நிதி அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பு வழங்குவதில், மக்களுக்கான மூன்று திட்டங்கள், 11 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2026 9:07AM by PIB Chennai
மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை, பிரதமர் திரு நரேந்திர மோடி 2015-ம் ஆண்டு மே 9 அன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் என இந்த மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், அனைவருக்கும், குறிப்பாக சமுதாயத்தின் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு, குறைந்த விலையில் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டன. இந்த முதன்மைத் திட்டங்கள், வாழ்க்கையின் நிச்சயமற்ற சூழலில், மக்களைப் பாதுகாப்பதன் மூலம், நீண்டகால நிதிசார் நிலைத்தன்மையை மேம்படுத்துவதன் வாயிலாக காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வழிகாட்டுதாழ் கொள்கைகள் குறித்து உரையாற்றிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், "குறைந்த செலவில் காப்பீடு மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததாகக் கூறினார்.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு 11-வது ஆண்டு நிறைவடையும் நிலையில், அது தொடர்பான தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், இந்த மூன்று திட்டங்களின் கீழ், முறையே 27 கோடி, 58 கோடி மற்றும் 9 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (பிஎம்ஜேஜேபிஒய்) குறித்துப் பேசிய நிதியமைச்சர், இத்திட்டத்தின் மூலம் 10.7 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு ரூ 21,500 கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் (பிஎம்எஸ்பிஒய்) திட்டத்தின் கீழ், 1.84 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு ஏறக்குறைய ரூ 3,660 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
"சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் 11வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த தருணத்தில், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளால் இத்திட்டங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டங்களை வெற்றி பெறச் செய்ததற்காக தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி, “மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு, காப்பீட்டுப் பாதுகாப்பையும், ஓய்வூதிய ஆதரவையும் வழங்குவதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும் என்றார். பதிவு மற்றும் உரிமைகோரல் செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதும், எளிமைப்படுத்துவதும், இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259251®=3&lang=1
(Release ID: 2259251)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259336)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam