பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலத்தின் 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத் தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 26 SEP 2025 2:38PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்!

இன்று, இந்த நவராத்திரி திருவிழாவின் புனித நாட்களில், பீகாரின் பெண் சக்தியுடன் அவர்களது மகிழ்ச்சியில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் இங்கே திரையில் பார்க்கும் போது, லட்சக்கணக்கான பெண்களும் சகோதரிகளும் தெரிகிறார்கள். இந்த நவராத்திரியின் புனிதமான திருவிழாக் காலத்தில் உங்களது ஆசிகள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பலமாகும். இன்று உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; இன்று முதல், "முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்" தொடங்கப்படுகிறது. எனக்குச் சொல்லப்பட்டபடி, இதுவரை 75 லட்சம் சகோதரிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இப்போது, இந்த 75 லட்சம் சகோதரிகளின் வங்கிக் கணக்குகளுக்கும் தலா 10,000 ரூபாய் ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்தச் செயல்முறை நடந்து கொண்டிருந்தபோது, நான் அமர்ந்து இரண்டு விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். முதலாவதாக, இன்று நிதிஷ் அவர்களின் அரசு பீகாரின் சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக உண்மையிலேயே ஒரு பெரிய மற்றும் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. ஒரு சகோதரி அல்லது மகள் வேலை வாய்ப்பைப் பெறும்போதோ அல்லது சுயதொழில் செய்பவராக மாறும்போதோ, அவர்களின் கனவுகள் புதிய சிறகுகளைப் பெறுகின்றன, மேலும் சமூகத்தில் அவர்களின் மரியாதை உயர்கிறது.

இரண்டாவதாக என் நினைவுக்கு வந்தது என்னவென்றால், 11 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு சேவையாற்றுவதற்கு முதன்மைச் சேவகனாக நீங்கள் என்னை நியமித்தபோது, நாம் 'மக்கள் நிதி திட்டத்தை' முன்னெடுக்கும் உறுதிமொழியை எடுத்திருக்கவில்லை என்றால்; நாடு முழுவதும் மக்கள் நிதி திட்டத்தின் கீழ் சகோதரிகள் மற்றும் மகள்களுக்காக 30 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் திறந்திருக்கவில்லை என்றால்; இந்த வங்கிக் கணக்குகள் உங்கள் கைப்பேசி மற்றும் ஆதாரோடு இணைக்கப்படாமல் இருந்திருந்தால்; உங்களது வங்கிக் கணக்குகளுக்கு இவ்வளவு பெரியத் தொகையை இன்று எங்களால் நேரடியாக அனுப்ப முடிந்திருக்குமா? இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை.

முன்பு ஒரு பிரதமர் சொல்லியிருந்தார் - இந்த நாட்களில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் குறித்த பேச்சுக்களுக்கு இடையில் இதைச் சொல்கிறேன் - முன்பு ஒரு பிரதமர் சொல்லியிருந்தார், அந்த நேரத்தில் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அவர்களே எல்லா இடங்களிலும் ஆட்சி செய்தார்கள். டெல்லியிலிருந்து ஒரு ரூபாய் அனுப்பப்பட்டால், அது மக்களைச் சென்றடையும் போது வெறும் 15 காசுகள் மட்டுமே போய்ச் சேருவதாகவும், மீதமுள்ள 85 காசுகளை யாரோ ஒரு 'கை' (கட்சிச் சின்னத்தைக் குறிப்பிட்டு) அபகரித்துக் கொள்வதாகவும் அவர் கூறுவார். ஆனால் இன்று அனுப்பப்படும் பணத்தில், முழுமையான 10 ஆயிரம் ரூபாயும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும், ஒரு ரூபாயை கூட யாராலும் திருட முடியாது. இடையில் கொள்ளையடிக்கப்பட்ட அந்தப் பணம், உங்களுக்கு இழைக்கப்பட்ட எவ்வளவு பெரிய அநீதி என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

நண்பர்களே,

தன் சகோதரி ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், அவளது குடும்பம் பொருளாதார ரீதியாக வலிமையாகவும் இருக்கும்போது ஒரு சகோதரன் மிகுந்த மகிழ்ச்சியடைகிறான். இதற்காக அந்தச் சகோதரன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். இன்று உங்களது இரண்டு சகோதரர்களான நரேந்திரனும், நிதிஷ் அவர்களும் உங்கள் சேவைக்காகவும், செழுமைக்காகவும், உங்கள் சுயமரியாதைக்காகவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றனர். இன்றைய நிகழ்ச்சியும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

தாய்மார்களே, சகோதரிகளே,

இந்தத் திட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டபோது, அதன் தொலைநோக்குப் பார்வையால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் கண்டிப்பாக இத்திட்டத்தின் பலனைப் பெறுவார். இந்த ஆரம்பக்கால 10 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட பிறகு, ஒரு பெண் அந்தப் பணத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, ஏதேனும் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கி, தன் சொந்தக் காலில் நிற்க ஒரு வணிகத்தைத் தொடங்கி, அது வெற்றிகரமாக அமைந்தால், அவருக்கு 2 லட்சம் ரூபாய் வரை கூடுதல் நிதி உதவி வழங்கப்படலாம். இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், இது உங்களுக்கு எவ்வளவு பெரிய சாதனை. வணிக உலகில் இது 'தொடக்க மூலதனம்'  என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் உதவியுடன், பீகாரைச் சேர்ந்த எனது சகோதரிகள் மளிகை கடை, பாத்திரக் கடை, அழகுசாதனப் பொருட்கள், பொம்மைகள், எழுதுபொருட்கள் போன்ற பல்வேறு சிறிய கடைகளைத் திறந்து தங்களது சொந்தத் தொழிலைச் செய்யலாம். அவர்கள் மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற தொழில்களையும் செய்யலாம். இதுபோன்ற பல தொழில்களில் அவர்கள் முன்னேற முடியும். இவை அனைத்திற்கும் முறையான பயிற்சி தேவை. இப்போது உங்களுக்குப் பணம் கிடைத்துவிட்டது, ஆனால் அதை உண்மையில் எப்படிச் செய்வது என்று நீங்கள் நினைக்கலாம். எனவே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், உங்களுக்குப் பணம் வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அதற்கான பயிற்சியும் அளிக்கப்படும், எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதும் கற்றுக்கொடுக்கப்படும்.

'ஜீவிகா சுயஉதவிக் குழு' போன்ற அற்புதமான அமைப்பு பீகாரில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. சுமார் 11 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் இங்கு இயங்கி வருகின்றன, அதாவது ஒரு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்பு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில், 'ஜீவிகா நிதி தோழமை கடன் கூட்டுறவுச் சங்கத்தை'  தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது இந்த அமைப்பின் வலிமை, 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்துடன்' இணைக்கப்படும். அதாவது, இத்திட்டம் தொடங்கப்பட்டதன் மூலம், இது பீகார் முழுவதிலும், பீகாரின் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

நண்பர்களே,

"முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்" மத்திய அரசின் "லட்சாதிபதி சகோதரி" இயக்கத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. நாட்டில் 3 கோடி 'லட்சாதிபதி சகோதரிகளை' உருவாக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதுவரை 2 கோடிக்கும் அதிகமான சகோதரிகள் 'லட்சாதிபதி சகோதரிகளாக' மாறியுள்ளனர். நான் கிராமப்புறப் பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர்களது கடின உழைப்பால் கிராமங்கள் மாறியுள்ளன, சமூகம் மாறியுள்ளது, குடும்பத்தின் அந்தஸ்தும் உயர்ந்துள்ளது. பீகாரிலும் லட்சக்கணக்கான பெண்கள் 'லட்சாதிபதி சகோதரிகளாக' மாறியுள்ளனர். பீகாரின் இந்த 'இரட்டை எஞ்சின்' அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்க்கும்போது எனக்கு ஒரு வலுவான நம்பிக்கை பிறக்கிறது; இந்தியாவில் எங்கேனும் அதிகப்படியான 'லட்சாதிபதி சகோதரிகள்' இருப்பார்களேயானால், அந்தப் பெருமை எனது பீகாருக்கே கிடைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

தாய்மார்களே, சகோதரிகளே,

மத்திய அரசின் 'முத்ரா கடன் திட்டம்', 'ட்ரோன் சகோதரி இயக்கம்', 'காப்பீட்டுத் தோழி இயக்கம்' மற்றும் 'வங்கித் தோழி இயக்கம்' ஆகியவையும் உங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை அதிகரித்து வருகின்றன. எங்களது இலக்கு ஒன்றுதான், இன்று நாங்கள் ஒரே ஒரு இலக்கை நோக்கியே முன்னேறிச் செல்கிறோம் - உங்கள் கனவுகள் நனவாக வேண்டும், உங்கள் குடும்பத்தின் கனவுகளை நிறைவேற்ற உங்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் மனதில் வைத்திருக்கும் அந்த ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்பதே அது.

நண்பர்களே,

இன்று மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சியால், சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் புதிய துறைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்று நமது மகள்கள் ராணுவத்திலும் காவல்துறையிலும் பெருமளவில் இணைந்து வருகின்றனர்; இன்று நமது மகள்கள் போர் விமானங்களை இயக்குகிறார்கள் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் பெருமிதம் அளிக்கும் விஷயமாகும்.

நண்பர்களே,

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி இருந்த அந்த நாட்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது; அது 'மண்ணெண்ணெய் விளக்கு' ஆட்சி நிலவிய காலம். அக்காலத்தில், பீகாரைச் சேர்ந்த எனது தாய்மார்களும் சகோதரிகளும், இங்குள்ள பெண்களும் தான் அராஜகம் மற்றும் ஊழலால் அதிகம் பாதிக்கப்பட்டனர். பீகாரின் முக்கியச் சாலைகள் பாழடைந்து கிடந்த அந்த நாட்களில், பாலங்கள் ஏதும் இல்லாத நிலையில், அதனால் அதிகம் துயரப்பட்டது யார்? இதுபோன்ற இன்னல்கள் வரும்போது, முதலில் பாதிக்கப்படுவது நமது பெண்களும், தாய்மார்களும், சகோதரிகளும் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வெள்ளப்பெருக்கு காலங்களில் இந்தச் சூழல் எவ்வளவு மோசமடைந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. தீவிரமான உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து நீங்கள் மீண்டு வர எமது அரசு இரவும் பகலும் உழைத்துள்ளது. நீங்கள் இந்தப் பிரச்சினைகளிலிருந்து வெளிவர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்; இன்று பெருமளவிற்கு அதனை எங்களால் செய்ய முடிந்துள்ளது. பீகாரில் 'இரட்டை எஞ்சின்' அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சாலைகள் அமைக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இன்றும் பீகாரின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம், இதன் காரணமாகப் பீகார் பெண்களுக்குப் பெரும் வசதிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

தாய்மார்களே, சகோதரிகளே,

இந்த நாட்களில் பீகாரில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 30 வயதிற்குட்பட்ட தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இந்தக் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று நான் கண்டிப்பாகச் சொல்வேன். எனக்குச் சொல்லப்பட்டபடி, பழைய செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை நாம் வாசிக்கும்போது, 30 வயதிற்குட்பட்டவர்கள் அன்றைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை உணராமலே இருக்கலாம். ஆனால் முதியவர்கள் இதனை வாசிக்கும்போது அவர்களும் அதை உணர்வார்கள்; ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சியில் பீகாரில் நிலவிய அந்தப் பயங்கரமான அச்சம் அவர்களுக்கு இன்றும் நினைவிருக்கிறது. எந்த வீடும் பாதுகாப்பாக இல்லை. நக்சலைட் வன்முறையின் பயங்கரம் எங்கும் பரவியிருந்தது.

பெண்கள் தான் அந்த வலியை அதிகம் தாங்க வேண்டியிருந்தது. ஏழைகள் முதல் மருத்துவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடும்பங்கள் வரை எவருமே ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர்களின் அட்டூழியங்களிலிருந்து தப்பவில்லை.

நண்பர்களே,

இன்று நிதிஷ் அவர்களின் தலைமையில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் திரும்பியுள்ள நிலையில், எனது தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் மற்றும் பெண்கள் பெரும் நிம்மதியை உணர்ந்துள்ளனர். இன்று பீகாரின் மகள்கள் அச்சமின்றி வீடுகளை விட்டு வெளியே செல்கின்றனர். நான் இப்போதுதான் நான்கு சகோதரிகள் பேசியதைக் கேட்டேன். சகோதரி ரஞ்சிதா, சகோதரி ரீதா, நூர்ஜஹான் பானு மற்றும் நமது புடுல் தேவி ஆகியோர் எவ்வளவு நம்பிக்கையுடன் விஷயங்களைக் கூறினார்கள்! நிதிஷ் அவர்களின் அரசாங்கத்திற்கு முன்பு இது சாத்தியமே இல்லை. அவர்களால் நள்ளிரவு வரை எங்கும் வேலை செய்வது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்று. நான் பீகாருக்கு வரும்போதெல்லாம், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதைப் பார்த்து மிகுந்த திருப்தி அடைகிறேன். எனவே, பீகாரை மீண்டும் அந்த இருண்ட காலத்திற்கு ஒருபோதும் செல்ல விடமாட்டோம் என்று நாம் அனைவரும் இன்று ஒன்றிணைந்து உறுதி ஏற்க வேண்டும். தாய்மார்களே, சகோதரிகளே, எனது இந்த வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்; நமது குழந்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற இதுவே ஒரே வழி.

தாய்மார்களே, சகோதரிகளே,

ஒரு அரசாங்கம் பெண்களை மையமாக வைத்து ஒரு கொள்கையை உருவாக்கும்போது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவும், ஒட்டுமொத்த குடும்பமும் அதனால் பயனடைகிறது. உதாரணமாக, "புகையில்லா அடுப்புத் திட்டம்" மூலம் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இன்று உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் எரிவாயு இணைப்பு  பெறுவது என்பது ஒரு பெரிய கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது. நகரங்களிலும் இதே நிலைதான் நீடித்தது. எனது ஏழைத் தாய்மார்களும், சகோதரிகளும், மகள்களும் சமையலறையில் இருமிக்கொண்டே தங்கள் வாழ்நாளைக் கழித்தனர். நுரையீரல் நோய்கள் மற்றும் பார்வைக் குறைபாடு போன்றவை சாதாரணமாக இருந்தன. சில அறிஞர்கள் கூறுகையில், அடுப்புப் புகையில் நீண்ட நேரம் இருக்கும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், ஒரு நாளில் 400 சிகரெட்டுகளுக்கு இணையான புகையைச் சுவாசிப்பதாகக் குறிப்பிடுகின்றனர். அப்படியென்றால், புற்றுநோய் வராமல் வேறு என்ன வரும்? இவை அனைத்திலிருந்தும் உங்களைக் காப்பாற்றவே நாங்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் சமையல் எரிவாயு உருளைகளை வழங்கினோம். பீகாரில் எத்தனையோ சகோதரிகளின் வாழ்க்கை விறகு சுமப்பதிலேயே கழிந்தது. இன்னல்களும் குறைந்தபாடில்லை; மழை பெய்தால் ஈரமான விறகு எரியாது, வெள்ளம் வந்தால் விறகுகள் நீரில் மூழ்கிவிடும். எத்தனையோ முறை வீட்டின் குழந்தைகள் பசியுடன் உறங்கச் சென்றிருப்பார்கள் அல்லது பொரித்த அரிசியை உண்டு இரவைக் கழித்திருப்பார்கள்.

நண்பர்களே,

இந்த வலி எந்தப் புத்தகத்திலும் எழுதப்படவில்லை, இந்த வலியைப் பீகாரைச் சேர்ந்த நமது சகோதரிகள் அனுபவித்திருக்கிறார்கள்; எனது சகோதரிகள் ஒவ்வொருவரும் இந்தச் சோதனையைக் கடந்து வந்திருக்கிறார்கள். ஆனால், எப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்களை மையமாக வைத்துத் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியதோ, அப்போதே ஒட்டுமொத்த நிலையும் மாறத் தொடங்கியது. கோடிக்கணக்கான வீடுகளுக்கு ஒரே நேரத்தில் எரிவாயு இணைப்புகள் சென்றடைந்தன. இன்று கோடிக்கணக்கான சகோதரிகள் அமைதியான முறையில் எரிவாயு அடுப்பில் சமைக்கிறார்கள். அவர்கள் புகையிலிருந்து விடுதலை பெற்றுள்ளனர்; நுரையீரல் மற்றும் கண் நோய்களிலிருந்தும் அவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. இப்போது, வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடான உணவு கிடைக்கிறது. "புகையில்லா அடுப்புத் திட்ட" எரிவாயு இணைப்புகள் பீகாரின் சமையலறைகளை மட்டுமல்ல, பெண்களின் வாழ்வையே பிரகாசமாக்கியுள்ளன.

தாய்மார்களே, சகோதரிகளே,

உங்களது அனைத்துக் கவலைகளையும் போக்க வேண்டியது எங்களது பொறுப்பாகும். கொரோனா பெருந்தொற்றின் கடினமான காலக்கட்டத்தில் நாங்கள் "இலவச உணவு தானியத் திட்டத்தை" தொடங்கினோம். ஏனென்றால், எந்தக் குழந்தையும் இரவில் பசியோடு உறங்கக் கூடாது என்பதே எனது ஒரே இலக்காக இருந்தது. இந்தத் திட்டம் உங்களுக்குப் பெரிதும் உதவியதால், அதைத் தொடர்ந்து செயல்படுத்த நாங்கள் முடிவு செய்தோம். இன்றும், "பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம்" செயல்பாட்டில் உள்ளது; இத்திட்டத்தின் மூலம் பீகாரைச் சேர்ந்த எட்டரை கோடிக்கும் அதிகமான ஏழை எளிய மக்கள் இலவசமாக உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டம் உங்களது கவலைகளைப் பெருமளவு குறைத்துள்ளது. இதற்கு இன்னுமொரு உதாரணத்தைச் சொல்கிறேன். பீகாரின் பெரும்பான்மையான பகுதிகளில் 'புழுங்கல் அரிசி' தான் விரும்பி உண்ணப்படுகிறது. இருப்பினும், முன்பு நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் ரேசன் கடைகளில் 'பச்சரிசி' மட்டுமே வழங்கப்பட்டது. வேறு வழியின்றி, தாய்மார்களும் சகோதரிகளும் அதே பச்சரிசியைச் சந்தையில் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாகப் புழுங்கல் அரிசியை வாங்கிச் சென்றனர். ஆனால் அங்கு நடந்த நேர்மையற்ற செயலைப் பாருங்கள். 20 கிலோ பச்சரிசிக்கு ஈடாக வெறும் 10 கிலோ புழுங்கல் அரிசி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பிரச்சினையையும் நாங்கள் தீவிரமாகப் பரிசீலித்தோம். இப்போது அரசாங்கமே ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசியை வழங்கத் தொடங்கியுள்ளது.

தாய்மார்களே, சகோதரிகளே,

நம் நாட்டில் பெண்களுக்கு எனச் சொத்துக்கள் இருக்கும் மரபு இருந்ததில்லை. வீடு, கடை, நிலம், கார், ஸ்கூட்டர் என அனைத்தும் ஆண்களின் பெயரிலேயே இருந்து வந்தன. ஆனால், நான் "பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தைத்" தொடங்கியபோது, ஒரு விதியைக் கொண்டு வந்தேன்; அதன்படி, இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களும் உரிமையாளர்களாக இருப்பார்கள். இன்று பீகாரில் 50 இலட்சத்திற்கும் அதிகமான 'பிரதமர் வீடுகள்' கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பெண்களுக்குச் சொந்தமானவை. இன்று நீங்கள் உங்கள் வீட்டின் உண்மையான உரிமையாளர்களாக இருக்கிறீர்கள்.

நண்பர்களே,

ஒரு சகோதரியின் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெண்கள் தங்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், அதனைத் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் சகித்துக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. காய்ச்சலோ அல்லது வயிற்று வலியோ, எவ்வளவு கடினமான சூழலிலும் அவர்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தார்கள். ஏனென்றால், தங்கள் சிகிச்சைக்காக வீட்டுப் பணம் செலவழிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. தன் பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தாய்மார்களும் சகோதரிகளும் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டார்கள்.

உங்களது இந்த நீண்ட காலக் கவலையை உங்கள் மகன் "மகளுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்" மூலம் தீர்த்து வைத்துள்ளான். இன்று பீகாரைச் சேர்ந்த  லட்சக்கணக்கான பெண்கள் 5 இலட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். அதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், உதவித் தொகை நேரடியாகத் தாய்மார்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்கிறது. அந்த 9 மாத காலக்கட்டத்தில் அவர்களுக்குச் சத்தான உணவு கிடைக்க வேண்டும், கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும், பிரசவத்தின் போது எந்தச் சிக்கலும் ஏற்படாமல் தாய் மற்றும் குழந்தையின் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

தாய்மார்களே, சகோதரிகளே,

உங்களது ஆரோக்கியமே எங்களது முன்னுரிமை. பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் 17-ம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி அன்று ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கினோம். அதுதான் "ஆரோக்கியமான பெண், வலுவான குடும்பம் இயக்கம்". இந்த இயக்கத்தின் கீழ் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 4.25 லட்சத்திற்கும் அதிகமான சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கான பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த இயக்கத்தில் இணைந்து தங்களை இலவசமாகப் பரிசோதித்துக் கொண்டுள்ளனர். இன்று நான் பீகார் பெண்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், கண்டிப்பாக இந்த முகாம்களுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பரிசோதனை செய்யக் கூடாது என்று சிலர் தவறான எண்ணத்தில் உள்ளனர். ஒரு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது நன்மையே தவிர, தீங்கல்ல. எனவே, பரிசோதனைகளை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

இது பண்டிகைக் காலம்; இப்போது நவராத்திரி நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி வரப்போகிறது, சத் பூஜையும் வெகுதொலைவில் இல்லை. நமது சகோதரிகள் தங்கள் வீட்டுச் செலவுகளை எவ்வாறு சமாளிப்பது, பணத்தை எவ்வாறு சேமிப்பது என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். உங்களது இந்தக் கவலைகளைப் போக்குவதற்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இனி, பற்பசை, சோப்பு, ஷாம்பூ, நெய் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் முன்பை விட மலிவான விலையில் கிடைக்கும். குழந்தைகளின் படிப்புக்கான எழுதுபொருட்கள், பண்டிகைகளின் போது அணியும் உடைகள் மற்றும் காலணிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தையும் சமையலறை வரவு-செலவையும் நிர்வகிக்கும் பெண்களுக்கு இது ஒரு பெரிய நிம்மதியாகும். சகோதரிகளின் சுமையைக் குறைத்து, அவர்கள் முகத்தில் பண்டிகை கால மகிழ்ச்சியைக் கொண்டு வருவதைத் தனது பொறுப்பாக இந்த 'இரட்டை எஞ்சின்' அரசு கருதுகிறது.

நண்பர்களே,

பீகார் பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அப்போதெல்லாம் அவர்கள் தங்களது துணிச்சலாலும் மன உறுதியினாலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். பெண்கள் முன்னேறும்போது ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுகிறது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். "முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக" மீண்டும் ஒருமுறை பீகார் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.

 

 

குறிப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் ஆற்றப்பட்டது.

-----

(வெளியீட்டு எண் :2171677)

 


(வெளியீட்டு அடையாள எண்: 2250481) வருகையாளர் எண்ணிக்கை : 16