பிரதமர் அலுவலகம்
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:
இடுகை இடப்பட்ட நாள்:
17 DEC 2025 3:08PM by PIB Chennai
மேன்மைதங்கிய எத்தியோப்பியப் பிரதமர் அவர்களே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கவுரவமிக்க சபாநாயகர்களே, மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, மேன்மை தங்கியவர்களே, மற்றும் எனது அன்பிற்குரிய எத்தியோப்பிய சகோதர சகோதரிகளே,
இன்று உங்கள் முன்னால் நிற்பதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். சிங்கங்களின் தேசமான இந்த எத்தியோப்பியாவில் இருப்பது மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நான் எனது சொந்த வீட்டில் இருப்பதைப் போன்றே உணர்கிறேன். ஏனெனில், இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் தாயகமாகும்.
பண்டைய ஞானத்தையும் நவீன விருப்பங்களையும் கொண்ட ஒரு தேசத்தின் இதயப்பகுதியில், இந்த ஜனநாயகக் கோவிலில் இருப்பதைக் கவுரவமாக நினைக்கிறேன். உங்கள் நாடாளுமன்றம், உங்கள் மக்கள் மற்றும் உங்கள் ஜனநாயகப் பயணத்தின் மீதான ஆழ்ந்த மரியாதையுடன் நான் உங்களிடம் வந்துள்ளேன். இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பாக நட்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவத்தின் வாழ்த்துகளை நான் கொண்டு வந்துள்ளேன்.
தேனா இஸ்தீல்லீன் (Tena Yistilign) சலாம் (உங்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கட்டும்")
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
இந்த மகத்தான கட்டிடத்தில்தான் உங்கள் சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இங்கே மக்களின் விருப்பம், அரசின் விருப்பமாக மாறுகிறது. எப்போது அரசின் விருப்பமானது மக்களின் விருப்பத்தோடு இணக்கமாக இருக்கிறதோ, அப்போது முன்னேற்றத்தின் சக்கரம் நம்பிக்கையுடனும் நோக்கத்துடனும் முன்னோக்கிச் செல்கிறது.
உங்கள் மூலமாக, நான் வயல்வெளிகளில் இருக்கும் உங்கள் விவசாயிகளிடமும், புதிய சிந்தனைகளை உருவாக்கி வரும் தொழில்முனைவோரிடமும், சமூகங்களையும் நிறுவனங்களையும் வழிநடத்திச் செல்லும் பெருமைக்குரிய பெண்களிடமும், மற்றும் எதிர்காலத்தைச் செதுக்கிக் கொண்டிருக்கும் எத்தியோப்பிய இளைஞர்களிடமும் பேசுகிறேன். இந்தப் பெரும் பாக்கியத்திற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
நேற்று, எனது அன்பிற்குரிய நண்பர் பிரதமர் டாக்டர் அபிய் அகமது அவர்களிடமிருந்து எத்தியோப்பியாவின் உயரிய கவுரவமான 'நிஷான் ஆஃப் எத்தியோப்பியா' (Nishan of Ethiopia) விருதினைப் பெற்றதில் நான் பெருமையடைகிறேன். இந்திய மக்களின் சார்பாக இந்த விருதினைப் பணிவுடனும், கரம்கூப்பியும் ஏற்றுக் கொள்கிறேன்.
ஆம் சக்னாலோ (Ameseginalehu)
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
மனித வரலாற்றின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக எத்தியோப்பியா திகழ்கிறது. இங்கே வரலாறு மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும், எத்தியோப்பிய மக்களின் இதயங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்று எத்தியோப்பியா நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதன் வேர்கள் மிக ஆழமானவை என்பதே காரணமாகும். எத்தியோப்பியாவில் நிற்பது என்பது, கடந்த காலம் மதிக்கப்படும், நிகழ்காலம் நோக்கம் நிறைந்ததாக இருக்கும் மற்றும் எதிர்காலம் திறந்த மனதுடன் வரவேற்கப்படும் ஒரு இடத்தில் நிற்பதாகும்.
பழமையும் புதுமையும் கலந்த இந்தச் சங்கமம்... பண்டைய ஞானத்திற்கும் நவீன இலட்சியங்களுக்கும் இடையிலான இந்தச் சமநிலை... இதுவே எத்தியோப்பியாவின் உண்மையான பலமாகும்.
இந்த 'மெடெமர்' (Medemer) அல்லது ஒருங்கிணைந்த செயல்பாடு எனும் உணர்வு இந்தியர்களாகிய எங்களுக்கு மிகவும் பரிச்சயமானது. 'லாலிபெலா'வின் (Lalibela) ஒற்றைக்கல் தேவாலயங்களைப் போலவே, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள பழமையான குடைவரை கோயில்களும் கல்லில் வடிக்கப்பட்டவையாகும். நாங்களும் ஒரு பழமையான நாகரிகம், வருங்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடுகிறோம்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற முழக்கத்துடன், அதாவது, அனைவருடன் இணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக, அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சியுடன் முன்னேறுகிறோம். நமது தாய்நாட்டின் மீதான நமது உணர்வுகள், நமது பகிரப்பட்ட கண்ணோட்டங்களையும் பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டுமே நமது நிலத்தைத் தாயாகக் குறிப்பிடுகின்றன. அவை நமது பாரம்பரியம், கலாச்சாரம், இயற்கை அழகு ஆகியவற்றில் பெருமிதம் கொள்ளவும், தாய்நாட்டைப் பாதுகாக்கவும் நம்மைத் தூண்டுகின்றன.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
நமது மனித இனத்தின் ஆரம்பகால கால்தடங்கள் சிலவற்றை எத்தியோப்பியாவில்தான் அறிவியல் கண்டறிந்துள்ளது. உலகம் 'லூசி' (Lucy) பற்றி, 'தின்கினேஷ்' (Dinkinesh) பற்றிப் பேசும்போது, அவர்கள் ஒரு படிமத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. அவர்கள் ஒரு தொடக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். நாம் அடிஸ் அபாபாவில் வாழ்ந்தாலும் அல்லது அயோத்தியில் வாழ்ந்தாலும், அந்தத் தொடக்கம் நம் அனைவருக்கும் பொதுவானது.
இந்தியாவில் நாம் 'வசுதைவ குடும்பகம்' என்று கூறுகிறோம், அதாவது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' - இவ்வுலகமே ஒரு குடும்பம். அரசியல், எல்லைகள் மற்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நாம் ஒரு பொதுவான மூலத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. நமது தொடக்கம் ஒன்றாக இருக்கும்போது, நமது இலக்கும் (விதியும்) ஒன்றாகவே இருக்க வேண்டும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
இந்தியா மற்றும் எத்தியோப்பியா நாடுகள் காலநிலையிலும், அதேபோல் மனப்பாங்கிலும் நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நமது முன்னோர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். இந்தியப் பெருங்கடல் வழியாக வணிகர்கள் வாசனைப் பொருட்கள், பருத்தி, காபி மற்றும் தங்கத்துடன் பயணம் செய்தனர். ஆனால், அவர்கள் பொருட்களை விட மேலானவற்றை வர்த்தகம் செய்தனர். அவர்கள் கருத்துக்கள், கதைகள் மற்றும் வாழ்க்கை முறைகளை பரிமாறிக் கொண்டனர். 'அதூலிஸ்' (Adulis) மற்றும் 'தோலேரா' (Dholera) போன்ற துறைமுகங்கள் வெறும் வணிக மையங்கள் மட்டுமல்ல; அவை நாகரிகங்களுக்கு இடையிலான பாலங்களாக இருந்தன.
நவீன காலத்தில், நமது உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது. 1941-ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர். இந்தியா சுதந்திரம் அடைந்த உடனேயே நமது அதிகாரபூர்வமான தூதரக உறவுகள் தொடங்கின.
ஆனால் தூதரகங்கள் அமைக்கப்படுவதற்கு முன்பே, நமது மக்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கிவிட்டனர். ஆயிரக்கணக்கான இந்திய ஆசிரியர்கள் எத்தியோப்பியாவுக்கு வந்தனர். அவர்கள் அடிஸ் அபாபா, திரே தாவா, பாஹிர் தார் முதல் மெக்கல்லே வரை அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்குக் கற்பித்தனர். அவர்கள் எத்தியோப்பியப் பள்ளிகளைச் சென்றடைந்ததோடு, எத்தியோப்பியர்களின் இதயங்களிலும் இடம்பிடித்தனர். இன்றும் கூட, பல எத்தியோப்பியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைச் செதுக்கிய இந்திய ஆசிரியர்களைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள்.
இந்திய ஆசிரியர்கள் இங்கே வந்ததைப் போலவே, எத்தியோப்பிய மாணவர்களும் அறிவு மற்றும் நட்பைத் தேடி இந்தியாவுக்குப் பயணம் செய்தனர். அவர்கள் மாணவர்களாக இந்தியாவுக்குச் சென்று, நவீன எத்தியோப்பியாவை உருவாக்குபவர்களாகத் தாயகம் திரும்பினர். அவர்களில் சிலர் இப்போது இந்த நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது! கவுரவமிக்க சபாநாயகர் தாகேசே சாஃபோ (Tagesse Chafo) அவர்களும் அவர்களில் ஒருவர்.
மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதிலும் அவர்கள் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஏனெனில் அவர்கள் எத்தியோப்பிய உணவுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் நாங்களும் ராகி மற்றும் கம்பு போன்ற "ஸ்ரீ அன்னம்" (சிறுதானியங்கள்) உணவுகளை விரும்பி உண்கிறோம். எனவே, எத்தியோப்பியாவின் 'டெஃப்' (Teff) தானியத்தின் சுவை எங்களுக்கு மிகவும் இதமானதாக இருக்கிறது. மேலும், நாங்கள் இந்திய 'தாலி' (Thali) உணவை ரசித்து உண்பதால், எத்தியோப்பியாவின் 'பேயா-நைதூ' (Beyaynetu) உணவும் எங்களுக்கு மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றுகிறது.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
தற்போது, எத்தியோப்பியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களும் முன்னணியில் உள்ளன. ஜவுளி, உற்பத்தி, விவசாயம், சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் அவை 5 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளைச் செய்துள்ளன. மேலும், அவை 75 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இருப்பினும், நமது கூட்டாண்மை இன்னும் அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்வோம் என்று நான் நம்புகிறேன். அதனால்தான், பிரதமர் டாக்டர் அபிய் அகமது அவர்களும் நானும் நேற்று ஒரு பெரிய முன்னெடுப்பை மேற்கொண்டோம். நமது இருதரப்பு உறவை ஒரு ‘உத்திசார் கூட்டாண்மை' (Strategic Partnership) நிலைக்கு உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது தொழில்நுட்பம், புத்தாக்கம், சுரங்கத் தொழில், நிலைத்தன்மை மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் மூலம் நமது பொருளாதாரங்களின் ஆற்றலை வெளிப்படுத்தும். இது உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் மூலம் நமது மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உதவும். அத்துடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பையும், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஒத்துழைப்பையும் நாங்கள் மேம்படுத்துவோம்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
வளர்ந்து வரும் நாடுகள் என்ற முறையில், நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும், ஒருவருக்கொருவர் வழங்கவும் நிறைய விஷயங்கள் உள்ளன. விவசாயம் நமது இரு நாடுகளின் முதுகெலும்பாக உள்ளது. அது நமது மக்களுக்கு உணவளிக்கிறது; நமது விவசாயிகளை வாழவைக்கிறது; பாரம்பரியத்தை நவீன புத்தாக்கத்துடன் இணைக்கிறது. மேம்பட்ட விதைகள், நீர்ப்பாசன முறைகள் மற்றும் மண்-ஆரோக்கிய தொழில்நுட்பங்களை உருவாக்க நாம் இணைந்து செயல்படலாம்.
காலநிலை மாற்றம் மழைப்பொழிவு மற்றும் பயிர் சுழற்சிகளைப் பாதிக்கும் இந்தச் சூழலில், காலநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாய முறைகளில் நாம் அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம். பால் பண்ணை முதல் பண்ணை இயந்திரமயமாக்கல் வரை, சிறுதானிய ஆராய்ச்சி முதல் உணவு பதப்படுத்துதல் வரை, நாம் இணைந்து நமது விவசாயிகள் செழிக்க உதவ முடியும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
இந்தியாவில், நாங்கள் ஒரு வலுவான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை (Digital Public Infrastructure) உருவாக்கியுள்ளோம். இது நாங்கள் சேவைகளை வழங்கும் விதத்தையும், மக்கள் அவற்றை அணுகும் முறையையும் மாற்றியமைத்துள்ளது. இன்று, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் பணம் செலுத்து வதற்கும், அடையாளச் சான்றுகளுக்கும் மற்றும் அரசு சேவைகளுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் பாதியளவுக்கும் மேலானவை இப்போது இந்தியாவில் நடைபெறுகின்றன.
கசிவுகளோ அல்லது ஊழலோ இன்றி, 500 பில்லியன் டாலர்களுக்கும் அதிக மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் கோடிக்கணக்கான பயனாளிகளின் வங்கித் கணக்குகளுக்கு நேரடியாகச் சென்றடைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் நிதி உதவியைப் பெறுகிறார்கள்.
நீங்கள் 'டிஜிட்டல் எத்தியோப்பியா 2025' (Digital Ethiopia 2025) வியூகத்தை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், எங்கள் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் எத்தியோப்பியாவுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும், உங்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கான 'தரவு மையத்தை' (Data Centre) உருவாக்க நம்பகமான கூட்டாளராக இந்தியாவை நீங்கள் தேர்ந்தெடுத்ததை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
இந்தியா 'உலகின் மருந்தகம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த உலகமும் கவலையில் இருந்தது. அது மிகவும் கடினமான காலம். வரையறுக்கப்பட்ட வளங்கள் இருந்தபோதிலும், மற்றவர்களுக்கு உதவ சாத்தியமான அனைத்தையும் செய்வதை மனிதகுலத்திற்கான எங்களது புனிதமான கடமையாக நாங்கள் கருதினோம்.
இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அனுப்பியது. எத்தியோப்பியாவுக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்கியது இந்தியாவின் பெருமைக்குரிய பாக்கியமாகும். எத்தியோப்பியாவின் பெருமைக்குரிய மகனும், இந்தியாவில் 'துளசி பாய்' என்று அழைக்கப்படுபவருமான டாக்டர் டெட்ரோஸ் தலைமையிலான உலக சுகாதார நிறுவனத்துடன் (W.H.O) இணைந்து இதனைச் செய்தது எங்களது நல்வாய்ப்பாகும்.
மருந்துப் பொருட்கள் முதல் மருத்துவமனைகள் வரையிலும், பாரம்பரிய மருத்துவம் முதல் தொலைநிலை மருத்துவம் வரையிலும் நமது சுகாதாரக் கூட்டுறவு வளர்ந்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மருத்துவமனைகளில் புதிய உபகரணங்களை வழங்குவது முதல் சுகாதாரப் பணியாளர்களின் திறன் மேம்பாடு வரை, நமது சுகாதாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலின் இதயப்பகுதியில் நிற்கிறது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இணைப்பில் நாம் இயற்கையான கூட்டாளிகள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் பரஸ்பர பாதுகாப்பிற்கான நமது அர்ப்பணிப்பு வலுவடைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது. இதில் இணைய பாதுகாப்பு, பாதுகாப்புத் தொழில்கள், கூட்டு ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிலான ஒத்துழைப்புகளும் அடங்கும்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எத்தியோப்பியா காட்டிய ஒற்றுமைக்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை அன்புடன் வரவேற்றதற்கும், பயங்கரவாதத்திற்கு எதிராக 'துளியும் சகிப்புத்தன்மை அற்ற' கொள்கையை உறுதிப்படுத்தியதற்கும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள் என்ற முறையில், ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்பதையும், அது ஒரு பயணம் என்பதையும் நாம் இருவரும் புரிந்து கொண்டுள்ளோம். இது சில நேரங்களில் விவாதங்களாலும், சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளாலும் வடிவமைக்கப்படுகிறது; ஆனால் எப்போதும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் விருப்பத்தின் மீதான நம்பிக்கையாலேயே வழிநடத்தப்படுகிறது.
நமது இரு நாடுகளின் அரசியலமைப்புகளும் இந்த உணர்வை பிரதிபலிக்கின்றன. இந்தியாவின் அரசியலமைப்பு "இந்திய மக்களாகிய நாம்" (We, the People of India) என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. எத்தியோப்பியாவின் அரசியலமைப்பு "எத்தியோப்பியாவின் தேசங்கள், தேசிய இனங்கள் மற்றும் மக்களாகிய நாம்" (We, the Nations, Nationalities and Peoples of Ethiopia) என்று தொடங்குகிறது. அவற்றின் செய்தி ஒன்றுதான்: நமது விதி நமது கைகளில் உள்ளது.
இன்று காலை, 'அட்வா வெற்றி நினைவுச் சின்னத்தில்' (Adwa Victory Monument) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் கவுரவம் எனக்குக் கிடைத்தது. கண்ணியம் மற்றும் சுதந்திரத்திற்கான தேடலில், எத்தியோப்பியாவின் வெற்றி ஒட்டுமொத்த காலனித்துவ உலகிற்கும் எவ்வாறு ஊக்கமளித்தது என்பதற்கு இந்த நினைவுச்சின்னம் ஒரு காலத்தை வென்ற நினைவூட்டலாகும். மோதல்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில், 'குளோபல் சவுத்' எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் தமக்காக எழுந்து நிற்க முடியும் என்பதற்கும் இது ஒரு நினைவூட்டலாகும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
மகாத்மா காந்தி நமக்கு 'அறங்காவலர்' என்ற கருத்தை வழங்கினார். இந்த அழகான கோளையும் அதன் வளங்களையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது. மாறாக, நாம் அவற்றைப் பாதுகாத்து நமது குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டிய அறங்காவலர்கள் ஆவோம். இந்தியாவின் "ஏக் பேட் மா கே நாம்" (தாயின் பெயரில் ஒரு மரக்கன்று) முன்முயற்சியை வழிநடத்தும் அதே அறங்காவலர் உணர்வுதான், எத்தியோப்பியாவின் 'பசுமை மரபு முன்முயற்சியிலும்' பிரதிபலிக்கிறது.
தாய் பூமியைப் பாதுகாப்பதில் நமது இரு நாடுகளும் நம்பிக்கை கொண்டுள்ளன. இயற்கைக்குத் திரும்பக் கொடுப்பதில் இருவருமே நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் இணைந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளில் பணியாற்றுவோம். பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு மற்றும் உயிரி எரிபொருட்களில் நாம் இணைந்து செயல்படுவோம். காலநிலை நீதிக்கு ஆதரவாக வலுவான குரலை எழுப்புவோம். 2027-ல் நடைபெறவுள்ள COP-32 மாநாட்டில், வளர்ந்து வரும் நாடுகளுக்காக ஒரு சக்திவாய்ந்த குரலை எழுப்ப எத்தியோப்பியா எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் இந்தியா மகிழ்ச்சியடையும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
எத்தியோப்பியாவில் ஒரு பழமொழி உண்டு என்று எனக்குச் சொல்லப்பட்டது, "சிலந்தி வலைகள் ஒன்றிணைந்தால், அவை ஒரு சிங்கத்தையே கட்டிப்போட்டுவிடும்." இந்தியாவிலும் நாம் அவ்வாறே நம்புகிறோம், "மனங்கள் ஒன்றிணைந்தால் மலைகளும் வழிவிடும்."
நிச்சயமாக, ஒருமைப்பாடே பலம், ஒத்துழைப்பே சக்தி. இன்று, வளர்ந்து வரும் நாடுகளாக, பழமையான நாகரிகங்களாக, நண்பர்களாக, இந்தியா மற்றும் எத்தியோப்பியாவும் இணைந்து நிற்கின்றன. ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம். மேலும் நீதியான, சமத்துவமான மற்றும் அமைதியான உலகத்திற்காக நாம் உழைக்கிறோம்.
ஆப்பிரிக்க ஒற்றுமை குறித்த கனவுகள், இந்த 'அடிஸ் அபாபா'வில்தான் தமக்கான இல்லத்தைக் கண்டறிந்தன. இந்த அற்புதமான நகரத்தின் பல தெருக்களுக்கு ஆப்பிரிக்க நாடுகளின் பெயர்களே சூட்டப்பட்டிருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது!
இந்தியப் பெருங்கடலின் மறுபுறம், புது தில்லியில் நடைபெற்ற ஜி20 (G20) மாநாட்டில், ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஒரு நிரந்தர உறுப்பினராக வரவேற்பதில் இந்தியா பெருமையடைந்தது. கடந்த ஆண்டு, பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் எத்தியோப்பியா ஒரு முழுநேர உறுப்பினராக இணைக்கப்பட்டதன் மூலம் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அடி எடுத்து வைக்கப்பட்டது.
உண்மையில், எனது அரசாங்கத்தின் கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான தொடர்பு பல மடங்கு வளர்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில், நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்கள் மட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
வளர்ந்து வரும் நாடுகள் இன்று தனது விதியைத் தானே எழுதிக்கொண்டிருக்கின்றன. இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளும் இதற்கான ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது தொலைநோக்குப் பார்வை என்பது, வளர்ந்து வரும் நாடுகள் யாருக்கும் எதிராக அல்லாமல், அனைவருக்குமான வளர்ச்சிக்காக எழுச்சி பெறுவதாகும்.
வளர்ச்சி என்பது நியாயமானதாக, தொழில்நுட்பம் எளிதில் அணுகக்கூடியதாக, மற்றும் இறையாண்மை மதிக்கப்படக்கூடியதாக இருக்கும் ஒரு உலகமே நமது இலக்கு. செழிப்பு என்பது அனைவராலும் பகிரப்படக்கூடியதாகவும், அமைதி என்பது பாதுகாக்கப்படக்கூடியதாகவும் இருக்கும் ஒரு உலகம். மேலும், முடிவெடுக்கும் அதிகாரங்கள் 1945-ம் ஆண்டின் பழைய உலகத்தை பிரதிபலிக்காமல், இன்றைய எதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஒரு உலகத்தை நாம் விரும்புகிறோம். ஏனெனில், உலகளாவிய அமைப்புகள் கடந்த காலத்திலேயே முடங்கிக்கிடந்தால் உலகத்தால் முன்னோக்கிச் செல்ல முடியாது.
அதனால்தான், இந்தியா ஒரு 'உலகளாவிய வளர்ச்சிக் கூட்டமைப்பை' (Global Development Compact) வலியுறுத்தியுள்ளது. இது தொழில்நுட்பப் பகிர்வு, மலிவான நிதி உதவி, திறன் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வர்த்தகம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும். அதனால்தான், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில், பத்து லட்சம் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக "ஆப்பிரிக்கத் திறன் பெருக்க முன்னெடுப்பை" (Africa Skills Multiplier Initiative) நான் முன்மொழிந்தேன். இது உள்ளூர் திறன்களை மேம்படுத்தும் மற்றும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய உங்கள் முயற்சிகளுக்கு உதவும்.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
தேநீருடனான எனது தனிப்பட்ட தொடர்பு உலகறிந்ததே. ஆனால், எத்தியோப்பியாவுக்கு வந்துவிட்டு காபியைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது! உலகிற்கு நீங்கள் வழங்கிய மிகச்சிறந்த பரிசுகளில் அதுவும் ஒன்று!
எத்தியோப்பியாவின் காபி விருந்து நிகழ்வில் (Coffee Ceremony), மக்கள் ஒன்றாக அமர்கிறார்கள், காலம் மெதுவாக நகர்கிறது, நட்பு ஆழமடைகிறது. இந்தியாவிலும் கூட, ஒரு கோப்பைத் தேநீர் என்பது பேசுவதற்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இணைவதற்கும் விடுக்கப்படும் அழைப்பாகும். எத்தியோப்பியக் காபியைப் போலவும், இந்தியத் தேநீரைப் போலவும் நமது நட்பும் முன்பை விட இப்போது வலுவாக உருவாகிக்கொண்டிருக்கிறது!
இன்று, உங்கள் முன்னால் எனது சகோதர சகோதரிகளுக்கு இடையே, மிகுந்த நன்றியுணர்வோடும், எதிர்காலத்தைப் பற்றிய பிரகாசமான நம்பிக்கைகளுடனும் நான் நிற்கிறேன். எதிர்காலம் நம்மை அழைக்கிறது. அதனை எதிர்கொள்ள இந்தியாவும் எத்தியோப்பியாவும் தயாராக உள்ளன.
மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,
எனது உரையை நிறைவு செய்யும் வேளையில், நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் - நாம் சமமானவர்களாக ஒன்றிணைந்து நடப்போம். நாம் கூட்டாளிகளாக இணைந்து கட்டமைப்போம். மேலும், நாம் நண்பர்களாக இணைந்து வெற்றி பெறுவோம்.
இந்த நாடாளுமன்றத்தில் உரையாற்றும் கவுரவத்தை எனக்கு வழங்கியமைக்கு நன்றி.
உங்கள் நட்பிற்கு நன்றி.
உங்கள் நம்பிக்கைக்கு நன்றி.
தப்பாரகு தேனா ஹுன்னு ஆம் சக்னாலோ
நன்றி.
***
(Release ID 2205184)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2249616)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam