பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கட்ச் மற்றும் சௌராஷ்டிரா மண்டலத்திற்கான 'துடிப்பான குஜராத்' மண்டல மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 JAN 2026 6:00PM by PIB Chennai

 

வணக்கம்! குஜராத் மாநிலத்தின் மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல் அவர்களே, குடியரசுத் துணைத்தலைவர் ஹர்ஷ் சங்வி அவர்களே, குஜராத் அரசின் பிற அமைச்சர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, மாண்புமிகு விருந்தினர்களே, தொழில்துறை பிரதிநிதிகளே மற்றும் பெரியோர்களே.

2026-ம் ஆண்டு தொடங்கிய பிறகு நான் குஜராத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்த ஆண்டின் எனது பயணம் சோம்நாத் தாதாவின் பாதங்களில் தலைவணங்கித் தொடங்கியது என்பது மிகவும் மங்களகரமானது. இப்போது நான் ராஜ்கோட்டில் இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். 'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' - இந்த மந்திரம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 'துடிப்பான குஜராத்' மண்டல மாநாட்டிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகெங்கிலும் இருந்தும் வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, 'துடிப்பான குஜராத்' மாநாட்டிற்கான ஏற்பாடு செய்யும் போதெல்லாம், நான் அதை ஒரு மாநாடாக மட்டும் பார்க்கவில்லை. 21-ம் நூற்றாண்டின் நவீன இந்தியாவின் பயணமாகவே இதைப் பார்க்கிறேன். ஒரு கனவுடன் தொடங்கிய இந்தப் பயணம், இப்போது அசைக்க முடியாத நம்பிக்கையை எட்டியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், 'துடிப்பான குஜராத்'தின் இந்தப் பயணம் உலகளாவிய ஒரு அளவுகோலாக மாறியுள்ளது. இதுவரை பத்து பதிப்புகள் நடைபெற்றுள்ளன, ஒவ்வொரு பதிப்பிலும் இந்த மாநாட்டின் அடையாளமும் பங்கும் வலுவடைந்துள்ளன.

நண்பர்களே, இந்த 'துடிப்பான குஜராத்' மாநாட்டின் தொடக்கத்திலிருந்தே நான் அதன் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்துள்ளேன். ஆரம்ப நாட்களில், குஜராத்தின் திறனை உலகிற்குத் தெரியப்படுத்துவதும், மக்களை இங்கு அழைப்பதும், முதலீடுகளை ஊக்குவிப்பதும் எங்களின் நோக்கமாக இருந்ததுஇதன் மூலம் இந்தியாவும் பயனடையும், உலகளாவிய முதலீட்டாளர்களும் பயனடைவார்கள் என்பதே அதன் நோக்கம். ஆனால் இன்று, இந்த மாநாடு முதலீடுகளைத் தாண்டி, உலகளாவிய வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான ஒரு வலுவான தளமாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் உலகளாவிய கூட்டாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. காலப்போக்கில், இந்த மாநாடு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இங்கே கார்ப்பரேட் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு அமைப்புகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து, கலந்துரையாடி, குஜராத்தின் வளர்ச்சியுடன் தோளோடு தோள் நின்று செயல்படுகின்றன.

நண்பர்களே,

கடந்த இரண்டு தசாப்தங்களாக, 'துடிப்பான குஜராத்மாநாடு தொடர்ந்து புதிதாக எதையாவது, சிறப்பான எதையாவது அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த 'துடிப்பான குஜராத்' மண்டல மாநாடு' அதற்கு மற்றுமொரு உதாரணமாகும். குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள திறன்களை செயல்பாடாக மாற்றுவதே இதனுடைய நோக்கமாகும். உதாரணமாக, சில பிராந்தியங்கள் கடற்கரை வலிமையைக் கொண்டுள்ளன, மற்றவை நீண்ட பழங்குடியினப் பகுதிகளைக் கொண்டுள்ளன; சில பகுதிகளில் தொழில்துறை தொகுப்புகளின் பெரிய சூழல் அமைப்பு உள்ளது, மற்றவை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குஜராத்தின் ஒவ்வொரு பிராந்தியமும் தனக்கே உரித்தான தனித்துவமான வலிமையைக் கொண்டுள்ளது. இந்தப் பிராந்திய சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் 'துடிப்பான குஜராத்' மண்டல மாநாடு' முன்னோக்கிச் செல்கிறது.

நண்பர்களே, 21-ம் நூற்றாண்டின் ஒரு கால் பகுதி ஏற்கனவே கடந்துவிட்டது. இந்த ஆண்டுகளில், இந்தியா அதிவேக முன்னேற்றம் கண்டுள்ளது; இதில் குஜராத்தும் - நீங்கள் அனைவரும் - முக்கியப் பங்கு வகித்துள்ளீர்கள். இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்தியா மீதான உலகின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியாதான். பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. விவசாய உற்பத்தியில் இந்தியா புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பொதுவான மருந்து உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசி தயாரிப்பைப் பொறுத்தவரை, உலகில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாடு இந்தியாதான்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பட்டியல் என்பது 'சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம்' என்ற மந்திரத்தின் வெற்றிக் கதையாகும். கடந்த 11 ஆண்டுகளில், மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவதில் இந்தியா உலகின் மிகப்பெரிய நுகர்வோராக மாறியுள்ளது. நமது யுபிஐ உலகின் முதன்மையான நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனை தளமாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில், 10-ல் 9 மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இன்று, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தியாளராக உள்ளது. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில்  சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. சூரிய சக்தி உற்பத்தியிலும், இந்தியா முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது. நாம் மூன்றாவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இருக்கிறோம், மேலும் மெட்ரோ ரயில் கட்டமைப்பு வசதிகளில் இந்தியா இப்போது உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது.

நண்பர்களே,

இன்று, உலகளாவிய ஒவ்வொரு நிபுணரும் நிறுவனமும் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் இந்தியாவை உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரம் என்று அழைக்கிறது. எஸ் & பி நிறுவனம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தரவரிசையை உயர்த்தியுள்ளது. ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நிதி நம்பகத்தன்மையைப் பாராட்டுகிறது. பெரும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும், இந்தியா முன்னெப்போதும் இல்லாத ஒரு நிச்சயத்தன்மையை அனுபவித்து வருவதாலேயே இந்தியாவின் மீது உலகம் இத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளது. இன்று இந்தியாவிடம் அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கைத் தொடர்ச்சி மற்றும் வாங்கும் திறன் அதிகரித்து வரும் விரிவடைந்து வரும் புதிய நடுத்தர வர்க்கம் ஆகியவை உள்ளன. இந்தக் காரணிகள் இந்தியாவை எல்லையற்ற சாத்தியக்கூறுகள் கொண்ட நாடாக மாற்றியுள்ளன. நான் செங்கோட்டையிலிருந்து சொன்னது போல இதுவே தருணம், ஆகச்சிறந்த நேரம். இந்தியாவில் உள்ள மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே தருணம், ஆகச்சிறந்த நேரம். 'துடிப்பான குஜராத்' மண்டல மாநாடும்' அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இதையே செய்தியாகச் சொல்கிறதுசௌராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் முதலீடு செய்யுங்கள், இதுவே தருணம், ஆகச்சிறந்த நேரம்..

 

நண்பர்களே, சௌராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகியவை சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஒருவர் நேர்மையுடனும் கடின உழைப்புடனும் விடாமுயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நமக்குக் கற்றுத் தரும் பிராந்தியங்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தாங்கிய அதே கட்ச் இதுதான். பல ஆண்டுகளாக வறட்சியைச் சந்தித்த அதே சௌராஷ்டிரா இதுதான். தாய்மார்களும் சகோதரிகளும் குடிநீருக்காக மைல் கணக்கில் நடக்க வேண்டியிருந்தது. மின்சாரம் நிச்சயமற்றதாக இருந்தது, எங்கும் சிரமங்கள் நிறைந்திருந்தன.

நண்பர்களே, இன்றைய 20-25 வயது இளைஞர்கள் அந்த காலத்தைப் பற்றிய கதைகளை மட்டுமே கேட்டுள்ளனர். கட்ச் அல்லது சௌராஷ்டிராவில் மக்கள் நீண்ட காலம் தங்குவதற்குத் தயாராக இல்லாத நிலையே அன்று உண்மையாக இருந்தது. அந்த நேரத்தில், இந்த நிலைமைகள் ஒருபோதும் மாறாது என்று தோன்றியது. ஆனால் வரலாறு சாட்சி கூறுகிறதுகாலம் மாறுகிறது, அது நிச்சயமாக மாறுகிறது. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் மக்கள் தங்களது கடின உழைப்பின் மூலம் தங்கள் விதியை மாற்றியமைத்துள்ளனர்.

நண்பர்களே, இன்று, சௌராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகியவை வெறும் வாய்ப்புகள் நிறைந்த பிராந்தியங்கள் மட்டுமல்ல; அவை இந்தியாவின் வளர்ச்சியின் மையப் பகுதிகளாக மாறியுள்ளன. சுயசார்பு இந்தியா இயக்கத்தை இயக்கும் முக்கிய மையங்களாக இவை உருவெடுத்து வருகின்றன. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் முக்கிய பங்கு வகிக்கின்றன - மேலும் இந்தப் பங்கு சந்தை தேவைகளால் தூண்டப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கு இதுவே மிகப்பெரிய உத்தரவாதமாகும்.

இங்கே ராஜ்கோட்டில் மட்டும் 2,50,000-க்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன் பலதரப்பட்ட தொழில்துறை தொகுப்புகளில், திருகுக்கழல்கள் முதல் வாகன உதிரிபாகங்கள், இயந்திரக் கருவிகள், ஆடம்பர கார் லைனர்கள், விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் ராக்கெட் பாகங்கள் வரை அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறைந்த செலவிலான உற்பத்தி முதல் அதிநவீன தொழில்நுட்ப உற்பத்தி வரை முழுமையான மதிப்புச் சங்கிலியை இந்தப் பிராந்தியமே தாங்கி நிற்கிறது. மேலும், இங்குள்ள நகைத்தொழில் உலகப் புகழ்பெற்றது. இந்தத் துறை அளவு திறன் மற்றும் உலகளாவிய இணைப்பு ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

நண்பர்களே, உலகிலேயே மிகப்பெரிய கப்பல் உடைக்கும் தளம் அலங் ஆகும், அங்கு உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இது 'சுழற்சிப் பொருளாதாரத்தில்' இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு ஒரு சான்றாகும். ஓடுகள் உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக உள்ளது, இதில் மோர்பி மாவட்டம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இங்குள்ள உற்பத்தி செலவு குறைந்ததாகவும், உலகளாவிய தரம் வாய்ந்ததாகவும் உள்ளது.

சௌராஷ்டிரா பத்திரிகையாளர்களில் பலருக்கு நினைவிருக்கலாம் - ஒருமுறை இங்கே ஆற்றிய உரையில், மோர்பி, ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்கள் ஒரு 'மினி ஜப்பான்' போன்ற முக்கோண வடிவை உருவாக்கும் காலம் வரும் என்று நான் கூறினேன். அப்போது நான் கேலி செய்யப்பட்டேன், ஆனால் இன்று அந்த தொலைநோக்குப் பார்வை என் கண் முன்னே நனவாவதைக் காண்கிறேன். தோலேரா சிறப்பு முதலீட்டு மண்டலத்தைக் குறித்தும் நாம் பெருமைப்படுகிறோம். இன்று இந்த நகரம் நவீன உற்பத்தியின் முக்கிய மையமாக மாறி வருகிறது. இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை தோலேராவில் அமைய உள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இந்தியாவுக்கு இது ஒரு முன்கூட்டிய வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் முதலீட்டிற்காக இங்கு தளம் முழுமையாகத் தயாராக உள்ளது - உள்கட்டமைப்பு தயார், கொள்கைகள் நிலையானவை மற்றும் தொலைநோக்குப் பார்வை நீண்ட காலமானது.

நண்பர்களே, சௌராஷ்டிரா மற்றும் கட்ச் ஆகியவை இந்தியாவின் பசுமை வளர்ச்சி, பசுமைப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் முக்கிய மையங்களாகவும் மாறி வருகின்றன. கட்ச் பகுதியில் 30 ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா கட்டப்பட்டு வருகிறது - இது உலகின் மிகப்பெரிய கலப்பு எரிசக்தி பூங்காவாகும். கற்பனை செய்து பாருங்கள், இந்தப் பூங்கா பாரிஸ் நகரத்தை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும். இங்கே, தூய்மையான எரிசக்தி என்பது ஒரு வாக்குறுதி மட்டுமல்ல, அது வணிக அளவிலான யதார்த்தமாகும். பசுமை ஹைட்ரஜனின் ஆற்றலை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தியா இந்த திசையில் முன்னெப்போதும் இல்லாத வேகம் மற்றும் அளவில் செயல்பட்டு வருகிறது. கட்ச் மற்றும் ஜாம்நகர் ஆகியவை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் முக்கிய மையங்களாக மாறி வருகின்றன.

இந்த திசையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வேகத்திலும் அளவிலும் செயல்பட்டு வருகிறது. கட்ச் மற்றும் ஜாம்நகர் பகுதிகள் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் முக்கிய மையங்களாக உருவெடுத்து வருகின்றன. கட்ச் பகுதியில் ஒரு மிகப்பெரிய 'பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு' நிறுவப்பட்டு வருகிறது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் சேர்த்து, மின் விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்கிறது.

நண்பர்களே, கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பகுதிகளுக்கு இன்னும் ஒரு பெரிய வலிமை உள்ளது. இப்பகுதி இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பங்கு இதன் வழியாகவே நடைபெறுகிறது. பிபாவாவ் மற்றும் முந்திரா போன்ற துறைமுகங்கள் இந்தியாவின் வாகன ஏற்றுமதிக்கான முக்கிய மையங்களாக மாறியுள்ளன. கடந்த ஆண்டு மட்டும், குஜராத் துறைமுகங்கள் வழியாக சுமார் 1,75,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது வெறும் தளவாடப் போக்குவரத்து மட்டுமல்ல - துறைமுகங்கள் சார்ந்த வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் எல்லையற்ற முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இதனுடன் சேர்த்து, குஜராத் அரசு மீன்வளத் துறைக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. மீன்வள உள்கட்டமைப்பில் பெரிய அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; கடல் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு வலுவான சூழல் அமைப்பு இங்கே உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, உள்கட்டமைப்புடன் சேர்த்து, தொழில்துறைக்குத் தேவையான தகுதியுள்ள மனிதவளம் என்பது இன்றைய மிகப்பெரிய தேவையாகும். இந்த விஷயத்தில் குஜராத் முதலீட்டாளர்களுக்கு முழுமையான உறுதியை வழங்குகிறது. இங்கே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு சர்வதேச சூழல் அமைப்பு நிலவுகிறது. குஜராத்தின் திறன் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, எதிர்காலத் தேவைகளுக்கேற்ப இளைஞர்களைத் தயார்படுத்தி வருகிறது. தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் தேசிய அளவிலான பாதுகாப்புப் பல்கலைக்கழகமாகும். விரைவு சக்தி பல்கலைக்கழகம் சாலை, ரயில்வே, வான்வழி, நீர்வழி மற்றும் தளவாடங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவையான திறமையான மனிதவளத்தைத் தயார் செய்து வருகிறது. இதன் பொருள், முதலீட்டுடன் சேர்த்து, திறமையான மனிதவளத்தின் தொடர்ச்சியும் இங்கே உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புதிய வாய்ப்புகளைக் காண்கின்றன, அவற்றுக்கு குஜராத் விருப்பமான இடமாக மாறி வருகிறது. இரண்டு முக்கிய ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே இங்கே தங்கள் வளாகங்களைத் தொடங்கியுள்ளன, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

நண்பர்களே, குஜராத் இயற்கை, சாகசம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு சுற்றுலாப் பயணி எந்த விதமான அனுபவத்தைத் தேடினாலும், அது இங்கே கிடைக்கிறது. லோதல் இந்தியாவின் 4,500 ஆண்டுகள் பழமையான கடல்சார் பாரம்பரியத்தின் சின்னமாகும். உலகின் பழமையான மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல்துறை இங்கே கண்டறியப்பட்டுள்ளது; தற்போது அங்கு ஒரு 'தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்' உருவாக்கப்பட்டு வருகிறது. கட்ச் பகுதியில் தற்போது 'ரான் உத்சவ்' கொண்டாடப்பட்டு வருகிறது, அங்குள்ள கூடார நகரத்தில் தங்குவது ஒரு தனித்துவமான அனுபவமாகும்.

வனவிலங்கு ஆர்வலர்களுக்கு, கிர் காடுகளில் ஆசிய சிங்கங்களைப் பார்ப்பதை விட சிறந்தது என்ன இருக்க முடியும்? ஒவ்வொரு ஆண்டும் 9 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். கடலை நேசிப்பவர்களுக்காக, 'புளூ ஃபிளாக்' சான்றிதழ் பெற்ற சிவராஜ்பூர் கடற்கரை உள்ளது. இதுதவிர, மாண்ட்வி, சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய இடங்களும் கடற்கரை சுற்றுலாவுக்கு அபாரமான சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன. அருகிலுள்ள தியூ நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகளுக்கு ஒரு அற்புதமான இடமாக மாறி வருகிறது. இந்த முழுப் பிராந்தியமும் முதலீட்டாளர்களுக்கு வலிமை மற்றும் வாய்ப்புகள் நிறைந்தது. இதனை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் நீண்டகாலமாகச் சொல்லி வருவது போலநீங்கள் தாமதம் செய்தால், என்னை வருத்தப்பட வேண்டாம். சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீடும் குஜராத்தின் வளர்ச்சியையும், இந்தியாவின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும்.

சௌராஷ்டிராவின் வலிமை வெளிநாடுகளிலும் காணப்படுகிறது. ருவாண்டாவின்  உயர் ஆணையர் சமீபத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். நான் ருவாண்டா சென்றிருந்தபோது, 200 கிர் பசுக்களை பரிசாக வழங்கினேன். ஆனால் அங்கு ஒரு சிறப்பு விதி இருந்தது: பிறக்கும் முதல் பெண் கன்றுக்குட்டியை திருப்பித் தர வேண்டும், பின்னர் அது மற்றொரு குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த 200 பசுக்களில் இருந்து, இன்று ருவாண்டாவில் ஆயிரக்கணக்கான குடும்பங்களிடம் பசுக்கள் உள்ளன. இன்று ருவாண்டாவின் ஒவ்வொரு வீட்டிலும் கிர் பசுக்கள் காணப்படுகின்றன, இது அந்நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்திற்கு பெரும் வலிமையை அளிக்கிறது. இதுதான் சௌராஷ்டிராவின் ஆன்மா.

நண்பர்களே,

இன்றைய இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி அதிவேகமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதில் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' முக்கியப் பங்கு வகிக்கிறது. 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' என்பது ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் குறிக்கிறது. சமீபத்தில், இந்தியா அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அமல்படுத்தியது; இது அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளது. இந்தச் சீர்திருத்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, காப்பீட்டுத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை (FDI) அனுமதிக்கும் மிகப்பெரிய சீர்திருத்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இது குடிமக்கள் அனைவருக்கும் காப்பீட்டு வசதியை வழங்கும் இயக்கத்தைத் துரிதப்படுத்தும். அதேபோல், சுமார் ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு, வருமான வரிச் சட்டம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது, இது லட்சக்கணக்கான வரி செலுத்துவோருக்குப் பயனளிக்கிறது. இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் சீர்திருத்தங்களையும் அமல்படுத்தியுள்ளது. இது ஊதியம், சமூக பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்களும் தொழில்துறையினரும் சமமாகப் பயனடை கிறார்கள்.

தரவு சார்ந்த கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா உலகளாவிய மையமாக மாறி வருகிறது. இந்தியாவின் மின்சாரத் தேவை சீராக அதிகரித்து வருகிறது, அதற்குத் தடையற்ற எரிசக்தி அவசியம். இதன் முக்கிய ஆதாரமாக அணுசக்தி விளங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அணுசக்தித் துறையில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தின் கடந்த கூட்டத்தொடரில், 'சாந்தி சட்டம்' மூலம் சிவில் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும்.

நண்பர்களே, இங்கு வந்துள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் உறுதி அளிக்கிறேன்நமது 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' ஒருபோதும் நிற்காது. இந்தியாவின் சீர்திருத்தப் பயணம் இப்போது நிறுவன ரீதியான மாற்றத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

நீங்கள் இங்கு வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் மட்டும் வரவில்லை. சௌராஷ்டிரா-கட்ச் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்துடன் இணைய வந்திருக்கிறீர்கள். உங்கள் முதலீட்டின் ஒவ்வொரு ரூபாயும் இங்கே சிறந்த பலனைத் தரும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் அரசுக்கும் அதன் குழுவினருக்கும் அவர்களின் முயற்சிகளுக்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 'துடிப்பான குஜராத் மாநாட்டிற்கு' முன்னதாக, இந்த மண்டல மாநாடு ஒரு பயனுள்ள முயற்சியாக அமைந்துள்ளது. நான் தொடங்கி வைத்த ஒரு பணி, இப்போது எனது சகாக்களால் விரிவுபடுத்தப்பட்டு, புதிய ஆற்றலுடன் செயல்படுத்தப்படுவதைக் கண்டு நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இது எனது மகிழ்ச்சியைப் பலமடங்கு அதிகரிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி!

***

(Release ID: 2213438)

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256893) வருகையாளர் எண்ணிக்கை : 17