவித்தார். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளில் திட்டமிடப்பட்டிருந்த 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது என்றும், சீரான கல்வித் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிஎஸ்இ எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் அணுகுமுறையைத் எடுத்துக்கூறிய திரு நரேந்திர மோடி, அரசு உணர்வுபூர்வமாகவும், விழிப்புடனும் உள்ளதுடன், அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறது என்று உறுதிபட தெரிவித்தார்.

 

எரிசக்தி விநியோகம் குறித்த முக்கியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கச்சா எண்ணெய், எரிவாயு, உரங்கள், பிற அத்தியாவசியப் பொருட்கள் பெருமளவில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவை வந்தடைகின்றன என்பதையும், போருக்குப் பிறகு அந்த நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். சாதாரணக் குடும்பங்களைச் சிரமங்களிலிருந்து பாதுகாப்பதில் அரசின் கவனம் இருந்து வருவதாக கூறிய பிரதமர், எல்பிஜியின் உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பது, அதன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிட்டதோடு, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்யத் தொடர்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

 

கடந்த பத்து ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் எரிசக்தி பல்வகைப்படுத்தல் உத்தி, தற்போதைய நெருக்கடியில் தனது மதிப்பை நிரூபித்துள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தனது எரிசக்தி இறக்குமதி ஆதாரங்களை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது என்றும், இதன் மூலம் எந்தவொரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சார்ந்திருப்பதும் குறைந்துள்ளது என்றும் அவர் அவையில் தெரிவித்தார். எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பாக கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போதைய சூழலில் இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

நெருக்கடியான காலங்களுக்காகவே இந்தியா கச்சா எண்ணெயைக் கையிருப்பு வைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எண்ணெய் நிறுவனங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட கையிருப்புகளுக்குக் கூடுதலாக, இந்தியா இப்போது 53 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உத்திசார் பெட்ரோலியக் கையிருப்பைக் கொண்டுள்ளது என்றும், 65 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கையிருப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் அவையில் தெரிவித்தார். இந்தியாவின் சுத்திகரிப்புச் சூழல் அமைப்பின் ஒட்டுமொத்த மேம்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளில், நமது சுத்திகரிப்புத் திறனிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

 

இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, உரங்கள், பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, உலகளாவிய விநியோகஸ்தர்களுடன் அரசு தீவிரமாக பேசி வருவதையும், வளைகுடா கப்பல் வழித்தடங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதையும் பிரதமர் விவரித்தார். கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து உலகளாவிய கூட்டு அமைப்புகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இத்தகைய முயற்சிகளின் காரணமாக, ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியிருந்த நமது பல கப்பல்களும் சமீப நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

 

விவசாயத்தின் மீதான போரின் தாக்கம் குறித்துப் பேசிய பிரதமர், இந்திய விவசாயிகள் போதுமான உணவு தானிய இருப்பை உறுதி செய்துள்ளதாகவும், முறையான காரிஃப் பருவ விதைப்புக்கு அரசு வழிவகுத்து வருவதாகவும், அண்மைக் காலங்களில் வலுவான அவசரகால உணவு ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளதாகவும் அவையில் தெரிவித்தார். வெளிப்புறச் சூழல்களிலிருந்து இந்திய விவசாயத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியான நடவடிக்கைகளை விவரித்த பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் 6 புதிய யூரியா ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், இதன் மூலம் ஆண்டு உற்பத்தித் திறன் 76 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், அதே நேரத்தில் டிஏபி, என்பிகேஎஸ் உரங்களின் உள்நாட்டு உற்பத்தி சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன்கள் அதிகரிக்கப்பட்டு, உர இறக்குமதி ஆதாரங்களும் பல்வகைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகளின் பரந்த தன்மையை வலியுறுத்திக் கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாம் எண்ணெய், எரிவாயு இறக்குமதிகளைப் பல்வகைப்படுத்தியதைப் போலவே, டிஏபி என்பிகேஎஸ் இறக்குமதிக்கான நமது வாய்ப்புகளையும் விரிவுபடுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், கோடைக்காலத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையின் சவாலை எதிர்கொள்ளும் வகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் அவையில் தெரிவித்தார். மின் உற்பத்தி முதல் மின் விநியோகம் வரையிலான அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான முன்னேற்றங்களால் அரசின் தயார்நிலை கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

 

மேற்கு ஆசிய மோதல் குறித்த இந்தியாவின் ராஜதந்திர ரீதியான நிலை பற்றி பிரதமர் கூறுகையில், ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றார். அதாவது, ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவது, பதற்றத்தைத் தணிக்க வலியுறுத்துவது, பொதுமக்கள் மீதும், எரிசக்தி, போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்ப்பது என்பதே அது என அவர் கூறினார். சம்பந்தப்பட்ட அனைத்து மேற்கு ஆசியத் தலைவர்களுடனும் தாம் கலந்துரையாடியதாகவும், பதற்றத்தைக் குறைத்து மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர்களை வலியுறுத்தியதாகவும் அவையில் தெரிவித்த பிரதமர் மோடி, வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹோர்மூஸ் நீரணை போன்ற சர்வதேச நீர்வழிகளைத் தடுப்பதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அவர் கூறினார்.

மனிதநேயம், அமைதிக்கான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தையும், ராஜ்ய ரீதியிலான அணுகுமுறையே ஒரே வழி என்று குறிப்பிட்டார். பதற்றத்தைத் தணிப்பதற்கும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சியும் எடுக்கப்படுகிறது என்றும், இந்தப் போரில் எந்தவொரு உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பது மனிதநேய நலன்களுக்கு எதிரானது என்றும் திரு நரேந்திர மோடி, குறிப்பிட்டர். அனைத்துத் தரப்பினரும் கூடிய விரைவில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதை ஊக்குவிப்பதே இந்தியாவின் முயற்சியாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2243931&reg=3&lang=1  

***

(Release ID: 2243931)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267816) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam